Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸாரி மாமா".. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (18)

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வந்து சத்தம் இல்லாத இடமாக சென்று அந்த ஆடியோவை ஆன் செய்தான்.

"மாமா.. ஸாரி மாமா.. நீங்கெல்லாம் பயந்து போய் இருப்பீங்கன்னு தெரியும். முதல்ல என்னை மன்னிச்சிடுங்க.. நான் சொல்லிட்டே வந்திருக்கலாம். ஆனால் அப்பா சம்மதிக்க மாட்டார். பெரிய பிரச்சினை பண்ணிடுவார். அதனால்தான் சொல்லலை. உங்க கிட்டயாவது சொல்லிருக்கலாம். ஆனால் அத்தை மனசு வேதனைப்படும். அதனால்தான் உங்க கிட்டயும் சொல்ல யோசிச்சேன்.

அவர் பேரு ஆனந்த். என்னோடதான் ஒர்க் பண்றார். 7 மாசமா பழக்கம். ரொம்ப அமைதி, ரொம்ப நல்ல பண்பு. அம்மா அப்பா அவர் மட்டும்தான். ரெண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்சு. அவங்க வீட்டுல சம்மதிக்கலை. நம்ம வீட்டிலும் நிலைமை தெரியலை. அதான் வெளியே வந்துட்டோம். நாளைக்கு கல்யாணம், திருப்பதில. முடிஞ்சதும் நேரா உங்க வீட்டுக்குத்தான் வருவோம்.. மன்னிச்சுடுங்கன்னு சிம்பிளா சொல்லி தப்பிக்க முயல மாட்டேன். நான் செய்தது பெரிய தப்புதான். ஆனால் எனக்கு வேற வழி தெரியலை.

நீங்கதான் எங்க ரெண்டு பேரு குடும்பத்திலும் பேசி சமாதானம் செய்ய வேண்டும். ப்ளீஸ் மாமா. நான் கல்யாணம் முடிஞ்சதும் கால் பண்றேன். அதுவரைக்கும் அலைஞ்சு சிரமப்பட வேண்டாம். ப்ளீஸ் மாமா"

சுனிலுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. எதிரில் மட்டும் ராஜி இருந்திருந்தால், பிடிச்சு நல்லா தலையில் நாலு குட்டு பலமாக வைத்திருப்பான். அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. இப்படியா பண்ணுவது.. முதலிலேயே சொல்லியிருந்தால் இரு தரப்பிடமும் பேசி நல்லபடியாக செய்து வைத்திருக்கலாமே. இப்படி ஓடிப் போனால் என்ன அர்த்தம் என்று கடும் ஆத்திரம் வந்தது சுனிலுக்கு.

போனை எடுத்து பையில் போட்டபடி உள்ளே நுழைந்து நேராக ரைட்டரிடம் சென்றான்.

"ஸார், ஒரு விஷயம்.. பொண்ணு வீட்டுக்கு வந்திருச்சாம் சார்.. நான் கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக்கறேன் சார்"

 Nilavkukku Neruppendru Peyar Tamil series episode 18

நிமிர்ந்து பார்த்த ரைட்டர் சிரித்தபடி.."நான் சொல்லலை. லவ் மேட்டராதான் இருக்கும். உட்கார வச்சு விசாரிச்சுப் பாருங்க. பையன் யாருன்னு சொல்லுங்க.. தேவைன்னா நாலு போடு போட்டு விலக்கி விட்ரலாம்.. சரியா" என்று அவர் சிரித்தபடி சொன்னதை ரசிக்கும் மன நிலையில் சுனில் இல்லை.

இருந்தாலும், சரி சார் என்று ஆமாம் சாமி போட்ட சுனில், அவர் காட்டிய ஒரு லெட்ஜரில் கையெழுத்துப் போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெளியே வந்து பைக்கை எடுத்து ஹெல்மட்டை தலையில் மாட்ட முயன்றபோது சிணுங்கியது செல்.

