வெடி வெடிக்காத தீபாவளி மன்னார்குடிகாரரின் பால்ய தீபாவளி அனுபவம்...

தீபாவளிக்கு விடிய விடிய வெடி வெடித்த காலமெல்லாம் உண்டு இப்போது 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க அரசு அனுமதித்துள்ளது. பால்ய காலத்தில் தீபாவளி கொண்டாட்டம் பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார் மன்னார்

Subscribe to Oneindia Tamil

மன்னார்குடி: தீபாவளி கொண்டாட்டம் இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து சொல்வதுடன் முடிந்து விடுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் இது மிகப்பெரிய கொண்டாட்டம். எப்போது தீபாவளி வரும் காத்திருந்து புது டிரஸ் எடுத்து பட்டாசு வாங்கி பாதுகாத்து வைத்து அம்மா சுட்டு அடுக்கி வைத்த பலகாரத்தை அடுப்பங்கரையில் போய் டேஸ்ட் பார்த்த பொன்னான காலம் அது. அந்த கால தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருந்தது என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார் மன்னார்குடிக்காரர் பொம்மையா முருகன்.

எங்க ஊர் மன்னார்குடி... தீபாவளி எங்களைப்போன்ற ஸ்கூல் பசங்களுக்கு ஒரு மாசத்துக்கு முன்னவே வந்துடும். அதாவது ஐப்பசி அமாவாசை தீபாவளின்னா புரட்டாசி அமாவசைக்கே எங்க ஊர் கடைத்தெரு ராமையாபிள்ளை இரும்பு கடையிலும் பந்தலடி சைக்கிள் ஸ்பேர்ஸ் விக்கிற ஒரு கடையிலும் வெடிகளை பெரிய அளவுல டிஸ்ப்ளே பண்ணி அந்த வருஷ தீபாவளி சேல்ஸ ஓப்பன் பண்ணிடுவாங்க...

Deepavali 2020: Childhood Deepavali experience

அப்படி அவங்க விற்பனைய ஆரம்பிக்கிற அதே நாள்ல எங்களோட விரதமும் ஸ்டார்ட் ஆகிடும், அதாவது வீட்ல தினமும் வாங்கி திங்க குடுக்குற 10 காச இந்த விரத நாட்கள்ல தேன்மிட்டாய் கடலைமிட்டாய்ன்னு வாங்கி தின்னுட மாட்டோம் வெடி வாங்க சேத்து வைக்க ஆரம்பிப்போம்.

அப்புறம் இப்படி சேத்து வைக்கிற பத்து பத்து பைசாவெல்லாம் பத்தாது அதுக்காக எக்ஸ்ட்ராவா சில காரியங்கள பண்ணுவோம் எங்க தெரு மளிகைக்கடை ஓனரு சண்முகம் அவரோட சின்ன சின்ன கொள்முதலுக்கு எங்கள யூஸ் பண்ணிப்பாரு அவர் கேக்குற சாமன்கள வாங்கி கொண்டுவந்து கொடுத்தா கை நிறைய பொட்டுக்கடலையும் கொஞ்சம் வெல்லமும் கொடுப்பாரு.

இந்த தீபாவளி சமயத்தில அந்த பொட்டுக்கடலை வெல்லம் காம்போ வேணாம் அதுக்கு பதிலா காசா கொடுத்துடுன்னு பத்து பைசா இருபது பைசான்னு லோடுக்கு தகுந்த படி வாங்கிபோம் அப்புறம் ஸ்கூல் விட்ட உடனே தெரு தெருவா பொறுக்க போவோம்... அவசரப்படாதீங்க அதாவது ஒவ்வொரு மூத்திர சந்து,சாக்கட சந்து நாராச சந்து என எல்லா எடத்துலயும் ஃபியூஷ் போன பல்ப் இருக்கான்னு தேடி எடுத்து அதுல இருக்கிற அலுமினிய பார்ட்ட மட்டும் தனியா எடுத்துடுத்து சேத்து வைப்போம்.

