For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் முகம் பார்த்த கண்ணாடிகள்- 9: ஆனந்த விகடனில் நான் எழுதிய புதுமைத் தொடர்!

By Shankar
Google Oneindia Tamil News

-ராஜேஷ்குமார்

ஆனந்த விகடனில் நான் முதன் முறையாக எழுதிய தொடர்கதை 'ஒன்றும் ஒன்றும் மூன்று'. இது 1987 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் தொடர்கதையின் சுருக்கத்தை நான் விகடனுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆசிரியர் அவர்கள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தபோது, விகடனின் துணையாசிரியர் 'வீயெஸ்வீ'யிடமிருந்து எனக்கு போன் வந்தது.

"ராஜேஷ்குமார்! நீங்க நாளைக்கு சென்னையில் இருக்கணும்.. விகடன் ஆசிரியர் உங்ககூட பேசணுமாம்.. நீங்க அனுப்பி வெச்ச தொடர்கதையோட சுருக்கம் எனக்கு ஓகே. ஆனா ஆசிரியர் சில மாற்றங்களைப் பண்ணினா தொடர் ரொம்பவும் சிறப்பாயிருக்கும்னு சொல்றார். சென்னை வர முடியுமா?"

"நாளைக்கு எத்தனை மணிக்கு விகடன் அலுவலகத்தில் இருக்கணும் ஸார்?"

"பதினோரு மணிக்கு"

"இருப்பேன்"

மறுநாள் காலை பதினோரு மணிக்கு நான் அலுவலகம் போய்ச் சேர்ந்தபோது என்னை முதலில் வரவேற்றவர் கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள். தன்னுடைய அறைக்குக் கூட்டிக் கொண்டுபோய் உட்கார்த்தி வைத்துக் கொண்டு நிறைய பேசினார். அரசியல், அறிவியல், சினிமா, வரலாறு என்று அவர் பலதரப்பட்ட விஷயங்களைப் பேச, எனக்கு ஒரே மலைப்பு. கடைசியாகச் சொன்னார்:

Rajeshkumar's Naan Mugam Paarththa Kannadigal - 9

"ராஜேஷ்குமார்! நீங்க விகடனுக்கு முதன்முதலாய் ஒரு தொடர் கதை எழுதப் போறீங்க. அந்த தொடர்கதையோட சுருக்கத்தை நானும் படிச்சேன். விறுவிறுப்பான கதை. சம்பவங்கள் நிறைய இருக்கு... ஆனா ஒவ்வொரு வாரமும் தொடர்முடியும்போது ஒரு ட்விஸ்ட் வேணும். அடுத்த அத்தியாயத்தை உடனே படிக்கணும்ங்கற ஆவல் வாசகர்களுக்கு வரணும். அப்படி கதை சொல்ற ஒரு கலை உங்ககிட்ட இருக்கு. அந்தக் கலை விகடனுக்கு தொடர் எழுதும்போது இன்னமும் சிறப்பாய் வெளிப்படணும். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஆசிரியர் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கார். போய்ப் பாருங்க..."

விகடனில் வரப் போகும் ஒரு தொடருக்காக அங்கே பணியாற்றுபவர்கள் எப்படியெல்லாம் அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து மனம் ஒரு பக்கம் மகிழ்ச்சியில் குளித்தாலும், இன்னொரு பக்கம் தொடர்கதை சிறப்பாக அமைய வேண்டுமே என்கிற பதைபதைப்பும் உண்டாயிற்று.

சரியாய் 11.30 மணிக்கு நான் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களின் அறைக்குள் நுழைந்தபோது, அவர் இன்டர்காம் டெலிபோனில் நிதானமான குரலில் அழுத்தம் திருத்தமாய் பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று கை கொடுத்து உட்காரச் சொல்லிவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

"யார்க்காகவும் தலையங்கத்தை மாத்த வேண்டாம். ஆளும்கட்சி தப்பு பண்ணினா அந்தத் தப்புகளைச் சுட்டிக் காட்டுகிற முதல் ஆட்காட்டி விரலாய் விகடன் இருக்கணும். இந்த சீட்ல நான் இல்லாமே வேற யாராவது இருந்தாலும் அந்த வேலையைத்தான் பண்ணனும். தைரியமாய் ஃபாரத்தை ஏத்துங்க... பிரச்சினைன்னு வந்தா அதையும் பாத்துக்குவோம்..." இன்டர்காமின் ரிஸீவரை வைத்துவிட்டு என்னிடம் திரும்பினார். அப்போதுதான் அவரை முதன்முதலாய்ப் பார்க்கிறேன் என்கிற உணர்வே எனக்கு இல்லை. ஏதோ தினந்தோறும் பார்த்துப் பழகிய ஒரு மனிதர் போலவே எனக்குக் காட்சியளித்தார்.

