For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா அரசின் கண்ணாமூச்சி ரே..ரே கேம்...மீண்டும் மீண்டும் இடியாப்ப சிக்கலில் முல்லைப் பெரியாறு அணை!

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு நடத்தி வரும் கண்ணாமூச்சி விளையாட்டால் முல்லைப் பெரியாறு அணை பலப்படுத்தப்படுமா? இல்லையா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் அமைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கும் உரிமை உள்ளிட்டவை தமிழ்நாட்டுக்கு மட்டும் உண்டு. 155 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தினால் 152 அடி உயரம் வரை நீரைத் தேக்கி வைக்கலாம் என்பதுதான் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

Keralas Double Game- How Mullai Periyar Dam Row goes to trobule again?

ஆனால் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 100ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் பலவீனமாகிவிட்டது; அதனை இடிக்க வேண்டும்; முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட தங்களுக்கு அனுமதி வேண்டும் என்பது கேரளாவின் நிலைப்பாடு. கேரளா அரசின் இந்த இத்துப்போன வாதத்தை வல்லுநர்கள் குழுவும் உச்சநீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. ஆனாலும் வம்படியாக முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்கிற பல்லவியையே கேரளா பாடி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டினால் 152 அடி நீரை உயர்த்தலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் அனுமதி. இதனால் 15 மரங்களை வெட்ட பல ஆண்டுகளாக அனுமதி கோரி வருகிறது தமிழக அரசு. ஆனால் அப்படி அனுமதி கொடுத்துவிட்டால் தாங்கள் வலியுறுத்தி வரும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது என்கிற வாதம் சொத்தையாக அடிபட்டுப் போய்விடும் என அஞ்சுகிறது கேரளா. இதனால் தமிழகத்தின் மரம் வெட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கிடப்பிலேயே வைத்திருந்தது கேரளா.

அதேநேரத்தில் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் ஆக வேண்டும் என கேரளாவுக்கு உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் இடைவிடாமல் நெருக்கடி தந்து கொண்டே இருக்கின்றன. இந்த பின்னணியில்தான் கேரளா தரப்பில் இருந்து பேபி அணையில் 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ண அடிப்படையில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். ஆனால் இங்கிருந்து மீண்டும் பூமராங் போல விஸ்வரூபம் எடுத்துவிட்டது முல்லைப் பெரியாறு அணை.

தங்களை கேட்காமலேயே தமிழகத்துக்கு அனுமதி கொடுத்து வனத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பிவிட்டனர் என்பது கேரளா அமைச்சர் சசீந்தரன் குற்றச்சாட்டு. அதனால் தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை நிறுத்தி வைக்கிறோம் என்று கேரளா அறிவித்தது. கேரளா அரசியல் கட்சிகளோ இதைவிடுவதாக இல்லை. கேரளா சட்டசபையில் இந்த பிரச்சனையை பூதாகரமாகவும் கிளப்பிவிட்டனர். இப்படி கேரளாவில் சர்ச்சைகள் வெடித்த நிலையில் 2 சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒன்று, பேபி அணையில் உள்ள மரங்களை வெட்ட தமிழகத்துக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி மரங்களை வெட்ட அனுமதி கொடுத்ததில் தவறில்லை என்று கேரளா அரசுக்கு கேரளா வனத்துறையே அதிரடி பதிலடிக் கொடுத்தது.

