For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயாவதி ஜாலம்-திடீரென வலுவான 3வது அணி!!

By Staff
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்&அறிவழகன்

டெல்லி: இதுவரை இல்லாத அளவுக்கு திடீரென புதிய வலிமையுடனும், புதிய பொலிவுடனும் மாறியுள்ளது 3வது அணி. இந்த அணிக்கு திடீரென இவ்வளவு பலம் கிடைக்கக் காரணமாக இருந்த உ.பி. முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியே இந்த அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறுது.

தேசிய அளவில் இதுவரை காங்கிரஸ் தலைமையில் உள்ள அணியும், பாஜக தலைமையிலும் உள்ள அணிகளே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன. வலுவாகவும் உள்ளன. நாட்டில் உள்ள பிராந்திய கட்சிகள் இந்த இரு அணிகளில் ஏதாவது ஒன்றைத்தான் அண்டியிருக்க வேண்டியுள்ளது.

இந்த இரு அணிகள் தவிர இடதுசாரிகள் தனி அணியாக உள்ளனர். இந்த நிலையில் கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக 3வது அணி உருவானது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டில் வைத்து இந்த அணிக்கு ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி என பெயர் சூட்டப்பட்டு அதை ஜெயலலிதா தனது வாயால் அறிவித்தார்.

அப்போதைக்கு அணியின் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. காரணம், ஜெயலலிதா, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தலைவராக போட்டா போட்டி போட்டது தான்.

இந்த அணியில் இடம் பெற்றிருந்த அனைத்து தலைவர்களுமே முன்னாள் முதல்வர்கள் என்பதால் இது தேறாத அணி என்று காங்கிரஸ் கிண்டலடித்தது.

அவர்கள் சொன்னது போலவே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாகவே உடைந்தது 3வது அணி. இந்த அணியை உடைத்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

மூன்றாவது அணியில் இருந்து கொண்டே குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தார். அதிமுக ராஜ்யசபா எம்பிக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தது குறித்து எனக்கே தெரியவில்லை என்று முழு பூசணிக்காயை மறைக்க முயன்று கேலிக்குள்ளானார்.

இதையடுத்து மூன்றாவது அணியில் பிசுபிசுத்தது. இந் நிலையில் அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் முலாயம் சிங்கும் இந்த அணியிலிருந்து கழன்று கொண்டு போக 3வது அணி இனி அவ்வளவுதான் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், யாரும் எதிர்பாராத புதிய அணியாக, 3வது அணி திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் மாயாவதியும்-மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத்தும் தான்.

காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவை வாபஸ் பெற்றவுடன் காரத் சந்தித்தது மாயாவதியைத் தான். அவரை மையமாக வைத்து முக்கிய கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்தார் காரத்.

இதில் முதலில் விழுந்தது ஆந்திராவில் தனி மாநிலம் கோரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்). காங்கிரசுக்கு ஆதரவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கட்சி மாயாவதியுடன் இணைந்தது.

இது தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் ஷாக் தந்தது. ஆந்திராவில் தனது ஆட்சி போக மிக முக்கிய காரணமாக இருந்த டி.ஆர்.எஸ். மாயாவதியுடன் கைகோர்த்துவிட்டால், தனது நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதால் அவராகவே 3வது அணியை விட்டு ஓடி வந்துவிட்டார்.

மாயாவதியை பிரதமராக ஏற்பேன் என்று டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர் ராவ் சொன்னதையே இன்னும் உரக்கமாக சொல்லி மாயாவதியிடம் சரண்டராகிவிட்டார் நாயுடு. இதனால் எரிச்சலானாலும் டி.ஆர்.எஸ். தொடர்ந்து மாயாவதி அணியிலேயே இப்போதும் உள்ளது.

இதையடுத்து ஜெயலலிதாவைப் போலவே, எப்போது என்ன செய்வார் என்று யாராலும், எப்போதுமே நம்ப முடியாத தேவெ கெளடாவும் மாயாவதியுடன் கைகோர்த்துவிட்டார்.

கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவை பிடியில் வைத்திருக்கும் ரெட்டி சகோதரர்களின் பெல்லாரி சுரங்கங்களை நாட்டுடமையாக்கினால் ஆதரவு என, நடக்கவே முடியாத விஷயத்தை நிபந்தனையாகப் போட்டு காங்கிரஸை வாட்டி வந்தார் கெளடா.

(இந்த ரெட்டி சகோதரர்களுக்கும் கெளடாவின் மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கும் கடும் மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது).

கெளடாவின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்காததால் அல்லது ஏற்க முடியாததால் மாயாவதி பக்கமாய் வந்துவிட்டார் கெளடா.

