ஆடி சூறைக்காற்று... சக்தி நிறைந்த அம்மனின் அருட்பார்வை நிறைந்த ஆடி மாதப்பிறப்பு
ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
சென்னை: ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயான புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. அதாவது, சூரியன் தன் பயணத் திசையை இம்மாதத்திலிருந்து மாற்றிக் கொள்கிறான். தட்சிணாயனம் மழைக்காலத்தின் துவக்கத்தைக் குறிக்கிறது. அதாவது, வளத்தினை, தொடர்ந்து பண்டிகைகள், தெய்வீக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆடி மாதம்தான் துவக்க மாதமாக அமைகிறது.
ஆடிச் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் இது. அவளின் அருட் சுழலுக்குள் சிக்குபவர்கள் மேன்மையுறுகிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு வணங்குகிறார்கள்.
பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். பெண்ணின் தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும் பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் லட்சம் விதமாக தன்னை வெளிப்படுத்துகிறாள்.

ஆடித்திருவிழா
சித்திரை பிறப்பு, தை மாத பிறப்பை கொண்டாடுவதைப் போட ஆடி மாதப்பிறப்பையும் கொண்டாடுகின்றனர். ஆடியின் அடிப்படை தத்துவமே 'உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்' என்று கூறுகிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்.

ஆடியில் கொண்டாட்டம்
ஆடி மாதம் இன்றைய தமிழ் மாதக் கணக்கின்படி நான்காம் மாதம். ஆனால் ஒரு காலகட்டத்தில் தை மாதத்தை முதல் மாதமாகக் கொண்டு தமிழ் மாதங்கள் கணக்கிடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன. அதன்படி ஆடி மாதம், முதல் அரையாண்டுக் காலம் முடிந்து அடுத்த அரையாண்டுக் காலத்தின் தொடக்கம். ஆண்டின் தொடக்கமான தைத் திருநாளைப் பொங்கலிட்டு வரவேற்பதுபோல அடுத்த அரையாண்டின் தொடக்கமான ஆடியும் கொண்டாடப்பட்டதுண்டு.

தெய்வீக மாதம்
ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.

கிராமம் செழிக்கும்
ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். புதிய விளைச்சலுக்குக் கட்டியம் கூறும். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் முதுமொழி இதில் இருந்துதான் தோன்றியது.

கொண்டாட்டம்
ஆடி மாதம் பருவ மழை தொடங்கும் மாதம். தமிழ்நாட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காலம். வளமையின் அடையாளமான அந்த வெள்ளப் பெருக்கை மக்கள் படையல் இட்டு வரவேற்கிறார்கள். இந்த வரவேற்பு வைபவம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு. காவிரி பாயும் டெல்டா பகுதிகளிலும் கொங்கு மண்டல பகுதிகளிலும் ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம் பிரசித்தம்.

ஆடியில் இத்தனை விழாக்களா?
ஆடிப் பிறப்பு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி ஞாயிறு ஆடிப் பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடி இறுதி என ஆடியின் சிறப்பு நீண்டுகொண்டே போகிறது. இம்மாதம் கொண்டுவரும் முதல் மழையின் மண்வாசமும், வானம் பார்த்த பூமியும் பூத்துக் குலுங்கும் வண்ணமும், உழுத நிலத்தில் தூவிய விதைகள் முளைவிடும் காட்சியும் ஆடியை இன்னும் சிறப்பானதாக மாற்றுகின்றன. இப்படி ஈரமும் பசுமையும் தெய்வீக மணமும் கமழும் ஆடியைக் கொண்டாடி மகிழலாம்.












Click it and Unblock the Notifications