For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2023: திருமண தடை, குழந்தை பாக்கிய தடை தரும் சர்ப்ப தோஷம்..பரிகாரங்கள்

கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் தினசரியும் படித்து வர நன்மைகள் நடக்கும். ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களின் கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும்.

Google Oneindia Tamil News

சென்னை:

ராகு கேது எனப்படும் சர்ப்ப கிரகங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ராகு கேதுவின் சஞ்சாரம் பல இளைஞர்கள், இளம்பெண்களுக்கு திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் தடை ஏற்பட காரணமாகிறது. இளம் வயதில் குறிப்பாக திருமண வயதில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஒரு தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். திருமண நடைபெற போராடவேண்டியிருக்கும். அதே போல திருமணம் முடிந்து குழந்தை பிறக்க சில தடைகள் ஏற்படும். ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் சென்றால் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் நிழற்கிரகங்கள் என்று ராகு கேதுவை வர்ணக்கப்பட்டாலும் இவர்கள் இரண்டு பேரும் சனி பகவானின் பிரதிநிதிகளாகத் திகழ்கிறார்கள். பழமையான ஜாதக நூல்களில் நவகிரகங்களில் ராகு-கேதுவின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் ஒவ்வொரு ராசிகளில் சஞ்சரிக்கும்போது என்ன என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

Rahu ketu Peyarchi 2023: What is Sarpa Dosha Effects and Remedies

நாக தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்து இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் ராகு என்ற கருநாகம் நின்று கணவனுக்கு தோஷத்தை எற்படுத்தும்.

பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி செல்லும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று, தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தை உருவாக்கும். பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலும், அல்லது தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் பொழுது அதை துன்புறுத்தினால் இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில், ராகுவோ, கேதுவோ நின்று நாக தோஷத்தை ஏற்படுத்தும்.

நாக தோஷமும் பரிகாரங்களும்

ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு நான்கு, பதிமூன்று, இருபத்தி இரண்டு, முப்பத்தி ஒன்று, இந்த தேதியில் பிறந்தவர்களுக்கும், அல்லது பெயரின் கூட்டு எண் நான்கு வந்தாலும், இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். புராண காலங்களில் நாகதோஷம் எதற்காக பார்க்கப்பட்டது என்றால், ஒருவர் சன்னியாசம் பெற்று காடுகளிலும், மலைகளிலும், கடுமையான தவங்கள் செய்வதற்கு கடுமையான விஷ ஐந்துகளினால் இவருக்கு ஆபத்து ஏற்படுமா என்பதை அறிந்த பின்னரே அவருக்கு சன்னியாசம் கொடுக்கப்பட்டது. நாக தோஷம் இதற்காகத்தான் பார்க்கப்பட்டது. நாளடைவில் அது ஒரு பயப்படக் கூடிய தோஷமாக பார்க்கப்பட்டது.

Rahu ketu Peyarchi 2023: What is Sarpa Dosha Effects and Remedies

ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 5, 9 இந்த ஸ்தானங்களில் சனி, ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும் பொழுது அது நாகதோஷம் உடைய ஜாதகமாகிறது. கால சர்ப்பயோகம் கொண்ட ஜாதகர்கள், ராகு காயத்திரியையும் கேது காயத்திரியையும் ஆயுள் முடியும் வரைக்கும் தினசரியும் படித்து வர தோஷங்கள் படிப்படியாக நீங்கும்

ராகு, கேதுகளினால் தோஷம் ஏற்பட்டு பருவமடைந்தும் நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்கள் அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்துள்ள இடத்தின் கீழுள்ள நாக சிலைக்கு பால் விட்டு, அபிஷேகம் செய்து வர வேண்டும். செவ்வாய்க் கிழமையில் செய்வதே நல்லது. 48 நாட்கள் செய்ய வேண்டும். பாம்பு புற்றுக்கு பால் வார்த்தும் முட்டை வைத்தும் ஒரு மண்டலம் வழிபாடு செய்யலாம். இதனால் திருமணம் விரைவில் நடக்கக்கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கும், நாகதோஷம் நீக்கி புத்திர பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

சங்கரன் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி அம்மன் ஆலயம் உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று வந்து பாம்பு புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு 11 வாரம் தொடர்ந்து புற்றுக்கு பால், பழம் வைத்து வழிபட்டு வந்தால் நாக தோஷத்தால் தடைப்பட்டு வரும் திருமணம் விரையில் நடைபெறும். ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கி நல்ல புத்திரர் பிறப்பார்கள்.

Rahu ketu Peyarchi 2023: What is Sarpa Dosha Effects and Remedies

தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூசித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம். கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குணம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும். கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது, குளக்கரையில் பிரதிஷ்டை செய்து, நாற்பது நாள் பூசித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும். குளம் அல்லது நதிக்கரையில் அரசு, வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகி குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.

துர்க்கைக்கு விளக்கு

தினசரி துர்க்கை அம்மனுக்குரிய மந்திரங்களை படித்து வர வேண்டும். ராகு பகவானுக்கு உளுந்து பிடித்தமான தானியம் ஆகும். இதை நவக்கிரக சன்னதியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ராகுவுக்கு வைத்து வலம் வந்து பூஜை செய்தால் தோஷம் நீங்கும். இதனால் சகல கஷ்டங்களும் நீங்கும். ராகு பகவானுக்கு உளுந்து வடை விசேஷமாகும். அதை நெய்வேத்தியம் செய்து தானம் செய்யலாம். கருப்பாக உள்ளவரிடம் நான்கு வடைகள் கொடுத்து சாப்பிடச் சொல்வது நல்லது.

