India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

த மார்ஷியன்.. இது படமல்ல, பாடம்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

த மார்ஷியன்.

கிளாடியேட்டர், புரோமிதியஸ், ராபின் ஹூட், பிளாக் ஹாக் டவுன், ஹனிபல், எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் என மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் படம் இது.

பூமிக்கு மனித இனம் வந்தது எப்படி என்பதைத் தேடிச் செல்லும் படம் தான் புரோமிதியஸ். இதற்காக LV-223 என்ற கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. மனித இனத்தை அழித்து ஒழிக்கும் அபாயம் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்கின்றனர். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு அரைவேக்காடு என்ற விமர்சனத்தை பெற்றது அந்தப் படம்.

The Real Science Behind The Martian

அந்த விமர்சனங்களை மொத்தமாக துடைத்து எறியும் படம் தான் மார்ஷியன். இதே பெயரில் வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

மனிதனின் பலமே புத்திசாலித்தனமும் விடா முயற்சியும் தான். இந்த இரண்டும் இருக்கும் வரை மனிதன் எந்த பிரச்சனையையும் சமாளிக்க முடியும், அது மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்பட்டாலும் கூட என்பதை அழுத்தமாகவும் அறிவியல்பூர்வமாகவும் நம்பும்படியும் சொல்கிறது இந்தப் படம்.

செவ்வாய் எனப்படும் மார்ஸ் கிரகத்துக்கு மனிதன் பல பயணங்கள் மேற்கொண்டு அங்கே ஒரு ஆய்வகத்தையும் அமைத்துவிட்ட நிலையில் தொடங்குகிறது படம். அந்த கிரகத்துக்கு செல்லும் புதிய குழு, பெரும் புயலில் சிக்க, உடனடியாக அவர்கள் அங்கிருந்து வெளியேறி பூமிக்குத் திரும்புகின்றனர். இவர்களும் 4 வருடம் பயணம் செய்தே பூமியை அடைய முடியும்.

The Real Science Behind The Martian

இதில் மேட் டேமன் மட்டும் மார்ஸ் கிரகத்தில் தனித்து விடப்படுகிறார். புயலில் சிக்கி அவர் இறந்துவிட்டதாக நினைத்து மற்றவர்கள் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்க, ஒரு வழியாக உயிர் பிழைத்து தனது ஆய்வகத்துக்குத் திரும்புகிறார். மிஞ்சி இருப்பது இந்த ஆய்வகமும், ஒரு சிறிய ரோவரும் தான் (பேட்டரி கார்).

பூமியிலிருந்து 55 மில்லியன் கி.மீ. தொலைவில், யாருமில்லா கிரகத்தில், புயலில் முழுமையாக சேதமடைந்துவிட்ட ஆண்டனாக்களால் பூமியோடு தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாமல் மாட்டிக் கொண்டவர் என்ன செய்வார். தனது மரணத்தை எதிர்நோக்கி காத்திருப்பார். இது தானே வழக்கம்.

ஆனால், நான் சாகக் கூடாது. எப்படியாவது உயிரோடு இருக்க வேண்டும், நான் உயிரோடு இருப்பதை நாஸாவுக்குத் தெரிவிக்க வேண்டும், அவர்கள் என்னை எப்படியும் மீட்டிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு தனது புத்திசாலித்தனத்தையும் பிரச்சனைகளை எப்படி பாஸிட்டிவாக அணுகுவது என்ற திறமையையும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகளில் அதகளம் செய்கிறார் மேட் டேமன்.

The Real Science Behind The Martian

பூமியிலிருந்து உடனடியாக ஒரு விண்கலம் கிளம்பினால் கூட மார்ஸ் கிரகத்தை அடைய 4 ஆண்டுகள் ஆகும் என்பதால், தான் உயிரோடு இருக்க முதலில் நீரை தயாரிக்கவும் அடுத்ததாக ஆய்வக சூழ்நிலைக்கு உள்ளேயே உருளைக்கிழங்கையும் பயிரிடவும் திட்டம் போடுகிறார்.

ஆய்வு மையத்தில் இருக்கும் கருவிகள், ரசாயனங்களை வைத்தே நீரை உருவாக்குவதோடு, தன்னுடன் வந்த விண்வெளி வீரர்களின் கழிவுகளை செவ்வாய் கிரக மண்ணில் கலந்து உரமாக்கி உருளைக் கிழங்கை வெற்றிகரமாக பயிரிடுகிறார்.

அதிலும் ஒரு விபத்து ஏற்பட்டு பயிர்கள் காலியாகிவிடுவதோடு, அடுத்தடுத்து தொடர் பிரச்சனைகள்.

தான் உயிரோடு இருக்க ஒரே வழி, பூமிக்கு நாம் உயிரோடு இருப்பதை தெரிவிப்பது தான் என்ற முடிவுக்கு வரும் மேட் டேமன், செவ்வாய் கிரத்தில் உண்மையிலேயே இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்ட Pathfinder விண்கலத்தைத் தேடி கிளம்புகிறார் (கதை எதிர்காலத்தில் நடப்பதால், அந்த விண்கலம் காலாவதியாக. மண்ணில் புதைந்து கிடக்கிறது)

The Real Science Behind The Martian

அதை ஒரு வழியாக தேடிப் பிடித்து பூமியோடு தகவல் பரிமாற்றம் செய்து உயிரோடு இருப்பதை சொல்கிறார். இதையடுத்து பூமியிலிருந்து உணவு, நீருடன் ஒரு விண்கலத்தை அவசரமாக அனுப்ப நாஸா எடுக்கும் முயற்சிகளும் தோற்றுவிட, அவர்களுக்கு சீனா தங்களது ரகசியமான அதிவேக ராக்கெட்டை தந்து கை கொடுக்கிறது. அதுவும் கூட செவ்வாய் கிரகத்தை அடைய 3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அடுத்ததாக இந்த கிரகத்துக்கு நாஸா அனுப்பப் போகும் விண்கலம் தரையிறங்கும் இடத்தை நோக்கி பேட்டரி காரில் பயணிக்கிறார்.

இதற்காக எக்ஸ்ட்ரா பேட்டரிகளை அவர் சேகரிப்பதும், குளிருக்காக ஹீட்டரை போட்டால் பேட்டரிகளின் பவர் வேகமாக காலியாகும் என்பதால் அதைத் தவிர்க்க அந்த காருக்குள், விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புளுட்டோனியம் உலையை பயன்படுத்துவதும், நீர் தயாரிக்க புதிய வகையான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் என படம் முழுக்கவே அழகழகான புத்திசாலித்தனமான ஹை டெக் அறிவியல் செய்திகள்.

The Real Science Behind The Martian

இவரை மீட்க என்ன தான் செய்வது என நாஸாவின் மூத்த விஞ்ஞானிகள் எல்லாம் குழம்புகையில், ஒரு இளம் விஞ்ஞானி மேட் டேமனை மீட்க அட்டகாசமான ஐடியா தருகிறார்.

செவ்வாய் கிரகத்திலிருந்து கிளம்பி பூமியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கும் விண்கலத்தை அப்படியே பூமியை ஒரு ரவுண்ட் அடிக்க வைத்து, பூமியின் சுற்று விசையையே விண்கலத்துக்கான உந்து சக்தியாக (sling shot) மாற்றி, அதை மீண்டும் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணிக்க வைக்கலாம் என்கிறார்.

அதை வைத்து நாஸா எடுக்கும் கடைசி கட்ட முயற்சிகள், செவ்வாய் கிரகத்திலிருந்து மேட் டேமன் விடுபட்டு இந்த விண்கலத்துக்குள் நுழைய நாஸா தரும் யோசனைகள், இந்த மீட்புத் திட்டத்துக்கு மேட் டேமனும் தரும் கூடுதல் ஐடியாக்கள்... என நாஸா என்பது உலகின் டாப் மூளைகளின் சங்கமம் என்பதை மீண்டும் உணர வைக்கிறார்கள்.

இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பவராக ஒரு இந்திய நாஸா விஞ்ஞானியும் இருக்கிறார்.

கொஞ்சம் அதிபுத்திசாலித்தனமும் விடாத முயற்சியும் இருந்தால் மனிதன் எந்த சவாலையும் எதி்ர்கொள்ளலாம் என்பதை ஒரு சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரிட்லி ஸ்காட். அதற்கு செவ்வாய் கிரகத்தை களமாக பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தில் மூழ்கிவிடும் ரசிகரை கூட மீட்புப் பணிகள் தொடர்பாக ஐடியா தர வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. அவ்வளவு தூரம் படத்தோடு ஒன்றிவிட செய்கிறார் ஸ்காட்.

இது மனிதனை கொண்டாடும் படம் / பாடம்.

தவறாமல், குழந்தைகளுக்கு இந்தப் படத்தை காட்டுங்கள்....

English summary
Box office smash The Martian has definitely made an impact. The new thriller not only raked in $55 million in its opening weekend, it also apparently prompted some to start questioning everything they know about space. The director Ridley Scott has proven time and again that he's a master of the human-survival narrative.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X