Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"என்..னம்..மா சொல்றீங்க.. புரியலை" .. நிலவுக்கு நெருப்பென்று பெயர் (16)

Subscribe to Oneindia Tamil

- சுதா அறிவழகன்

சுனில் இதை எதிர்பார்க்கவில்லை.. அம்மாவுக்கு எப்படி.. இதெல்லாம் தெரியும்... என்ற ஆச்சரியம் அவனை சுழற்றியடித்தது.

ரொம்ப தர்மசங்கடமாக உணர்ந்தான்.. நினைவு தெரிந்தது முதல் அவன் அம்மாவிடம் எதையுமே மறைத்தது இல்லை. ப்ரீத்தி விவகாரத்தைக் கூட சீக்கிரமே சொல்லிவிட வேண்டும் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான். ஆனால் அம்மா எப்படி மோப்பம் பிடித்தார் என்று அவனுக்குப் புரியவில்லை.

"என்..னம்..மா சொல்றீங்க.. புரியலை" திக்கித் திணறியது குரல்.

"உனக்கா புரியாது.. திருட்டுப் பயலே.. முழியே காட்டிக் கொடுத்துருச்சு உன்னை.. இதை நீட்டிக்க வேண்டாம்.. கல்யாணத்தை சீக்கிரமா முடிச்சுரலாம். மாமாவுக்கு இன்னிக்கு தகவல் கொடுத்து வரச் சொல்றேன்.. பேசி முடிவு பண்ணிக்கலாம்" அம்மா அடுக்கிக் கொண்டே போக.. தரையிலிருந்து நாலு அடி உயர்ந்தாற் போல உணர்ந்தான் சுனில்.

nilavkukku neruppendru peyar tamil series episode 16

அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்பதை விட ரொம்ப நிம்மதியாக உணர்ந்தான். தனக்குப் பிடித்தவள், தனது மனைவியாகப் போகிறாள். தனது தாயாருக்கும் அவளை ரொம்பப் பிடித்திருக்கிறது.. இதை விட ஒரு ஆண்மகனுக்கு என்ன சந்தோஷம் கிடைத்து விடப் போகிறது.

அப்படியே அம்மாவிடம் போய் கட்டி அணைத்துக் கொண்டான் சுனில்.. கூடவே நெற்றியில் முத்தமிட்டான்.. "தேங்க்ஸ்மா" இதைச் சொல்லும்போது அவனுக்குள் சின்னதாக அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. பெத்த மனசுக்கு அது கூடவா உணர முடியாது.. "உங்கப்பாவும் இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்டா" என்றார் அம்மா மென்மையான குரலில்.

சுனிலுக்குள்ளும் ஏக்கம் தழுவிக் கொண்டது. அம்மாவை இன்னும் அன்போடு அணைத்துக் கொண்டான் "நாங்க இரண்டு பேரும் இருக்கோம்மா உனக்கு" என்று அவன் சொன்னபோது அந்தத் தாயின் மனசை அப்படி ஒரு சந்தோஷம் கவ்விக் கொண்டது. மகனை தட்டிக் கொடுத்து உச்சி முகர்ந்தார்.

ப்ரீத்தி டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து முதலில் அம்மாவிடம் கையில் கப்பை எடுத்துக் கொடுத்தாள். பின்னர் சுனிலிடம் டிரேயோடு நீட்டினாள். சுனில் கப்பை எடுத்துக் கொண்டு ஓரப் பார்வையால் ப்ரீத்தியைப் பார்க்க.. அவனது உதட்டில் தெரிந்த புன்னகைக்கு ப்ரீத்திக்கு அர்த்தம் புரியவில்லை. கண்களை சுருக்கிக் கொண்டு "என்னப்பா" என்று மெளன மொழியில் கேட்டாள். அதற்கு சுனில் பதிலளிக்காமல் கண்ணடித்தான்.

ப்ரீத்திக்கு சுத்தமாக புரியவில்லை. டிரேயை கீழே வைத்து விட்டு சுனிலின் அம்மா அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவளிடம் "நீ சாப்பிடலையா" என்று அம்மா கேட்க.. "அப்புறம் குடிச்சிக்கிறேம்மா" என்று பதிலளித்தாள் ப்ரீத்தி.