Rajeshkumar's Naan Mugam Paarththa Kannadigal - 9

"எப்படி இருக்கீங்க ராஜேஷ்குமார்?"

"நல்லாருக்கேன் ஸார்"

"நல்லாவும் கதை எழுதறீங்க... சாவியில் உங்க தொடர்கதை 'இரண்டாவது தாலி' படிச்சேன். கதையை நல்லா கொண்டு போய், ஒரு பொயடிக் ஜஸ்டிஸோட முடிச்சிருந்தீங்க...! ஒரு ரைட்டர்க்கு அதுதான் வேணும்"

"உங்க பாராட்டுக்கு நன்றி ஸார்!"

"அடுத்த தடவை நான் உங்களுக்கு நன்றி சொல்ற மாதிரி விகடன்ல நீங்க எழுதப் போற தொடர் அமையணும்!"

"கண்டிப்பா அமையும் ஸார்!"

"சரி...! கதையைப் பத்தி பேசிடுவோமா?"

நான் தலையாட்டிக் கொண்டிருக்கும்போதே, அவர் தனக்குப் பக்கத்தில் இருந்த வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியை நகர்த்தி வைத்துக் கொண்டு, அதைத் திறந்தார்.

வெற்றிலையும், பாக்கு சீவலும், சுண்ணாம்பு டப்பியும் வெளியே வந்தன. ஒரு வெற்றிலையை எடுத்தவர், அதன் காம்பைக் கிள்ளிப் போட்டுவிட்டு, வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத் தடவி, அதில் பாக்கு சீவலைப் போட்டு மடித்து சுருட்டி வாய்க்குள் போட்டு கண்மூடி மென்றார். கண் மூடிய நிலையிலேயே கூப்பிட்டார்.

"ராஜேஷ்குமார்"

"ஸார்..."

"அந்தக் கதையோட சுருக்கத்தை ஒரு வாட்டி சொல்லுங்க....! அவசரப்படாம நிறுத்தி நிதானமா சொல்லுங்க!"

நான் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அவருடைய உதடுகள் தாம்பூலத்தை மென்று கொண்டிருக்க, நான் தொடர்கதையின் சுருக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். சுருக்கம் என்று சொல்லுவதைவிட, கதையை நான் அத்தியாயம் அத்தியாயமாய் பிரித்து கோர்வையாகச் சொல்லிக் கொண்டே வந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும் எதுமாதிரியான ட்விஸ்ட் வரும் என்பதையும் குறிப்பிட்டேன். அவர் கண்களை மூடியவாறே நான் சொன்ன கதையை தன் மனத்திரையில் ஓட விட்டபடி கேட்டுக் கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட முப்பது நிமிடம்.

கதையைச் சொல்லி முடித்தேன். பாலசுப்பிரமணியன் அவர்கள் கண்களை மெல்லத் திறந்தார். என்னைப் பார்த்து ஒரு சின்னப் புன்னகையை உதிர்த்தபடி சொன்னார்:

"பேஷ்...! நீங்க எழுதிக் கொடுத்த கதைச் சுருக்கத்தைக் காட்டிலும், இப்ப நீங்க சொன்னது கோர்வையாகவும் இருக்கு, வேகமாகவும் இருக்கு. தொடர் நல்லா வரும். நான் கதைச் சுருக்கத்தைப் படிச்சுட்டு சில மாற்றங்களைச் செய்யலாம்னு நினைச்சேன். ஆனா இப்ப யோசிச்சுப் பார்க்கும்போது, எந்த மாற்றமும் தேவையில்லைன்னு என்னோட மனசுக்குப் படுது."

"தேங்க்ஸ் ஸார்"

"இந்தத் தொடர்கதையில் இதுவரையிலும் எந்த ஒரு தொடர்கதையிலும் வராத ஒரு அதிசயம் இருக்கு. அது என்னான்னு உங்களுக்குப் பிடிபடுதா?"

நான் யோசித்துப் பார்த்தேன். எனக்கு எதுவும் பிடிபடவில்லை. இருந்தாலும் சொன்னேன்.. "க்ளைமாக்ஸோட முடிவு கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கு... அதைச் சொல்றீங்களா ஸார்?"

"அது இல்லை... வேற ஒரு விஷயம் இருக்கு. எனக்கே அது இப்பத்தான் பிடிபட்டது..."

நான் ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்துவிட்டு தலையாட்டினேன். "தெரியலை ஸார்!"

