• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜ ராஜ சோழன் சதயவிழா - ராஜ ராஜனின் பெருமையை சொல்லும் தஞ்சை பெருவுடையார் கோவில்

|

தஞ்சாவூர்: மாமன்னர் ராஜ ராஜ சோழனின் 1034ஆவது சதய விழா இன்று தஞ்சாவூரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவருடைய வெற்றியை பறைசாற்றும் விதமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில் என்னும் பிரகதீஸ்வரர் ஆலயம். இவ்வுலகம் இருக்கும் வரையில் ராஜ ராஜனின் பெருமையை இந்தக் கோவில் எடுத்துரைக்கும் என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் கர்வம் கொள்ளலாம்.

தமிழக சரித்திரத்தை எடுத்துக்கொண்டால், பண்டைய காலம் தொட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வரையிலும், யாருடைய ஆட்சி பொற்காலமாக இருந்தது என்று கேட்டால், வரலாற்றைப் பற்றி அறிந்த அனைவரும் சொல்வது, சோழர்களின் ஆட்சிதான் என்று தயங்காமல் சொல்வார்கள்.

அதிலும் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தான் உண்மையிலேயே தமிழகம் பொற்காலமாக விளங்கியது என்று அனைவரும் சொல்வார்கள். அவருடைய ஆட்சியில் நாட்டு மக்கள் மட்டுமல்லாது, கட்டிடக்கலை, சிற்பக்கலை, வணிகம், கலாச்சாரம், நாகரீகம், விவசாயம், ஆன்மீகம், உணவுமுறை, ராணுவம், போர்ப்படை என அனைத்து துறைகளும் மற்ற நாடுகளுக்கு ஒர் முன் மாதிரியாகவே விளங்கியது.

ராஜ ராஜ சோழன் ஆட்சி

ராஜ ராஜ சோழன் ஆட்சி

சரி, இப்படி உலகமே மெச்சும் வகையில், சாளுக்கிய தேசம், ஈழம், கடாரம் என கீழை நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, சுமார் 29 ஆண்டுகள் தன்னுடைய ஆட்சியை பொற்காலமாக வைத்திருந்த ராஜ ராஜன் ஏன் வட இந்தியாவை மட்டும் விட்டு, மெனக்கெட்டு ஆன்மீகத்தில் ஈடுபட்டு, இன்றைக்கு உலகமே அன்னாந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான், இது எப்படி சாத்தியமானது என்று வரலாற்று ஆய்வாளர்கள் மண்டையை பிய்த்துக்கொள்கின்றனர்.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

ராஜ ராஜன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஈழத்தின் மீது படையெடுத்து அதை கைப்பற்றிய பின்னர் தான், அங்குள்ள சிவாலயங்களை பார்த்து பிரமித்துப் போய் நாமும் ஏன், இதே போல் ஒரு சிவாலயத்தை மிகப்பிரமாண்டாக எழுப்பக்கூடாது என்று தன்னுடைய மனதில் கேள்வியை எழுப்பினான். அதற்கு பதிலாக தோன்றியதே தஞ்சை பெருவுடையார் என்னும் பிரகதீஸ்வரர் ஆலயம்.

ராஜராஜன் வியந்த கோவில்

ராஜராஜன் வியந்த கோவில்

தான் படையெடுத்துச் சென்ற நாடுகளில் கண்ட சிற்பக்கலையில் கவரப்பட்டு அதை எல்லாம் சேர்த்து வைத்து ஒரு உன்னதமான கலைப்பொக்கிஷத்தை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி, முனைப்புடன் இந்த கோயிலை ராஜ ராஜன் உருவாக்கி இருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதோடு, பல்லவ மன்னனான ராஜ சிம்மனால் காஞ்சிபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிலாதநாதர் கோயிலின் கட்டமைப்பும், சிற்ப வேலைப்பாடுகளும் ராஜ ராஜ சோழனின் மனதை பெரிதும் கவர்ந்தன.

ராஜ ராஜன் கட்டிய கோவில்

ராஜ ராஜன் கட்டிய கோவில்

அக்கோவிலை பார்த்த வியந்த ராஜ ராஜ சோழன் ‘கச்சிப்பேட்டு பெரியதளி' என்று போற்றி புகழ்ந்தார். அந்த கோவிலின் அமைப்பானது அவருக்குள் உணர்ச்சிப் பெருக்கையும், பக்தியைம் அதிகப்படுத்திவிட்டது எனலாம். தன்னுடைய ஆட்சிக்காலத்தில் தானும் இது மாதிரியே ஒரு சிவாலயத்தை எப்பாடுபட்டாவது உருவாக்கியே தீரவேண்டும் என்று எண்ணம் கொண்டார். உடனடியாகவே தஞ்சை பெரிய கோவிலின் திருப்பணியை தொடங்கிவிட்டார்.

உலகம் வியந்த கோவில்

உலகம் வியந்த கோவில்

காஞ்சிபுரம் கயிலாயநாதர் கோவிலை பார்த்ததன் விளைவே, பெருவுடையார் கோவில் கட்ட ராஜ ராஜ சோழனுக்கு உந்து சக்தியாக இருந்தது. கி.பி.1004ஆம் ஆண்டில் கோவில் திருப்பணி தொடங்கி 6 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு ராஜ ராஜ சோழன் ஆட்சியின் 25ஆவது ஆண்டில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. 1000 ஆண்டுகள் உருண்டோடிவிட்டாலும், இன்றைக்கும் இக்கோவிலை உலகமே அன்னாந்து பார்த்து வியக்கின்றது.

கோவிலை கட்டிய கைதிகள்

கோவிலை கட்டிய கைதிகள்

தஞ்சை பெரிய கோவிலை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகளின் உதவியுடன் தான் கட்டிமுடித்துள்ளனர். அதோடு பொதுமக்களும் இக்கோவிலை கட்ட உதவினர். அதோடு, 1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள், ஆசாரிகள், கொல்லர்கள், நடன கலைஞர்கள், சமையல் ஆட்கள். கற்களை பிளக்கும் ஆட்கள் என ஒரு மாபெரும் படைக்கும் தொடர்ந்து 7 ஆண்டுகள் உணவு வழங்க வேண்டும் என்றால், தொடர்ச்சியாக 7 வருடம் சோழ தேசத்தில் விவசாயமும் பொருளாதார வளமும், நிதி நிலைமையும் எந்த அளவுக்கு பக்காவாக தங்கு தடையின்றி இருக்க வேண்டும். மேலும் மருத்துவ வசதியும் வெகு சிறப்பாக இருந்திருக்க வேண்டும். இப்படி உருவாக்கப்பட்டது தான் இப்பெருவுடையார் கோவில்.

அழகிய கோவில்

அழகிய கோவில்

இக்கோவிலின் ஒவ்வொரு அங்குலமும் ஒரு கதை சொல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனலாம். வார்த்தைகளில் விவரிக்க முடியாத மிக நுண்ணிய வடிவமைப்பு, கற்பனா சக்தி, துல்லியமான மேலாண்மை. இன்றைய தொழில்நுட்பத்தை மிஞ்சும் பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கில்லாத ஒழுங்குமுறை, ஆயிரத்தில் ஒரு பங்கு துளிகூட பிசகாத கணக்கீடுகள் என அறிவியல் பூர்வமான மிக நுட்பங்கள் இந்த கோவில் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்பது நம்மை மெய்சிலிர்க்கவைக்கின்றது.

பெருவுடையார் கோவில்

பெருவுடையார் கோவில்

இக்கோவில் கட்டப்பட்டதில் இருந்து மராட்டியர்களின் ஆட்சிக்காலம் வரையிலும் ராஜ ராஜஸ்வரர் கோவில் என்றே அழைக்கப்பட்டு வந்தது. மராட்டிய மன்னர் சரபோஜியின் ஆட்சிக்காலத்தில் தான், இக்கோவில் பிரகதீஸ்வரர் கோயில் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கான கல்வெட்டும் இக்கோவியில் உள்ளது. மராட்டியர்கள் இக்கோவிலை மகா சிவன் கோவில் என்றும் அழைத்து வந்தனர். தஞ்சை பெருவுடையார் கோவில் உருவான காலகட்டத்தில் இருந்த மற்ற அனைத்து கோவில்களையும் காட்டிலும் இதுவே மிகப் பெரிய கோவிலாகும். மற்ற கோவில்களைக் காட்டிலும், சுமார் 40 மடங்கு பெரியது என்றால் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், எத்தனை பெரியது என்று, அதனால் தானோ என்னவோ தஞ்சை பெரிய கோயில் என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கற்கோவில்

கற்கோவில்

இக்கோவிலின் கட்டுமானத்தை விவரிக்க வேண்டுமானால், அதை மட்டுமே ஒரு பெரிய புத்தகமாக வெளியிட வேண்டியதிருக்கும். காரணம் ஒவ்வொது அங்குல கட்டுமானத்திலும் ஒரு ஆச்சரியம் புதைந்துள்ளது. முதல் ஆச்சரியம், இக்கோவிலின் கட்டுமானத்தில் ஒரு அங்குல மரம் கூட பயன்படுத்தப்படவில்லை. சுடு மணலால் ஆன செங்கல் கிடையாது, பூராங்கல் உபயோகப்படுத்தப்படவில்லை. மொத்த கட்டுமானத்திற்கும் நீலம் ஓடிய சிவப்பு நிற கிரானைட் கற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொழில் நுட்பத்திற்கு சவால்

தொழில் நுட்பத்திற்கு சவால்

அதேபோல், 1.30 லட்சம் டன் எடைகொண்ட கற்கோவில் என்றால், இவ்வளவு பெரிய கற்கோவிலை தாங்கும் அஸ்திவாரம் எந்த அளவுக்கு பலம் வாய்ந்ததாக, இன்றைய தொழில்நுட்பத்திற்கு சவால்விடும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் கோவிலின் கற்பகிரகத்தின் மேல் உள்ள, 80 டன் எடையுள்ள விமானத்தையும் கலசத்தையும் ஏற்ற வேண்டும். கூடவே எட்டு லிங்கங்களையும் அமைக்க வேண்டுமானால், அதற்கு எத்தனை பெரிய உச்சபட்ச இருந்திருக்கவேண்டும் என்பதை இன்றைக்கு நினைத்துப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி

அன்றைக்கு, அதாவது 1000 ஆண்டுகளுக்கு முன்பு, தஞ்சை பெரிய கோவிலை கட்டும் போது, இந்த கோவிலின் விமானம் தான் இந்தியாவின் மிகப்பெரிய விமானமாகும். அதேபோல், கருவறையில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கமும் உலகிலேயே மிகப்பெரிய லிங்கமாகும். சிவலிங்கத்தின் சுற்றளவு மட்டுமே 60 அடியாகும். இதன் உயரம் 13.5 அடியாகும். அப்படியென்றால் இதன் பிரமாண்டத்தை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதேபோல், கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள நந்தியும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த நந்தி சிலையானது, திருச்சிக்கு அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்டதாகும். இந்த நந்தி 25 டன் எடையும் 19 அடி நீளமும், எட்டேமுக்கால் அடி அகலுமும், 12 அடி உயரமும் கொண்டதாகும். தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்.

ஆயிரம் ஆண்டுகள் வரலாறு

ஆயிரம் ஆண்டுகள் வரலாறு

இக்கோவிலை கட்டி முடிக்க ராஜ ராஜ சோழனுக்கு பேருதவியாக இருந்தது, குஞ்சரமல்ல பெருந்தச்சன் என்பவர் தான். இவர் தான் இக்கோவிலை வடிவமைத்து கட்டினார். இவருக்கு உறுதுணையாக நித்த வினோத பெருந்தச்சன், லத்தி சடையன் ஆகிய இருவரும் இக்கோவிலை கட்டுவதற்கு குஞ்சர மல்லனுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்று கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. அதெல்லாம் சரிதான். அதெப்படி இந்த பெருவுடையார் கோவிலை ராஜ ராஜ சோழன் தான் கட்டியது என்று எப்படி வெளியுலகத்திற்கு தெரியவந்தது. கடந்த 1930ஆம் ஆண்டு வரையிலும் இக்கோவிலை கட்டியது யாரோ ஒரு பெயர் தெரியாத மன்னன் என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

மாமன்னன் பெயர் சொல்லும்

மாமன்னன் பெயர் சொல்லும்

1930ஆம் ஆண்டுகளில் தான், ஜெர்மனியை சேர்ந்த ஹுல்ஸ் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தஞ்சை பெரிய கோயிலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்து, இந்த கோவிலை கட்டியது மாமன்னன் ராஜ ராஜ சோழன் தான் என்று ஆணித்தரமாக அடித்துச்சொன்னார். அதன் பிறகே, இக்கோவிலின் பெருமையும், ராஜ ராஜ சோழனின் பெருமையும் இந்த உலகத்திற்க தெரியவந்தது எனலாம். இவ்வுலகம் இருக்கும் வரையில் ராஜ ராஜனின் பெருமையை இந்தக் கோவில் எடுத்துரைக்கும் என்பது தமிழர்களாகிய நாம் அனைவரும் கர்வம் கொள்ளலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
The 1034th Sathya vizha of the Great Emperor Raja Raja Cholan, is celebrated very much all over Tamil Nadu today. His triumph is so high that the temple of the Tanjore Peruvudaiyar Temple alias Brihadeeswarar Temple. All of us as Tamils can be proud that this temple will bring the glory of Raja Raja to this world.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more