For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

நவம்பர் 25ம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும். 2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், 'உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரத்தில் கென்யாவில் உள்ள பெண்களில் சரி பாதி வீதத்தினர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவதாக தொண்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபோம் கூறியுள்ளது. எனவே உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

டொமினிக்கன் குடியரசில் Dominican Republic, 1960 நவம்பர் 25ல் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ராபீல் ருஜிலோவின் Rafael Trujillo (1930-1961). உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே விசேஷமாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பிரபல்யமான இந்த மிராபெல் சகோதரிகள் லத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980ம் ஆண்டு முதல் அந்தத் தினம் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி முடிவடையும்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17ம் தேதி கூடிய போது ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும்.

பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்... இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

இங்கெல்லாம் உள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களாலும்; சட்ட ஒழுங்கு, பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.

பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள், உடல்ரீதியிலான வன்முறைகள், உளவியல் ரீதியிலான வன்முறைகள், பாலியல் வல்லுறவு, பாலியல் ரீதியிலான வன்முறை, பாலியல் ரீதியிலான சேட்டைகள், தொல்லைகள், பாலியல் அடிமை தரக்குறைவாக நடத்துதல் போர்க் குற்றங்கள்....இவ்வாறாக பல வடிவங்களில் இடம்பெறலாம்.
இங்கு துஸ்பிரயோகம் எனும் போது பெண்களின் சகல நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுதல், உண்மைக்கு புறம்பாக எப்பொழுதும் செயற்படத்தூண்டுதல், மதுபானம் அல்லது போதைவஸ்து போதையில் வக்கிர உணர்வை வெளிப்படுத்துதல், பணம் செலவு செய்வது தொடர்பாக கட்டுப்படுத்தல், பிறர் முன்னிலையில் அவமானப்படுத்தல், சொத்துக்கள், பொருள்களை சேதப்படுத்தல், துன்பமடையும் வகையில் பிள்ளைகள் அல்லது செல்லப்பிராணிகளை துன்புறுத்தல் அல்லது எச்சரித்தல், அடித்தல், கடித்தல், தள்ளுதல், குத்துதல், உதைத்தல், கிள்ளுதல் போன்ற செயல்களினூடாக மேற்குறிப்பிட்ட துன்புறுத்தல்கள் அல்லது எச்சரிக்கைகள் அமையலாம்.

ஆயுதங்களினால் தாக்குதல், விருப்பத்திற்கு மாறாக பாலியல் புணர்ச்சிக்காக கட்டாயப்படுத்துதல், சின்னச்சின்ன விடயங்களிலும் விமர்சிக்கப்படல் அல்லது குற்றம் சாட்டுதல் என்பன அடங்கும். துஸ்பிரயோகத்திற்குள்ளாகி இருக்கும் நபர் ஒருவர் அல்லது அவரைச் சார்ந்தோர் குறிப்பிட்ட நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகிறார் என்பதை உணர்வதோ அல்லது அடையாளம் காண்பதோ சில சந்தர்ப்பங்களில் மிகவும் கடினமாகி விடுகிறது. சிலர் விளையாட்டாக சில விடயங்களை செய்தாலும் அவை பாராதூரமான நோக்குடையதாக இருந்தால் அவையும் வன்முறையே.

பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள் எனும் போது அண்மைக்கால அறிக்கைகளின் படி மிகவும் அதிகரித்து வருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பணம் அல்லது பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக, சைகைமுலமான எச்சரிக்கையாக, வேறு நபர்களைத் தூண்டி விட்டு எச்சரிக்கை செய்வதாக, அச்சுறுத்தலின் கீழ் தன் விருப்பத்துக்கு மாறாக நடக்கச்செய்வதாக, தனிமைப்படுத்தி விடுவதாக, சூழ்ச்சி மனோபாவத்துடன் நடப்பதன் மூலமாக, சுயகௌரவம் தன்மானத்தை இழக்கும் படி செய்வதனூடாக, அச்சத்தை அல்லது பீதியை ஏற்படுத்தலூடாக, உடல்நலக்குறைவை ஏற்படுத்துதல் அல்லது மருத்துவ சிகிச்சையை புறக்கணிப்பதனூடாக இத்தகைய குடும்ப வன்முறை இடம் பெறலாம். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் சீதனம் காரணமாகவும், பெண்கள் பல வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகளின் போது பெரும்பாலானவை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வெளியே வருவதில்லை.

குடும்ப வன்முறை இனம், சமயம், பால், வயது போன்ற எந்த வேறுபாடின்றி யாவருக்கும் நடக்கலாம். குடும்ப வன்முறையானது வருமானத்தில் பற்றாக்குறையை ஏற்படுத்தி கல்வி நிலையில் பின்னடைவை ஏற்படுத்தத் தவறுவதில்லை. குடும்ப வன்முறையானது அந்நியோன்னியமாக ஒன்றாக வசிக்கும் எதிர்ப்பாலாருக்கிடையில், ஒரே பாலாருக்கிடையில், அல்லது ஒன்றாக வசிக்கும் நண்பர்களுக்கிடையில் இடம்பெறலாம் .

பெண்களுக்கெதிரான வன்முறைகளுள் பாலியல் வன்முறையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. பாலியல் வன்முறை எனும் போது விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தி உறவு கொள்ள நிர்ப்பந்திப்பது, விருப்பத்துக்கு மாறாக பாலியல் தூண்டல்களை ஏற்படுத்தக்கூடியவாறான நடத்தைகளை புரிதல், ஏமாற்றி அல்லது ஆள்மாறாட்டம் செய்து உறவு கொள்ளச் செய்தல், ஏதேனும் ஒரு உணவுப்பொருளுடன் அல்லது பானத்துடன் போதை தரக்கூடிய பொருளைக் கலந்து கொடுத்து உறவு கொள்வது, துணையின் சம்மதமில்லாமல் உறவு கொள்வது என்பனவும் பாலியல் வன்முறைக்குள் அடங்குகின்றன.

இரண்டாம் பக்கம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X