அனேகமா ஃபியூஷ் போன பல்ப் அவ்வளவா கிடைக்காது ஏன்னா நம்மள மாதிரியே தொழில் அதிபர்கள் அப்ப நிறைய சுத்துவாங்க அப்புறம் அந்த சமயத்துல பாமணி ஆத்துல வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அங்க படித்துரைல குறைஞ்சது பத்து பண்ணண்டு படியாவது மூழ்கியிருக்கும் அந்த படித்துரையிலும் குளிக்கிற சாக்குல சும்மா துழாவுவோம் அப்ப உடஞ்ச வளையல் ,ஹேர்பின் இதோட அதிர்ஷ்ட வசமா சில சமயம் அஞ்சு பைசா பத்து பைசா கிடைக்கும் அதையும் எடுத்து சேத்து வச்சிப்போம்.

அப்புறம் மீன் டைம்ல வர்ற ஆயுத பூஜை... ஆயுதபூஜைக்கு அவல் பொரி வாங்க சைக்கிளுக்கு காகிதப்பூ வாங்க அப்பா என்ன நம்பி காசு கொடுப்பாரு அப்பாவோட நம்பிக்கைய கெடுக்காம ஆயுதபூஜை கொள்முதல்ல ஒரு ரூபா மட்டும் சூடுவச்சி தேத்திப்போம்...
இப்படி எல்லாத்தையும் சேத்து வச்சி என்னும் போது ஏழு இல்ல எட்டு ரூபா தேறும் இதுவும் பத்தாம கூட படிக்கிற தீபாவளி கொண்டாடாத பாய் பிரண்டுங்க கிட்ட தாஜா பண்ணி 50 பைசா வரைக்கும் கடன் வாங்குவோம்.

Deepavali 2020: Childhood Deepavali experience

இதுக்கு இடையில அப்பாட்ட பட்டாசு வாங்க காசு கேட்டு நச்சரிக்க ஆரம்பிப்போம் அவரும் தீபாவளிக்கு ஒருவாரம் இருக்கும் போது வெறும் வெடிக்கிற வெடியா வாங்கிடாதடா பொம்பளபுள்ளைங்க இருக்கு அதுகளுக்கும் மத்தாப்பு சாட்ட வெடி வாங்கிக்கொடுங்கடான்னு ஒரு அம்பது ரூபாய எடுத்து கொடுப்பாரு.

அப்புறமென்ன அப்பா கொடுத்த அம்பதுரூபா நாமளா சேத்துவச்ச ரூபா எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு கிளம்பும்போது கூடவே எட்டப்பனும் வருவான் (நாங்க எங்க உடன்பிறப்ப அப்படித்தான் செல்லமா கூபிடுவோம்) பட்டாசுக்கடைக்கு எட்டப்பனோடு போயி ஏற்கனவே இன்னின்னது வாங்கனும்னு மனசுக்குள்ள போட்டு வச்சிருந்த லிஸ்ட்டுப்படி எல்லாத்தையும் வாங்கிட்டு இருக்கும் போது
எட்டப்பன் தனியா ஒரு பதினஞ்சு ரூபா வரைக்கும் வெடிய வாங்குவான்... அடப்பாவி இவ்வளவு காசு ஏதுடான்னு கேட்டா அப்பாவோட சைக்கிள்ல பஞ்சர்ன்னு நாலு தடவ காச கறந்துட்டேம்பான்... நா காத்தடிக்க பத்துபைசா கேட்டாவே கொடுக்க மாட்டாரு...உன்ன மட்டும் எப்பிடிடா நம்புனாருன்னு கேட்டா.. அப்பா ஒரு வெள்ளந்தி உலகத்துல உன்ன மட்டும்தான் நம்பமாட்டாரும்பான்.

சரிடா ஒரு பஞ்சருக்கு 75பைசா ன்னு வச்சிட்டாக்கூட மூணு ரூபாதாண்டா வருது மீதி எப்படி தேத்துனன்னு கேட்டா மளிகை கடை சண்முகம் சைக்கிளையும் நாலு தடவ பஞ்சர்ன்னு காச கறந்துட்டேன்லம்பான், அடப்பாவி உலகத்துல இவ்வளவு ஈசியா காசுபாக்குற வழில்லாம் இருக்கான்னு மனசுல நெனச்சிட்டு சரிடா இதுல ஒரு மூனுரூபா மீதிய எப்படி தேத்துனன்னு கேட்டா...என்ன ஆசிர்வாதம் பண்ணு பாட்டின்னு அப்பாத்தா கால்ல விழுந்தா அம்பது பைசா கொடுக்கும் அந்தமாதிரி ஒரு நாலுதடவ விழுந்து கொஞ்சம் காச தேத்திடுவேன்ம்பான்.