ராகுவுக்கு அதிதேவதை பத்ரகாளி ஆகும். சிவ ஆலயங்களில் துர்க்கை அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வழிபட்டு வர சகல தோஷங்களும் தீரும். துர்க்கை அம்மனுக்கு அருகு, மந்தாரை போன்ற மலர்களையும், உளுந்து போன்ற கருநிற தானியங்களையும், புளிப்பு பண்டங்களையும் படையல் செய்தால் வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை நிரந்தரமாக நீங்கும்.

கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளகஸ்தி, சென்னை அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது நாக தோஷங்களை நீக்கும் பரிகாரமாகும். ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும். ராகு கேதுவால் ஏற்படும் நாக தோஷத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும்.

Rahu ketu Peyarchi 2023: What is Sarpa Dosha Effects and Remedies

தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும். துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும். நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும். ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

ராகு-கேதுவின் கோச்சார அமைவுகளை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் நாகதோஷத்தை கணிப்பார்கள்.
நம்மை தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், நாக தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் புற்று ஒரு தெய்வீக அடையாளம். பாம்பு புற்றை அறியாமல் இடித்தாலும் சர்ப்ப தோஷம் உண்டாகும்.

நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமணத்திற்க்கு முன்பே நாகதோஷ நிவர்த்தி பரிகாரங்களை செய்யவேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு செய்தால் நல்ல வரனும் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

பொதுவாக செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்கள் நாக வழிபாட்டிற்கு ஏற்றது என்பதோடு ஞாயிற்றுக்கிழமையில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புடையது என்கின்றார்கள். ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள் ஸ்ரீநாகராஜ பூஜையை செய்வது நல்லது.

விநாயகர் வழிபாடு

கேது பகவானுக்கு அதிதேவதை விநாயகர், முதற்கடவுளான விநாயக பெருமானை ஞாயிறு அன்று தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்துவர வேண்டும். தினமும் அரசு, வேம்பு, விநாயகர், நாகர் ஆகியோரை 9 தடவை அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை வலம் வரலாம். கேது இருக்கும் கிராகாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது, விநாயகருக்காவது அர்ச்சனை செய்ய வேண்டும்.

கேது பகவானுக்கு பரிகாரமாக ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை வழிபடுவது நல்லது. காஞ்சியில் உள்ள சித்ரகுப்தன் கோவில் சென்று வழிபடலாம். வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை வழிபாடு செய்யலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தில் நாக வழிபாடு செய்வது சிறப்பு.

அரச மரத்தடியில் நாகர் சிலையை வழிபட்டு, நாகருக்கு பால் ஊற்றி, மரத்தை சுற்றி வரும் பெண்கள் தங்கள் கணவருடன் ஒருமித்து வாழவும், மகப்பேறு பெற்று சக்தியின் கருணையையும், அருளையும் பெறுகிறார்கள் என்பது பலரும் அறிந்த உண்மை. ஞாயிறு தோறும் ஆஞ்சநேயப் பெருமானை துளசியினால் அர்ச்சித்து வரலாம். கேதுவுக்கு உரிய தியானம் காயத்ரி, அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒருமுறை கூறி வரலாம். செவ்வாய் பகவானுக்கு செய்கின்ற பரிகாரம் கேதுவுக்கும் பொருந்தும் என்ற கருத்துண்டு.

பொதுவாகவே தோஷம் என்பதை பரிகாரத்திற்கு உரியதுதான். நல்லதே நினையுங்கள் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் அவை பாதிப்புகளை ஏற்படுத்தாது. ராகு கேது உங்க ஜாதகத்தில் எங்கு இருந்தாலும் கவலை வேண்டாம். பூஜை அறையில் தினமும் காலை மாலை விளக்கேற்றி மனதார இறைவனை பிராத்தனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.

Rahu ketu Peyarchi 2023: What is Sarpa Dosha Effects and Remedies

கேது பகவான் பரிகாரமாக ஷோடச கணபதி ஹோமம் செய்வது விசேஷம். மேலும் சண்டி ஹோமம் செய்வதால் கேது பகவானை திருப்திப்படுத்த முடியும். மாத சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல்லினால் அர்ச்சனை செய்து வரவும். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில்லில் ராகு காலத்தில் பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு, நாகதோஷ பரிகாரத் தலங்கள் அனைத்திற்கும் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நவ கிரகங்களில் கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம். அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும். கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. மேலே சொல்லப்பட்ட பரிகாரங்களில் ஏதாவது ஒன்றினை உங்களால் முடிந்த அளவிற்கு நம்பிக்கையுடன் செய்து வர சர்ப்ப தோஷங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையும்.

English summary
Rahu ketu Peyarchi palan 2023: Sarpa Dosha Remedies and Mantra If Rahu or Ketu is in the lagna, 2nd, 5th, 7th or 8th house, it is generally called Sarpa dosha. Ketu in the lagna called Manglya Sarpa Dosha causes delay in marriage.Check what is Sharpa dhosha and remedies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X