காதலர் தினம் 2022: எந்த ராசிக்காரர்களுக்கு இப்போது காதல் மணியடிக்கும் தெரியுமா?
காதலுக்கு வேகமும் துணிச்சலும் ரொம்பவே முக்கியம். வீரத்தின் நாயகன் ரத்தக் காரகன் செவ்வாய் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்
சென்னை: காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்போது காதலில் விழ வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம். காதல் விஷயத்தில் ஜோதிட சாஸ்திரம் என்ன அறிவுறுத்துகிறது என்றும் பார்க்கலாம்.
மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் என்பது முக்கிய தேவையாக உள்ளது.

காதலும் நவ கிரகங்களும்
காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன. சுக்கிரன், செவ்வாய், சந்திரன், சனி ஆகிய நால்வருமே காதலிக்க கற்றுத்தருவதில் முக்கியமானவர்கள். ஒருவரின் ஜாதகத்தில் நவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொருத்தே திருமண பந்தம், தாம்பத்ய சுகம் எல்லாவற்றுக்கும் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள்.

ஜாதகம் எப்படி
காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என்பதை பார்க்க ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் ஐந்தாம் பாவகம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஏழாம் பாவகம் எனப்படும் களத்திர ஸ்தானம் பாக்ய ஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் பாவகத்தை வைத்து முடிவு செய்யலாம். காதலுக்கு வேகமும் துணிச்சலும் ரொம்பவே முக்கியம்.

செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை
வீரத்தின் நாயகன் ரத்தக் காரகன் செவ்வாய் கிரகம். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லைக்கும் போக தயங்கமாட்டார்களாம். ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகமாக இருக்குமாம்.

எந்த ராசிக்காரர்களுக்கு காதல் வரும்
பொதுவாக ரிஷபம், துலாம், சிம்மம் ராசிக்காரர்கள் அதிகம் காதலில் விழ வாய்ப்பு உள்ளது. ஓருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். தற்போது மிதுன ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருந்து மிதுன ராசியை பார்வையிடுவதால் இம்முறை நிச்சயம் காதல் மணியடிக்கும். யாராவது காதலை புரபோஸ் செய்வார்கள்.

காதல் வாழ்க்கை சிறப்பு
ஏழாம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. கூடுமானவரை இந்த இடம் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது விசேஷம். அப்படி அமைந்தால் காதலும் வாழ்க்கையும் சிறப்பாக அமையும். ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.

கலப்பு காதல் திருமணம்
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி பாதிக்கப்பட்டிருந்தாலோ குரு பாதிக்கப்பட்டிருந்தாலோ கலப்புத் திருமணத்தில் முடியும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது, இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.

எந்த மாதிரியான காதலன் காதலி
12ஆம் இடம் அயன, சயன போக ஸ்தானம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது. ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி-சுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். உங்க ஜாதகத்தில் எந்த மாதிரியான அமைப்பு இருக்கிறது என்று பார்த்து ஏற்ற துணையை தேர்வு செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications