நினைத்ததை நிறைவேற்றும் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு மாசி பிரம்மோற்சவம் கோலாகலம் -14ல் தேரோட்டம்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
காஞ்சிபுரம்: தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி பிலவ ஆண்டு மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடி ஏற்றத்துடன் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் தொடங்கியுள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து உற்சவ காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் லக்ஷ்மி சரஸ்வதி தேவியுடன் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து வெளிப் பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார்.
கோவில் வளாகத்தில் உள்ள தங்கக் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காமாட்சி அம்மன் உருவம் பொறித்த கொடியினை கோவில் ஸ்தானீகர்கள் வேத மந்திரங்களை ஒலித்தவாறு, மேளதாளங்கள் முழங்க, தங்க கொடி மரத்தில் ஏற்றி வைத்து பிரம்மோற்சவ விழாவை தொடங்கினார்கள்.விழாவில் கோயில் ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர், மேலாளர் செல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாசி மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காஞ்சி காமாட்சி அம்மன் திருக் கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்மாலைகளாளும், செங்கரும்புகளாலும் அலங்கரிக்கட்டிருந்தது. பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அம்மன் தினசரியும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். 12ஆம் தேதி தங்கப் பல்லக்கும், 14ஆம் தேதி மாசி தேரோட்டமும் நடைபெறும். 16ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. வருகிற 17ஆம் தேதி தீர்த்தவாரியும் 19ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
தேவியின் சக்தி பீடங்களாக சிறப்புற்று விளங்கும் 51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று. காஞ்சி என்றாலே காமாட்சிதான் என்று சொல்லும்படி காமாட்சி அம்மனால் மகிமை பெற்ற தலம் காஞ்சி. கா' என்றால் விருப்பம் என்று பொருள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள் என்பதாலும், நிறைவேற்றுபவள் என்பதாலும், அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
பண்டாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காகவே அவதரித்தவள் காமாட்சி அம்மன். பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ர பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார். அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், ஶ்ரீ ' என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும் என்பதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்து வராமல் போன கடன்களும் வந்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது.
ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு மகான் அம்பிகையைப் போற்றி ஸ்லோகங்களை இயற்றி இருக்கிறார்கள். கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.
காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் பிடித்தமானவை. கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.
கருவறையில், அம்பிகையின் வலப் புறத்தில் ஒற்றைக் காலில் பஞ்சாக்னி நடுவில் நின்றபடி காட்சி தரும் அம்மனையும் நாம் தரிசிக்கலாம். அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே வைத்துக்கொள்ள வேண்டும்.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications