For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரம் கொடியேற்றம் - 25ல் ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட விழா வருகிற 25ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மார்ச் 25 இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Thiruvarur temple Panguni Uthiram begins with flag hoisting Azhi Therottam on 25th march

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் திகழ்கிறது. திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும். மேலும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத்தலமாகும்.

திருவாரூர் நகரமும் ஆலயமும் சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது என்கின்றன புராணங்கள். ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது.

நளனும் சனியும் வழிபட்ட தலம் இது. தியாகேசர் சந்நிதியில், மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும். சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

சிவ பெருமானின் பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப்புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஆழி என்றால் மிகப்பெரியது என்று பொருளாகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய பெருமைகளை கொண்ட ஆழித்தேர் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டு்ள்ளது. இந்த தேரின் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப் படுகிறது.

மிக பிரமாண்டமான ஆழித்தேரில், தியாகராஜர் வீற்றிருக்க நான்கு வீதிகளிலும் தேர் வீதியுலா வரும் அழகு காண்போர் வியக்கத்தக்கது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலை காலை 5 மணியளவில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் உலா வந்தனர். பின்னர், தியாகராஜர் சன்னதி முன்புறம் உள்ள கொடிமரத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேதமந்திரங்கள் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவார் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்தனர். அதன்படி, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 25 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தைக் காண திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.

English summary
The Panguni Uttara festival was held at the Thiruvarur Thiyagaraja Swamy Temple this morning. It has been announced that the main event of the festival will take place on March 25.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X