For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு வரப் போகும் ஆஸ்திரேலிய யுரேனியம்! காரணம், ஒசாமா பின் லேடன்!!!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

இன்று இந்தியா வரும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் மும்பை, டெல்லி என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அடுத்த சில நாட்களில் நாடு திரும்பியிருப்பார்.

ஆனால், இவரது வருகையால் இந்தியாவின் மின் உற்பத்தியில் அடுத்த சில ஆண்டுகளில் மாபெரும் மாற்றம் வரப் போகிறது என்பது தான் இவரது வருகையை உற்று நோக்க வைத்திருக்கிறது.

என்னயா ஓவரா பில்ட்-அப் காட்ற என்று நினைக்காதீர்கள்...

உலகின் 40% யுரேனியம் ஆஸ்திரேலியாவில்:

உலகின் 40% யுரேனியம் ஆஸ்திரேலியாவில்:

இந்தியாவின் பெரும்பாலான அணு உலைகள் யுரேனியத்தை நம்பி இருப்பவை. உலகிலேயே மிக அதிகமான யுரேனியத் தாது நிரம்பிய நாடு ஆஸ்திரேலியா தான். அதாவது உலகின் மொத்த யுரேனியத்தில் சுமார் 40 சதவீதம் ஆஸ்திரேலிய மண்ணில் தான் கலந்து கிடக்கிறது.

ஆனால், அமெரிக்க நெருக்கடியால் இந்தியாவுக்கு யுரேனியம் தர மறுத்து வந்தது.

யுரேனியத்தை புளுட்டோனியமாக்கி அணு குண்டு:

யுரேனியத்தை புளுட்டோனியமாக்கி அணு குண்டு:

இந்தியாவுக்கு யுரேனியம் தரக்கூடாது என்பதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் மிக மிகத் தீவிரமாக இருந்தன. காரணம், கரண்ட் தயாரிக்க என்று யுரேனியத்தை வாங்கி அதை புளுட்டோனியமாக்கி அணு குண்டு தயாரிக்கப் போகிறார்கள் என்ற பயம் தான்.

அணு குண்டால் உலகிலேயே மிக அதிகமான சேதத்தை சந்தித்த ஜப்பான் தான் இந்தியா மீதான அணு சக்தித் தடைகளில் மிக வேகம் காட்டி வந்தது. அதே போல அமெரிக்கா குனியச் சொன்னால் படுத்துவிடும் நாடான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு அணு எரிபொருள் தருவதில் பெரும் தயக்கம் காட்டி வந்தது.

ஆனால், ஒரு வழியாக கடந்த 2008ம் ஆண்டு இந்தியாவும் அமெரிக்காவும் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன. அது எப்படி நடந்தது, திடீரென அமெரிக்கா ஏன் ஒப்பந்தம் செய்தது, கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள் அமெரிக்காவை ஏமாற்றிவிட்டு நடத்திய அணு குண்டு சோதனை கதைகளை இங்கே போய் பார்க்கலாம்.

ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் மற்றும் ஒசாமா பின் லேடன்:

ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் மற்றும் ஒசாமா பின் லேடன்:

அமெரிக்கா- இந்தியா இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் வாஜ்பாய், ஜார்ஜ் புஷ், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் மற்றும் ஒசாமா பின் லேடன் ஆகியோர் தான்!

என்னய்யா சொல்ற.. வாஜ்பாய், மன்மோகன் சிங், ஜஸ்வந்த் சிங் லிஸ்டுல ஒசாமாவை போய் சேர்க்குற என்று கோபப்படும் முன் ஒரு நிமிடம் ப்ளீஸ்... நியூயார்க்கில் அல் கொய்தா கும்பல் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்காவிட்டால் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகியிருக்குமா என்பதே கேள்விக்குறி தான்.. இதையும் விவரமாக அறிய இங்கே போய் பார்த்துக் கொள்ளலாம்

ஜப்பான் அணு உலை விபத்தும், இந்தியாவும்:

ஜப்பான் அணு உலை விபத்தும், இந்தியாவும்:

ஆனால், அமெரிக்காவும் இந்தியாவும் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஓடிவிட்ட பின்னர் இப்போது தான் ஜப்பான் நம்முடன் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கே முன் வந்துள்ளது.

2010ம் ஆண்டில் அணு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் ஜப்பான் பிரதமர் அபேயும் பேச்சுவார்த்தையைத் துவக்கிய நிலையில் ஜப்பானில் பயங்கர நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டு புகுஷிமா அணு உலையின் ஒரு பகுதி இடிந்து, அணுக் கதிர்வீச்சு பரவியது. இதையடுத்து தனது அணு உலைகளை ஜப்பான் மூடியது. இந் நிலையில் இந்தியாவுடன் எப்படி அணு சக்தி தொடர்பாக பேச்சு நடத்த முடியும்....? இதனால் அந்தப் பேச்சுவார்த்தைகள் அப்படியே நின்று போய்விட்டன.

மோடி நினைத்தது நடக்கவில்லை:

மோடி நினைத்தது நடக்கவில்லை:

இந் நிலையில் கடந்த வாரம் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி எப்படியாவது ஜப்பானுடன் ஒப்பந்ததில் கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று பகீரதப் பிரயத்தனம் செய்தார். ஆனால், ஜப்பான் அதில் வேகம் காட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தையையாவது வேகப்படுத்தலாம் என்ற ஒரு முடிவை மட்டும் இரு நாடுகளும் எட்டின. இதுவாவது நடந்துச்சே என்ற மகிழ்ச்சியோடு திரும்பி வந்திருக்கிறார் மோடி.

அப்படி ஜப்பானிடம் என்ன தான் இருக்கு...?:

அப்படி ஜப்பானிடம் என்ன தான் இருக்கு...?:

ஜப்பான் உதவி இல்லாவிட்டால் அமெரிக்கா கூட அணு உலையைக் கட்ட முடியாது என்பது தான் உண்மை.

அமெரிக்காவின் General Electric நிறுவனமும் பிரான்சின் Areva நிறுவனமும் இந்தியாவுக்கு அணு உலைகளை அமைத்துத் தரத் தயாராக இருந்தாலும் அதற்குத் தேவையான முக்கியமான சில பாகங்களை ஜப்பான் தான் தயாரித்துத் தர வேண்டிய நிலை. உலகின் அனைத்து மின் உற்பத்தி அணு நிலையங்களுக்குமான உலைகளின் முக்கிய பாகங்கள் ஜப்பான் தான் தயாரித்து வருகிறது.

ஜப்பானை நம்பியே எல்லாம்:

ஜப்பானை நம்பியே எல்லாம்:

இந்தியாவில் அமெரிக்காவும் பிரான்சும் அணு உலைகளை அமைக்க வேண்டுமானால் ஜப்பான் தான் அதற்கான பாகங்களைத் தயாரித்துத் தர வேண்டும். ரஷ்ய தொழில்நுட்பம் வேறுபட்டது என்பதால் கூடங்குளம் மாதிரியான அணு உலைகளுக்கு ஜப்பானை சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை வரவில்லை.

ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் நிறுவனங்கள் ஜப்பானிய தொழில்நுட்பத்தையும் கருவிகளையுமே சார்ந்து இருக்கின்றன.

ஜப்பானின் நிபந்தனைகள்:

ஜப்பானின் நிபந்தனைகள்:

யார் கேட்டாலும் இந்தப் பாகங்களை ஜப்பான் தயாரித்துத் தந்துவிடாது. தன்னுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்த நாடுகளில் மட்டுமே அந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளது. இதனால் ஜப்பானுடன் சீக்கிரம் ஒப்பந்தம் போட்டுட்டு வாங்க என இந்தியாவை அமெரிக்காவும் பிரான்சும் நிர்பந்தித்து வருகின்றன. அப்போது தான் பல பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய அணு உலைத் திட்டங்களை இந்த நாடுகள் கட்டித் தந்து லாபம் அடிக்க முடியும்.

