
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம்..புரட்டாசி பிரம்மோற்சவ நாட்களில் ரத்து
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வரும் 22ஆம் தேதி வெளியிடப்படுகிறது. செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியில் இருந்து 30ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கடந்த 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கட்டண சேவைகளில் பங்கு பெறவும், அங்கபிரதட்சணம் செய்வதற்கும் அனுமதி நிறுத்தப்பட்டிருந்து.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் அங்கப்பிரதட்சணம் செய்யவும் கட்டண சேவைகளில் பங்கு பெறவும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போறீங்களா? அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ரிலீஸ் எப்போது?