இதையெல்லாம் விட காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி தந்தது முன்னாள் பிரதமர் சரண்சி்ங்கின் மகனும் 3 எம்பிக்கள் கொண்ட ராஷ்ட்ரீய லோக் தள் தலைவருமான அஜீத் சிங் தான். தனது தந்தையின் ஆட்சியை 70களி்ல் காங்கிரஸ் கவிழ்த்ததையும், விபிசிங்கி்ன் ஆட்சியை கவிழ்த்ததையும் மறக்கவே இல்லை.

கடைசி நேரம் வரை காங்கிரசுடன் பேசி வந்த அவர் மாயாவதி அணிக்கு தாவிவிட்டார்.

இவ்வாறாக மாயாவதி தலைமையில் திடீரென ஒரு அணி உருவாகிவிட்டதால், அதுவே உண்மையான மூன்றாவது அணியாக மாறிவிட்டது.

இப்போதுள்ள மூன்றாவது அணியில் செளதாலா உள்ளிட்ட சில துக்கடாக்களே உள்ளனர். அவர்களும் அதை அப்படியே அம்போவென விட்டுவிட்டு மாயாவதி பக்கமாய் வருவதற்கு அதிக நாட்கள் பிடிக்காது.

கூடவே இடதுசாரிகளும் மாயாவதி பக்கம் இருப்பதாலும், அவரை பிரதமராக ஏற்பதாக அறிவித்துள்ளதாலும் மத்தியில் அடுத்து நடக்கவுள்ள தேர்தலில் இந்த அணி காங்கிரஸ்-பாஜகவுக்கு மாபெரும் சவாலாக விளங்கப் போவது நிச்சயம்.

இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தால் அதற்கான முழு கிரெட்டும் பாஜகவுக்கே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை மாறிவிட்டது. ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு மாயாவதி அமைத்த கூட்டணியே முக்கிய காரணமாக இருக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. இது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளது.

மேலும் உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ்-முலாயம் கூட்டணியை எதிர்கொள்ள மாயாவதியுடன் கூட்டு சேர பாஜக திட்டமிட்டிருந்தது. இதை மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் காரத் புகுந்து கெடுத்துவிட்டார்.

மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால், மதவாத பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து எங்களைக் கவிழ்த்துவிட்டனர் இடதுசாரிகள் என காங்கிரஸ் ஒப்பாரி வைக்க திட்டமிட்டிருந்தது. அதையும் இந்த புதிய மூன்றாவது அணி தடுத்துவிட்டது. மதவாத கட்சியோடு சேரவில்லை, மாயாவதி தலைமையிலான மதசார்பற்ற அணியில் தான் நாங்கள் இருக்கிறோம் என இடதுசாரிகள் தெளிவாக பதில் சொல்லிவிடுவார்கள்.

எல்லா தலைவர்களும் மாயாவதியை பிரதமராக்க ரெடி என்று ஓடுவதற்கு முக்கியக் காரணம், அவரது 'கரிஸ்மா' மற்றும் அவர் பின்னால் அணி திரண்டிருக்கும் தலித் மக்கள் தான்.

தலித் ஒருவரை பிரதமராக்குவோம் என்று சொல்லியே அந்தச் சமூக மக்களின் வாக்குகளையும், பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்லி சிறுபான்மையினரின் ஓட்டுக்களையும் இந்த அணி வளைக்க முயலும்.

இதன் மூலம் வரும் தேர்தலில் இந்த அணி காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரித்தால் பிரதமர் கனவி்ல் உள்ள அத்வானிக்கும் பாஜகவுக்கும் தான் பெரும் சரிவாக அமையும்.

இந்த அணி, ஏற்கனவே தோல்விக்கு தயாகாவிட்ட காங்கிரஸை விட, வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாஜகவுக்குத் தான் பலத்த இடையூறாக இருக்கப் போகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு 3வது அணி மற்றும் இடதுசாரித் தலைவர்கள் கூடவுள்ளனர். அப்போது புத்தம் புதிய 3வது அணி அறிவிக்கப்படும். அதில், மாயாவதி தலைவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என்று இடதுசாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அணியில் விஜய்காந்த் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மூன்றாவது முக்கிய கட்சிகளை இழுக்கவும் இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பேச்சுக்கள் விரைவில் தொடங்கும் என இடதுசாரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவிலான இந்த திடீர் அரசியல் மாற்றங்கள் திமுகவுக்கும், 3வது அணியின் காலை வாரிவிட்ட ஜெயலலிதாவுக்கும் பெரும் பதற்றத்தை தந்திருப்பது நிச்சயம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X