இன்னொன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட ஆதாரங்கள். இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏதும் தெரியாமல் கேரளாவுக்கு கடிதம் எழுதிவிட்டதாக அர்த்தமற்ற அரசியல் அலப்பறைகளை தமிழக எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. அதனால் அந்த ஆட்டங்களுக்கு முடிவு கட்ட கேரளா வனத்துறை அதிகாரிகள் அனுப்பிய கடிதங்களை பகிரங்கப்படுத்தினார் அமைச்சர் துரைமுருகன். கேரளா வனத்துறை முதன்மை வனப் பாதுகாவலர் பெஞ்சமின் தாஸ், 15 மரங்களை பட்டியலிட்டு வெட்ட அனுமதிக்கலாம் என அனுமதி கொடுத்தார்; அதனடிப்படையில் சுனில் பாபு என்ற கேரளா வனத்துறை துணை இயக்குநர், முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளருக்கு மரம் வெட்ட அனுமதி கொடுத்து கடிதம் அனுப்பினார். இந்த கடிதங்களைத்தான் அமைச்சர் துரைமுருகன் பகிரங்கப்படுத்தினார்.

இவை ஒருபுறம் ஒருக்க கேரளாவில் என்னதான் நடந்தது என பாருங்கள்... கடந்த ஜூன் 11-ந் தேதியன்று தமிழகம், கேரளா வனத்துறை அதிகாரிகள் குழு முல்லை பெரியாறு அணையை மேற்பார்வையிட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 3-ந் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்பு குழு தலைவர் குல்சன் ராஜ், கேரளாவின் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளரான டி.கே.ஜோஸுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அந்த கடிதத்தில், தமிழகம்- கேரளா அதிகாரிகள் அடங்கிய குழு, அணையை பலப்படுத்துவதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். அதில், தமிழகம்-கேரளா அதிகாரிகள் கூட்டு குழுவின் 14-வது கூட்டத்தில் அணையை பலப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

பின்னர் கடந்த அக்டோபர் 26-ந் தேதி உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் தொடர்பாக இரு மாநில கண்காணிப்புக் குழுவின் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது. அதில் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இத்தகைய நிகழ்வுகளின் ஒரு தொடர்ச்ச்சியாகவே கேரளா வனத்துறை அதிகாரிகள், தமிழகத்துக்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து கடிதத்தை அனுப்பி இருக்கின்றனர். இந்த கடிதத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். ஆனால் கேரளாவோ, மரம் வெட்ட தந்த அனுமதியை நிறுத்தி வைக்கும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்ட நிலையில் கடந்த திங்கள்கிழமையன்று மத்திய அரசு, கேரளாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தது. அதிலும், பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேரளாவை மத்திய அரசு வலியுறுத்தி இருக்கிறது. பேபி அணையை பலப்படுத்துவது எனில் 15 மரங்களை வெட்டுவது என்பதுதான். மத்திய நீர்வளத்துறை இணை செயலாளர் சஞ்சய் அவஸ்தி, கேரளா அதிகாரி டிகே ஜோஸுக்கு இந்த கடிதத்தை அனுப்பி இருந்தார்.

ஆனால் இத்தனை நிகழ்வுகளையும் அப்பட்டமாக மறைத்து, எங்களுக்கு தெரியாமலேயே அதிகாரிகள் மரம் வெட்ட தமிழகத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டார்கள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என வெளியிலும் சட்டசபையிலும் அண்டப் புளுகை அள்ளிவிட்டிருக்கிறார் கேரளா அமைச்சர் சசீந்தரன். இத்தனை உண்மையும் தெரிந்ததாலோ என்னவோ, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கனத்த மவுனம் காத்து வருகிறார். இப்போது சட்டசபையில் உண்மையை மறைத்ததாக தம் மீது உரிமை மீறல் பிரச்சனை வந்துவிடுவோம் என அஞ்சி, தாம் தெரிவித்த பதிலுக்கு விளக்கம் தர சபாநாயகரிடம் னுமதி கோரியிருக்கிறார் சசீந்தரன். இப்படி உண்மைக்கு புறம்பாக கேரளா ஆடி வரும் கண்ணா மூச்சி ஆட்டத்தால் பல்லாண்டுகளாக முல்லைப் பெரியாறு அணை விவகாரம் முடிவுக்கு வராமலே தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம்.

English summary
Here is an Article about on Kerala's Double Game in the Mullai Periyar Dam Row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X