ஆனால், அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட்டாக வேண்டும் என்று இந்தியாவை ஜப்பான் பல காலமாகமே நெருக்கி வருகிறது. இதில் கையெழுத்திட இந்தியா தயாராக இல்லை. இதனால் ஒப்பந்தம் செய்வதிலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

ஜப்பானின் பொருளாதாரமும் இந்திய பணமும்:

ஜப்பானின் பொருளாதாரமும் இந்திய பணமும்:

அதே நேரத்தில் ஜப்பானிய பொருளாதாரம் இப்போது சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தொடர்ந்து தேக்கமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் தனது பொருளாதாரத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் உள்ளது. இது தான் இந்தியாவுக்கு உள்ள ஒரே சாதகமான அம்சம்.

வரும் 2020ம் ஆண்டுக்குள் புதிதாக 19 அணு மின் நிலையங்களை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இப்போது அணு சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் 4,700 மெகாவாட் மின்சாரத்தை 15,000 மெகாவாட்டாக உயர்த்த இந்தியா பெரிய திட்டம் வைத்துள்ளது.

இதற்காக 86 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ. 5 லட்சம் கோடியை செலவிடவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இது ஜப்பானிய பணத்தில் கிட்டதட்ட 10 ட்ரில்லியன் யென்.

காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி:

காசு.. பணம்.. துட்டு.. மணி.. மணி:

இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்தால் ஜப்பானின் தோஷிபா, ஹிடாச்சி ஆகிய அணு உலை கட்டும் நிறுவனங்கள் இந்தப் பணத்தில் பெரிய அளவில் பங்கு போட முடியும். அமெரிக்கா, பிரான்சுடன் சேர்ந்து இந்தியாவில் அணு உலைகளைக் கட்டினால் ஜப்பானுக்கு பெரும் லாபம் கிடைக்கும்.

இவ்வளவு பெரிய லாபம் வரும்போது இந்தியாவுடன் அணு ஒப்பந்தம் செய்தால் என்ன என்று ஜப்பான் அரசை அந் நாட்டு பொருளாதார நிபுணர்கள் நெருக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் இதன்மூலம் தோஷிபா, ஹிடாச்சி ஆகியவை ஜப்பானில் புதிதாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்பது அவர்களது கணக்கு. புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின் இந்த இரு நிறுவனங்களும் கிட்டத்தட்ட அணு உலை பிஸினஸை மூடியேவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பணம் இந்த நிறுவனங்களுக்கும் ஜப்பானுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

உஷ்.. அப்பப்பா!

உஷ்.. அப்பப்பா!

ஆனால், உலகிலேயே அணு ஆயுதத்தை சந்தித்த ஒரே நாடு என்பதால் அணு விவகாரத்தில் மற்ற நாடுகளுக்கு உதவ ஜப்பான் தனக்குத் தானே மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வைத்துள்ளது. இதன்படி இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டுமானால் இனிமேலும் அணு குண்டு சோதனனை நடத்த மாட்டோம் என இந்தியா உறுதிமொழி தர வேண்டும். அதே போல மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளை ஜப்பான் பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும். இந்த அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கதிரியக்க தனிமங்களை ரீ-புராஸஸ் செய்து அணு குண்டு தயாரிக்க இந்தியா பயன்படுத்தக் கூடாது.

பேசுவோம்.. பேசிகிட்டே இருப்போம்....

பேசுவோம்.. பேசிகிட்டே இருப்போம்....

ஆனால், இவையெல்லாம் இந்தியா ஏற்கவே முடியாத நிபந்தனைகள். இதனால், கையில் செக் புக்கோடு பிரதமர் மோடி ஜப்பானுக்கு போனாலும் அணு சக்தி ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இருந்தாலும் இரு தரப்பும் எப்படி விட்டுக்கொடுத்து முடிந்தவரை சீக்கிரத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது என்பது குறித்து ஆராய்வோம் என்ற முடிவை எடுத்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தையை வேகப்படுத்துவது தொடர்பான வேலைகளில் இறங்குவது என்றும் மோடியும் ஜப்பான் பிரதமர் அபேயும் (தோஷிபாவும், ஹிடாச்சியும்...!) முடிவு செய்துள்ளனர்.