அடப்பாவிகளா நா மட்டும்தான் உலகம் தெரியாம வளந்துட்டேனான்னு மனசுக்குள்ள நெனச்சிபேன். அப்புறம் வெடிய காசுகொடுத்து வாங்கிட்டு வந்து நா, எட்டப்பன் தங்கச்சிங்கன்னு எல்லோரும் அவங்க அவங்க சேர்ஷ்ச பிரிச்சிக்கிட்டு தனி தனியா வச்சி தினமும் வெயில்ல காயப்போட்டு எடுத்து வச்சிப்போம்... அப்புறம் வாங்குன வெடிய எந்த எந்த டைம்ல எந்த எந்த வெடிய வெடிக்கிறதுன்னு மனசுக்குள்ள ஒரு லிஸ்ட் போட்டுப்போம்.

உதாரணமா சொன்னா விடிஞ்சா தீபாவளி அந்த நைட்டு 12 மணிக்கு சத்தமா வெடிக்கிற ஆட்டோ பாம வெடிக்க வச்சி தூங்குற எல்லாரையும் எழுப்பிவிட பிளான் பண்ணுவோம் ஆனா அந்த பிளான டைலர் கபோதிங்க கெடுத்துடுவானுங்க தீபாவளிக்கு பத்துநாளைக்கு முன்னாடியே வாங்கிக்கொடுத்த துணிய தைக்காம வச்சிருந்து தீபாவளி மொதநாள் நைட்டு அவன் கடைல தேவுடு காக்க வச்சிடுவான்...

இப்படியே தீபாவளி விடிஞ்ச பிறகு குளிச்சி புதுசட்ட பேண்ட் போட்டு மட்டன் வித் இட்லய ஒரு வெட்டு வெட்டிட்டு பிஜிலி வெடி பாக்கெட்ட பிரிப்போம் அதுல 100 வெடி இருக்கும்பாங்க ஆனா என்னுனா என்பத்திஅஞ்சி தொண்ணூறு தான் தேறும் அத ஒவ்வொரு வெடியா திரிய கிள்ளி ரோட்டுல போற வர்ற நாய், பன்னி ங்க மேல போட்டு வெளாண்டா ஒரு ரெண்டு மணிநேரம் ஜாலியா டைம் பாஸ் ஆகிடும்.

அப்புறம் நைட்டுபூறா டைலர் கடைல உக்காந்திருந்த அசதி கொஞ்சநேரம் தூங்க சொல்லும் சரி கொஞ்சநேரம் தூங்கலாம்னு போய் தூங்கி... என்னடா ரொம்ப சத்தம் கேக்குதேன்னு எந்திரிச்சா மணி சாயந்தரம் 7 ஆகிருக்கும் வெளில எல்லாரும் பட்டாசு விட்டுட்டு இருப்பாங்க நாமளும் அரக்க பரக்க பட்டச எடுத்துட்டு போய் ஜோதில ஐக்கியமாவோம்.

பட்டாசு கொஞ்சம் கொஞ்சமாக தீரத்தீர நம்ம சந்தோசமும் கொஞ்சம் கொஞ்சமாக தீரும் கடேசியா கொஞ்சமே கொஞ்சம் பட்டாச பெரிய கார்த்திகைக்கு வெடிக்க வச்சிட்டு முடிஞ்சிப்போன தீபாவளிய அசைபோட ஆரம்பிப்போம் .

இப்படியாகப்பட்ட எனது பால்ய தீபாவளி கொண்டாட்டங்கள்... இப்போதைய தலைமுறையில் வெடி நிறைய வெடிக்ககூடாது ஸ்மோக் ஒத்துக்காது,பலகாரம் நிறைய சாப்பிடக்கூடாது ஆயில் ஃபுட் ஒத்துக்காது, ஸ்வீட் நிறைய எடுத்துக்ககூடாது சுகர் வந்துடும் என்ற பயமுறுத்தல்களால் வெறும் ஸ்மார்ட் போனோடு கடந்து போய்விடுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+