மறு முனையில் ப்ரீத்தி.

"சொல்லு ப்ரீத்தி"

"ஏங்க எங்க இருக்கீங்க.. சீக்கிரம் வாங்க.. அத்தைக்கு முடியலை"

"என்னாச்சும்மா"

"தெரியலை.. மூச்சுப் பிடிக்குதுன்னு சொல்றாங்க. எனக்குப் பயமா இருக்கு"

"பயப்படாதே.. என்னோட பெட்ரூம்ல.. டேபிளுக்கு மேல உள்ள ஷெல்புக்குப் போ. அங்கே பச்சைக் கலர்ல ஒரு டப்பா இருக்கும். அதுல "....... 10 எம்ஜி" மாத்திரை இருக்கும். அதை எடுத்துக் கொடு.. தோ.. நான் வந்துர்றேன்.. பயப்படாதே"

அம்மாவுக்கு அடிக்கடி இப்படி வருவது சகஜம்தான். வயது ஆகிறதல்லவா.. தான் வீட்டில் இல்லாத நேரத்தில் அம்மாவுக்கு இப்படி ஆனது சுனிலை வருத்தப்படுத்தியது. ஆனால் நான் இல்லாத இடத்தில் ப்ரீத்தி இருந்தாளே என்ற ஆறுதலும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது. வண்டியை வேகமாக வீட்டுக்குப் பறக்க விட்டான்.

--

சுனில் சொன்ன மாத்திரையை வேகமாக எடுத்துக் கொண்டு வந்த ப்ரீத்தி, கொஞ்சம் தண்ணீரை சுட வைத்து கை பொறுக்கப் பார்த்து பின்னர் அத்தையிடம் கொடுத்தாள்.

"அத்தை மெல்ல உட்கார்ந்துக்கங்க.. இந்தாங்க மாத்திரை சாப்பிடுங்க.. அவர் இப்ப வந்துடுவாராம்.. சொன்னார்"

"ம்.. சரிம்மா.. நீ பயந்துட்டியா" மாத்திரையை வாங்கி வாயில் போட்டபடி கேட்டாள் ரேவதி.

"ஆமா அத்தை.. நான் வந்த நேரம் பார்த்து.. எல்லாமே தப்புத் தப்பா நடக்குதேன்னு பயமாய்ருச்சு"

"அட நீ வேற.. இன்னுமா இந்த பத்தாம் பசலித்தனமான சிந்தனை இருக்கு உனக்கு. எது நடக்குமோ அது நடக்கும். எது நடக்கணுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.. ரிலாக்ஸா இரு"

"ஆமா அத்தை.. இப்படி அடிக்கடி ஆகுமா உங்களுக்கு. டாக்டர் கிட்ட போனீங்களா"

"வயசாய்ருச்சுடா.. அதான். கொஞ்சம் ஹார்ட் பிராப்ளம் இருக்கு. டிரீட்மென்ட் எடுத்திருக்கு. மாத்திரை போதும்னு சொல்லிருக்காங்க.. பயப்பட ஒன்னுமில்லை. அடிக்கடி இப்படி மூச்சு பிடிச்சுக்கும்.. அப்பல்லாம்.. இதோ இந்த மாத்திரைதான் எனக்கு உதவி.." சிரித்தபடி சொன்னார் ரேவதி.

"சரி அத்தை.. சரியாய்ரும்" வாஞ்சையுடன் சொன்ன ப்ரீத்தியை அப்படியே பக்கத்தில் இழுத்துக் கொண்டு அணைத்துக் கொண்டார் ரேவதி. "அதான் நீ வந்துட்டியே.. எல்லாம் சரியாய்ரும்" சொன்ன ரேவதியின் பேச்சைக் கேட்டு மனசுக்குள் பூரித்துப் போனாள் ப்ரீத்தி.

