For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டன்கர்க்.. இது கடலோர கவிதை அல்ல!

By AK Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

வானிலிருந்து ஜெர்மன் போர் விமானங்கள் வீசும் எச்சரிக்கை நோட்டீஸ்கள் மழையாய் விழ ஆரம்பிக்கிறது டன்கர்க் படம்.

ஹாலிவுட்டின் மிரட்டல் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் லேட்டஸ்ட் இது. படத்தில் காட்டப்படும் கதாபாத்திரங்களுக்குள் படத்தை பார்க்க வந்தவர்களையும் மனரீதியாக நுழைத்துவிட்டு, ஜாலியாக வேடிக்கை பார்ப்பவர் கிறிஸ்டோபர் நோலன்.

இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டத்தில் இருந்த 1940ம் ஆண்டு மே-ஜூன் காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்தப் படம். ஜெர்மனி எல்லா பக்கமும் ஆக்டோபஸ் மாதிரி தனது படைகளை பரப்பி அண்டை நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலகட்டம்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

பிரான்ஸ் நாட்டுக்குள் ஜெர்மன் படைகள் நுழைவதைத் தடுக்க மெஜினாட் லைன் என்ற பெயரில் மாபெரும் அரண்களை பிரான்ஸ் அமைத்துக் கொண்டு பாதுகாப்பாக உணர்ந்த சமயத்தில், பெல்ஜியம்- லக்ஸம்பெர்க்- ஹாலந்து வழியாக பிரான்சுக்குள் அதிரடியாக நுழைந்தன ஹிட்லரின் படைகள்.

பிரான்ஸ் நாட்டின் வட பகுதிக்குள் மிக ஆழமாக ஊடுருவிய ஜெர்மன் படைகள் அங்கே தங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்த 1 லட்சம் பிரான்ஸ் மற்றும் 3 லட்சம் இங்கிலாந்து படைகளை அடித்து, துவம்சம் செய்து, அனாதைகள் மாதிரி தள்ளிக் கொண்டு போய் நிறுத்திய இடம் தான் டன்கர்க்.

பிரான்ஸ்- இங்கிலாந்து இடையிலான இங்கிலீஷ் சேனல் எனப்படும் கடல் பகுதியின் விளிம்பு நகரம் தான் டன்கர்க். இந்த நகரிலிருந்து இங்கிலாந்து கடற்கரை 33 கி.மீ. தூரமே.

அடுத்த தெரு வரை ஜெர்மன் படைகள் வந்துவிட்ட நிலையில், 1 வாரமாக கடற்கரையில் மாட்டிக் கொண்டு அல்லாடும் 4 லட்சம் இங்கிலாந்து- பிரான்ஸ் படைகளின் துயரமே இந்தப் படம்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

1 வாரமாக உணவு, நீர் இல்லாமல் அல்லாடும் இந்தப் படைகளை மீட்க போர்க் கப்பல்களை அனுப்பாமல் தாமதிக்கிறது இங்கிலாந்து. காரணம், ஜெர்மன் கடற்படையை சமாளித்து தனது நாட்டைக் காக்க கப்பல்கள் தன் எல்லையிலேயே இருப்பதே சரி என இங்கிலாந்து அரசு நினைக்கிறது.

அதே போல தனது வான் எல்லைக்குள் நுழையும் ஜெர்மன் போர் விமானங்களை எதிர்கொள்ளும் தேவை மறுபுறம். இதனால் போர் விமானங்களையும் டன்கர்க் பக்கம் அனுப்ப யோசிக்கிறது இங்கிலாந்து.

தங்களுக்கு உணவு போடக் கூட இங்கிலாந்து போர் விமானங்கள் வராத நிலையில், தங்களை மீட்க இங்கிலாந்து கப்பல்கள் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவே என்பதை உணர்ந்த அந்த 4 லட்சம் ராணுவ வீரர்களின் பரிதவிப்பை தான் டன்கர்க் படத்தில் காட்டுகிறார் கிறிஸ்டோபர் நோலன்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

கப்பல்கள் வந்து நிற்க கடலுக்குள் கட்டப்பட்ட சிறிய பாலத்திலும் கடற்கரையிலும் பரவி நின்று மீட்புக் கப்பல்கள் வராதா, வானிலிருந்து உணவுப் பொட்டலம் விழாதா என ஏக்கப் பார்வையில் நிற்கும் அந்த ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது ஜெர்மன் போர் விமானங்கள் வந்து குண்டு போட்டு உயிர்களை கொத்து கொத்தாக காலி செய்யும்போது, இலங்கையின் இறுதிப் போர் காலத்தில் நடந்த நந்திக் கடல் கொடூரம் நம் முன் வந்துவிட்டுப் போவது நிஜம்.