டீயை குடித்து முடித்த கையோடு.. "சரி நான் முதல்ல வீட்டுக்கு கிளம்பறேன். போய் எல்லாம் ரெடி பண்ணி வைக்கிறேன்.. நீயும், சுனிலும் பின்னாடியே வந்து சேருங்க" என்று எழுந்தார் அம்மா.

"சரிம்மா.. எப்படி போவீங்க.. டாக்சி பிடிக்கட்டா" என்று சுனில் கேட்க.. "இல்லடா ஆட்டோ போதும்.. நான் போய்க்கிறேன். நீ ப்ரீத்தியை கிளப்பி கூட்டிட்டு வா" என்று சொன்னபடி வாசலை நோக்கி நடந்தார் அம்மா.

ரேழியில் கிடந்த செருப்பைப் போட்டுக் கொண்ட பின்னர் ப்ரீத்தியை நோக்கி திரும்பிப் பார்த்து "சீக்கிரம் கிளம்பி வாங்க ரெண்டு பேரும்" என்று கூறியபடி வெளியே நடந்தார்.. சுனிலும் கூடவே நடந்து போய் தெருவில் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் தனது தாயாரை ஏற்றி அனுப்பி வைத்தான்.

பின்னர் வேகமாக வீட்டுக்குள் புகுந்தான்.. அங்கே ப்ரீத்தி டீ டம்ளர்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.. வேகமாக கிட்டே வந்த சுனில்.. அப்படியே ப்ரீத்தியை இடுப்பைப் பிடித்து தூக்கி ஒரு சுத்து சுத்தினான்.. இதை ப்ரீத்தி எதிர்பார்க்கவில்லை.. "ஏய்.. என்ன பண்றே.. " என்று குழப்பமாக சத்தம் போட்டாள் ப்ரீத்தி.

"ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"

"ஏன் என்னாச்சு"

"சொல்ல முடியலை.. வார்த்தை இல்லை.. அவ்ளோ சந்தோஷம்"

"எதுக்குப்பா.. சொல்லிட்டு சுத்து.. தலை சுத்துது எனக்கு..முதல்ல இறக்கி விடு"

சுத்துவதை நிறுத்தி விட்டு ப்ரீத்தியை அப்படியே நிறுத்தினான்.. அவளோ தலை சுற்றி கீழே விழப் போனாள்.. தனது இடது கையால் அப்படியே தாங்கி தன்னோடு அணைத்துக் கொண்டான் சுனில்.

இப்போது இருவரது முகமும் நெருங்கியபடி நேருக்கு நேர்.. ப்ரீத்திக்கு மூச்சு வாங்கியது.. அதைப் பார்த்து பார்த்து ரசித்தான் சுனில்..

"என்னடா ஆச்சு"

"அம்மா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்க"

ப்ரீத்தியின் துடித்த உதடுகளில் மெல்ல முத்தமிட்டான் சுனில்.

"நிஜம்மாவா.. எப்போ"

"நீ டீ போடப் போயிருந்தப்போ.. அவங்களே சொல்லிட்டாங்க.. அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு"

ப்ரீத்திக்கு இன்னும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது.. சுனில் விடவில்லை.. இன்னும் அழுத்தமாக முத்தமிட்டான்.. ப்ரீத்திக்குத் தடுக்கத் தோணவில்லை.. கண்களை மூடிக் கொண்டாள். கண்ணிலிருந்து தாரை தாரையாக கொட்டியது.. சுனிலை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

"தேங்ஸ்டா".. அழுதபடி அவள் சொன்ன வார்த்தை அவளது காதுகளுக்கே கேட்டிருக்காது. அப்படி உடைந்து வந்தது வார்த்தை.

"ரிலாக்ஸ்.. அம்மாவுக்கு ரொம்ப ஹேப்பி.. அவங்களே 3 மாசத்துல கல்யாணம்னு சொல்லிட்டாங்க.. எனக்கு எப்படி இதை எக்ஸ்பிரஸ் பண்றதுன்னே தெரியலை.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்"

இருவரும் இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். இருவருக்குள்ளும் காதல் இன்னும் பல்கிப் பெருகி வழிந்தோடியது.