"அத்தை எனக்கு அவரை விட உங்களைத்தான் ரொம்பப் பிடிச்சிருக்கு.. உங்களை கண் கலங்காம, மனம் கோணாம பார்த்துக்கணும்னு ஆசைப்படறேன்.." உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னாள் ப்ரீத்தி.

"அடடா.. என்னை பிடிச்சிருக்கா.. அப்ப அவன் கோச்சுப்பானே"

"பரவாயில்லை. கோச்சுக்கிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.. நீங்கதான் இப்ப எனக்கு உலகமே"

"நீ எனக்கு மருமகளே கிடையாதும்மா.. மகள்.. மகளை விட சிறந்தவள். பார்த்த முதல் பார்வையிலேயே உங்களைப் புரிஞ்சிக்கிட்டேன். ரெண்டு பேரும் பொருத்தமான ஜோடிங்கதான்.. அவனுக்கு அம்மாதான் உலகமே.. சின்ன வயசுலேயே அவங்க அப்பா தவறிட்டார்.. வேற குழந்தையும் இல்லையா.. ஒத்த மரமாவே வளர்ந்தான். கெட்ட பழக்கம் ஒன்னும் கிடையாது. டீ கூட ரொம்ப கம்மிதான். அதிர்ந்து பேச மாட்டான். அன்பைத் தவிர வேற எதையும் காட்டத் தெரியாது. யாராவது உருக்கமா பேசிட்டா போதும்.. உடனே கையில் இருப்பதையெல்லாம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தாம விட மாட்டான். அந்த வகையில் நிறைய ஏமாந்திருக்கவும் செய்திருக்கான்"

"ஆமா அத்தை எனக்கு கூட தக்காளி வாங்கிக் கொடுத்தார்.. என்ன ஏதுன்னு கேட்காமலேயே.. அதுவும் 2 கிலோவுக்கு" நடந்த கதையை அவள் சொல்ல.. ரேவதி வாய் விட்டுச் சிரித்தார்..

"எனக்கும் அம்மாதான் உலகமா இருந்தாங்க அத்தை.. ரொம்பப் பாசமானவங்க. எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்திருந்தாங்க. என்னை தைரியமான பொண்ணா வளர்த்தாங்க. நான் தப்பு செய்ய மாட்டேன்னு ரொம்ப நம்பிக்கையோட இருப்பாங்க.. எனக்கு சுனில் கிடைச்சது மட்டும் தெரிஞ்சுட்டு அவங்க போயிருந்தா நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.. அவங்களும் நிம்மதியா போய்ச் சேந்திருப்பாங்க.. அதுதான் எனக்கு நெஞ்சை முள்ளா தைக்குது" என்று கூறிய ப்ரீத்தி அழத் தொடங்கி விட்டாள்.

ரேவதிக்கு கஷ்டமாகி விட்டது. மருமகளை அணைத்துக் கொண்டு தட்டிக் கொடுத்தார்.

"கவலைப்படாத ப்ரீத்தி. உனக்கு தாய்க்குத் தாயா, தந்தைக்கு தந்தையா சுனில் இருப்பான். நீ தைரியமா இரு.. இனி எப்பவும் உன் கண்ணில் கண்ணீர் வரக் கூடாது.. சரியா.. "

"உண்மைதான் அத்தை.. அவருக்கு என் மேல ரொம்பப் பிரியம்தான். இல்லாட்டி இவ்வளவு வேகமா இதெல்லாம் நடந்திருக்காது."

"ம்க்கும்.. அவன் எங்கே வேகமாக நடத்துனான்.. நான்தானே மோப்பம் பிடிச்சு எல்லாத்தையும் ஓகே பண்ணது" மருமகள் கன்னத்தில் செல்லமாக குத்தினார் ரேவதி சிரித்தபடி. ப்ரீத்திக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அப்படியே ரேவதி மடியில் படுத்துக் கொண்டாள் ஒரு குழந்தை போல.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 17 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+