டன்கர்க் படம் முழுவதுமே போர், மரண பயம், பசி, குண்டுவீச்சு என நகர்ந்தாலும் படத்தின் மெல்லிய அடிநாதம் மனிதநேயம் தான்.

மாட்டிக் கொண்ட இந்த வீரர்களை காப்பாற்றுங்கள் என சிறிய படகுகளின் உரிமையாளர்களுக்கு இங்கிலாந்து கடற்படை கோரிக்கை விடுக்க, வரிசையாய் புறப்பட்டு வந்து குண்டுவீச்சுகளுக்கு நடுவே இவர்களை மீட்க முயலும் மீனவர்கள், சொகுசுப் படகுகளின் உரிமையாளர்கள் தான் நிஜ ஹீரோக்கள்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

போனால் போகட்டும் என இங்கிலாந்து அனுப்பும் 3 போர் விமானங்கள், அந்த விமானிகளுக்கு நேரும் கதி, அதில் ஒரு விமானி செய்யும் சாகங்கள், இறுதியில் அவர் செய்யும் தியாகம் என திரையில் படம் ஓட, ஓட நாமும் அந்த கடற்கரையில் சிக்கிக் கொண்டு ஓடும் ராணுவ வீரர்களோடு சேர்ந்து ஓடுவது மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறார் நோலன்.

இவரது படங்களின் கேரக்டர்கள் பெரும்பாலும் சமூக சிறைவாசிகள். அதிலிருந்து அவர்கள் விடுபட முயலும் தருணங்களைத் தான் படமாகக் காட்டுவார். 1998ம் ஆண்டில் வெளி வந்த இவரது முதல் சிறிய பட்ஜெட் படமான பாலோயிங் ஆகட்டும், அது பேட்மேன் படங்களாக இருக்கட்டும், கனவுகளுக்குள் நுழைந்து ஐடியாவைத் திருடும் இன்செப்ஷன் ஆகட்டும், பூமிக்கு பதிலாக இன்னொரு கிரகம் தேடிச் செல்லும் இன்டர்ஸ்டெல்லார் ஆகட்டும்... அனைத்திலுமே அடுத்த கட்டம் நோக்கிய சுய விடுதலைக்கான மனிதர்களின் முயற்சியே இவரது கதைகளின் மையமாக இருக்கும்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

இவரிடம் 4 லட்சம் போர் வீரர்களின் விடுதலை என்ற லைன் கிடைத்துவிட்டால் சும்மா விடுவாரா?

வழக்கமான கதை ஓட்டமாக இல்லாமல், அதை non lenear எனும் முறையில் கதைக்குள் முடிச்சுகளை போட்டுவிட்டு அதை படம் பார்க்கும் நம் மூளையை விட்டு அவிழ்க்க வைக்க முயல்பவர் நோலன். இதிலும் அதே பார்முலா. 1 வாரமாக மாட்டிக் கொண்ட ராணுவத்தினர், காலையில் கிளம்பி வந்து காக்க முயலும் படகுகள், 2 மணி நேரம் முன் கிளம்பி வந்த இங்கிலாந்து போர் விமானங்கள் என மூன்று சம்பவங்களும் ஒரு புள்ளியில் சந்திக்கும் இடம் தான் கிளைமாக்ஸ்.

Dunkirk.. This is how Christopher Nolan turns a WWII battle into a symphony

இதுவரை வெளியானதிலேயே மிக தத்ரூபமான போர் படம் என்ற பெயரோடு உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது டன்கர்க்.

நோலனின் படங்களுக்கே உரிய பிரமாண்டமான காட்சிகள், மிரட்டலான இசை இதிலும். கூடவே, உண்மையில் நடந்த சம்பவம் என்ற கோணமும் சேர்ந்து கொண்டு நம்மையும் அந்தக் கடலோரத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட வைக்கிறார் நோலன்.

English summary
Christopher Nolan’s World War II drama Dunkirk tells a fictional story of the very real British- French defeat against Germany in Dunkirk. It has bowled over critics and taken $100m at the global box office in barely a week
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X