"குழந்தையைப் பெற்ற அம்மாவுக்கே அது தெரியலைன்னா எப்படி...? பரவாயில்லை.. நானே சொல்றேன். இந்தக் கதையில் வர்ற கதாநாயகியோட பேர் பூரணி. ஆனா இந்த பூரணி, தொடர்கதையோட எந்த ஒரு அத்தியாயத்திலும் வர்றதே இல்லை. ஆனா அவரோட பேர் மட்டும் கதையின் முதல் அத்தியாயத்திலிருந்து கடைசி அத்தியாயம் வரைக்கும் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. கதையில் வர்ற எல்லா கேரக்டர்ஸும் அவளைப் பற்றிப் பேசறாங்க. ஆனா அவ எங்கேயும் முகம் காட்டறதேயில்ல.. கவனிச்சீங்களா?"

நான் யோசித்துப் பார்த்தேன். யோசிக்க யோசிக்க அந்த அதிசயம் பிடிபட்டது.

உண்மைதான். கதையின் நாயகி பூரணி. அவளுடைய கணவன் பாலமுரளி. பாலமுரளி வெளியூர் போய்விட்டு வீடு திரும்பும்போது வீடு பூட்டப்பட்டு இருக்கும். 'பூரணி எங்கே போனாள்?' என்று தெரியாத நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் போகிறான் பாலமுரளி. வீட்டில் பொருள்கள் வைத்த இடத்தில் வைத்தபடி இருக்கின்றன. 'பூரணி எங்கே போனாள்.. என்ன ஆனாள்?' என்பதுதான் கதை. கதை முழுக்க பூரணியையே சுற்றி வரும். ஆனால் கடைசி வரையிலும் பூரணி வாசகர்களின் பார்வைக்குத் தட்டுப்படவே மாட்டாள்.

நான் விகடன் ஆசிரியரை வியப்போடு பார்த்தேன்.

"ஸார்! எனக்கு அது தோணவேயில்லை!"

"தொடர் முடியறபோது ஒரு போட்டி வைப்போமா?"

"என்ன போட்டி ஸார்?"

"வாசகர்களே...! 'ஒன்றும் ஒன்றும் மூன்று..' என்ற ராஜேஷ்குமாரின் தொடர்கதையைப் படித்துவிட்டீர்களா... ? இப்போது உங்களுக்கு ஒரு போட்டி.

இந்தத் தொடர்கதையில் ஒரு புதுமை ஒளிந்து கொண்டு இருக்கிறது. அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க உங்களால் முடிகிறதா?"

கண்டுபிடிக்க முடிந்தால் எழுதி அனுப்புங்கள். உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது!"

போட்டியை வைக்க நானும் ஒப்புக் கொண்டேன். ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

தொடர் முடிய இரண்டு அத்தியாயங்கள் மீதி இருக்கும்போதே வாசகர்களில் பலர் விமர்சனக் கடிதங்களில் 'கதையில் கதையின் நாயகி பூரணி தன் முகத்தைக் காட்டவே இல்லையே! கடைசி அத்தியாயத்திலாவது அவள் தன் முகத்தைக் காட்டுவாளா?' என்று கேட்டு வரவே, ஆசிரியர் போட்டி அறிவிப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

விகடனில் அதற்குப் பிறகு, ஊமத்துப் பூக்கள், நீல நிற நிழல்கள், கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு, இனி மின்மினி போன்ற தொடர்கள் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.

'கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு' என்ற தொடரில் சைக்கோ பேர்வழி பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி வைத்துக் கொண்டு அவன் டார்ச்சர் செய்வதை நான் விவரித்து எழுதியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பெண்கள் விகடன் ஆசிரியருக்குப் போன் செய்து, 'ராஜேஷ்குமாரை இப்படியெல்லாம் எழுதச் சொல்லாதீர்கள். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே எங்களுக்கு பயமாக இருக்கிறது' என்று சொல்ல, ஆசிரியர் என்னிடம், 'அப்படி எழுத வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். ஒரு சைக்கோ பேர்வழி அப்படித்தான் இருப்பான் என்று நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வாசகர்களுக்கு, குறிப்பாக, வாசகிகளின் உணர்வுகளுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அப்போது அவர் அப்படிச் சொன்னது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தாலும், பின்னாளில் அவர் சொன்னது எவ்வளவு அர்த்தம் பொதிந்தது என்பதைப் புரிந்துக் கொண்டேன்.

எழுத்துலகில் என்னை வளர்த்தவர் எஸ்ஏபி அவர்கள்,
என்றால் என்னைச் செதுக்கியது விகடன் பாலன் அவர்கள்!

-மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை..

English summary
This is the 9th episode of Writer Rajeshkumar's Naan Mugam Paartha Kannadigal series.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X