ஜப்பானில் எதிர்பார்த்த அளவுக்கு எதுவும் நடக்காத சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் ஆஸ்திரேலியா மூலமாக இந்தியாவுக்கு இந்த வாரத்தில் நல்லது நடக்கப் போகிறது.

'யுரேனியத்துடன்' வரும் ஆஸி.. பிரதமர்!!

'யுரேனியத்துடன்' வரும் ஆஸி.. பிரதமர்!!

அணு உலைகளைக் கட்ட இந்தியாவை விட ஆர்வமாக இருப்பது அமெரிக்க அணு உலை நிறுவனங்களான ஜி.இ. போன்றவை தான் என்பதால், இந்தியாவுக்குத் தேவையான யுரேனியத்தைத் தரச் சொல்லி ஆஸ்திரேலியாவிடம் அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறது. (இந்தியாவுக்குத் தரக் கூடாது என்று சொன்னதும் அமெரிக்கா தான். ஆனால், இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது)

இந் நிலையில் இன்று இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட் யுரேனியம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறார். ஆனால், இதை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வந்துள்ளார். இதை இந்தியா ஏற்றுக் கொண்டுவிட்டது. இதனால் விரைவிலேயே ஆஸ்திரேலிய யுரேனியம் இந்தியாவுக்கு வரலாம்.

ரஷ்யாவுக்கு நோ சொன்ன ஆஸி:

ரஷ்யாவுக்கு நோ சொன்ன ஆஸி:

அதே நேரத்தில் உக்ரைனில் கலாட்டா செய்து வருவதால் ரஷ்யாவுக்கு யுரேனிய சப்ளையை ஆஸ்திரேலியா கடந்த இரு நாட்களுக்கு முன் நிறுத்திவிட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு தான் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டன. இதையடுத்து இதுவரை 100 டன் யுரேனியத்தை ரஷ்யாவுக்கு ஆஸ்திரேலியா அனுப்பி வைத்துள்ளது. இந் நிலையில் இப்போது ஏற்றுமதிக்கு தடா போட்டுவிட்டது.

ஆஸியில் ஒரு அணு உலை கூட இல்லையாமே:

ஆஸியில் ஒரு அணு உலை கூட இல்லையாமே:

இந்தியா இப்போது 6 அணு சக்தி மையங்களில் 20 சிறிய அணு உலைகளை இயக்கி சுமார் 4,700 மெகாவாட் மின்சாரம் தயாரித்து வருகிறது. இவையும் பாதி நேரம் முழு அளவில் செயல்படுவது இல்லை.. காரணம் யுரேனிய தட்டுப்பாடும் தொழில்நுட்பப் பிரச்சனைகளும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 2 சதவீதம் மட்டுமே. இதை 25 சதவீதமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காகத் தான் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா என பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து வருகிறது.

அதே நேரத்தில் உலகிலேயே மிக அதிகமான யுரேனியம் தாதுவை வைத்துள்ள ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலை கூட இல்லை என்பது தான் ஆச்சரியமான உண்மை. அந்த அளவுக்கு நிலக்கரியும், இயற்கை எரிவாயும் அபரிமிதமாக கொட்டிக் கிடக்கிறது!

''மின் பற்றாக்குறையே இல்லை.. ஆனால், மின் தடை தான்'':

''மின் பற்றாக்குறையே இல்லை.. ஆனால், மின் தடை தான்'':

இந்தியா திட்டமிட்டது எல்லாம் நல்லபடியாக நடந்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மின் பற்றாக்குறை என்பதே இருக்காது...

''தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் மின் பற்றாக்குறையே இல்லை.. ஆனால், மின் தடை தான் உள்ளது'' என்று தமிழக அமைச்சர்கள் தங்களுக்கு வெளங்காத வகையில் பேச வேண்டிய அவசியமும் வராது..!

English summary
Prime Minister Tony Abbott is expected to sign off on an agreement that would allow Australia to sell uranium to India - potentially doubling overall exports to a billion dollars annually by 2018 - when he meets his counterpart Narendra Modi in Mumbai. Work on an India-Australia agreement has been underway since Australia, which has 40 percent of the world's known uranium reserves, lifted a long-standing ban on selling uranium to energy-starved India in 2012.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X