அப்படியே சில நிமிடங்கள் இருந்த நிலையில் இருவரும் மெல்ல இயல்புக்குத் திரும்பினர். சுனிலின் பிடியிலிருந்து விலகி வந்தாள் ப்ரீத்தி.. அவளது மனசில் அத்தனை நிம்மதி.

"சுனில், அத்தைக்கு நான் காலத்துக்கும் அடிமையா இருந்து சேவை செய்யனும்.. இதுதான் இனி என்னோட ஒரே லட்சியம்" உணர்ச்சி மேலிடக் கூறினாள் ப்ரீத்தி.

"நீ அடிமை இல்ல ப்ரீத்தி.. எங்களோட அன்பு தேவதை" சுனில் வார்த்தையைத் திருத்தினான் மெல்ல அணைத்தபடி.

"சரி சீக்கிரம் கிளம்புங்க.. நான் உடனே அத்தையைப் பார்க்கணும்.. எனக்கு இருப்பு கொள்ளலை"

"பார்ரா.. அத்தை வந்ததும் அத்தானை மறந்தாச்சாக்கும்" கிண்டலடித்தான் சுனில்.

"அத்தானாவாது, பொத்தானாவது.. இனிமே எனக்கு என்னோட அத்தை மட்டும்தான்.. அவங்க சந்தோஷம் மட்டும்தான் என் சந்தோஷம்" சிரித்தபடி கூறி விட்டு சுனிலிடமிருந்து விலகி உள்ளே ஓடினாள் சந்தோஷமாக.

சிட்டுப் போல ஓடிய ப்ரீத்தியைப் பார்த்து சந்தோஷம் பூக்க மெய் சிலிர்த்து நின்றான் சுனில்.

மனசு நிறைய மகிழ்ச்சியில் ததும்பினான் சுனில்.. அவனது வாழ்க்கையில் இப்படி ஒரு சந்தோஷமான தருணத்தை இத்தனை சீக்கிரம் சந்திப்போம் என்று அவன் கனவில் கூட நினைத்தது இல்லை.. அதிலும் ப்ரீத்தி போன்ற ஒரு தேவதையை மனைவியாக அடையப் போவதை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டான்.

தனது உள் மனதை உணர்ந்து அம்மா உடனடியாக திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.. அம்மாவை பற்றி தப்பா கணக்குப் போட்டுட்டோமே.. எதுவும் தெரியாதுன்னு.. ஆனால் அவங்க என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்காங்க.. நல்லா பாலோ பண்ணிட்டிருக்காங்க போலயே என்று எண்ணி தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டான் சுனில்.

"சுனில் நான் ரெடி.. போலாமா.. "

தன் முன்பு வந்து நின்ற ப்ரீத்தியைப் பார்த்து அப்படியே சொக்கிப் போய் விட்டான் சுனில். புடவையில் அப்படி அம்சமாக வந்து நின்றிருந்தாள் ப்ரீத்தி. அவசரமாக கிளம்பியதால் கொண்டை போட்டிருந்தாள். புடவையில் படு பாந்தமாக அம்சமாக இருந்தாள் ப்ரீத்தி..

"வாவ்.. அப்படியே ஸ்கூல் டீச்சர் மாதிரியே இருக்கே ப்ரீத்தி.. சூப்பர்"

சொல்லிச் சிலாகித்த சுனிலைப் பார்த்து அப்படி ஒரு வெட்கத்தைக் காண்பித்தாள் ப்ரீத்தி.. முகத்தில் அத்தனை அழகு..

"சரி சரி இங்கேயே இருந்தா எனக்கு ஆபத்து.. வாங்க வீட்டுக்குப் போலாம்.. அத்தை காத்திட்டிருப்பாங்க"

"ஆபத்தா.. அது என்ன ஆபத்து"

"அயோ.. வாயை நோண்டாதீங்க.. பேசாம வாங்க போலாம்"

இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே வந்தனர். சுனில் பைக்கைக் கிளப்ப.. பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள் ப்ரீத்தி.. இதுதான் இருவரும் முதல் முறையாக ஒரே பைக்கில் பயணம் செய்வது என்பதால் இருவருக்குள்ளும் உணர்வுகள் துள்ளி விளையாடின.

(தொடரும்)

பகுதி [ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+