For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்- ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா? நான் ரெடி, நீங்கள் ரெடியா? இப்போது நீங்கள் இந்த அரங்கத்தில் பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். மகிழ்ச்சியோடு, ஆர்வத்தோடு, ஆரவாரத்தோடு வந்திருக்கிறீர்கள்.

MK Stalin confident over DMK will win in Assembly elections

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு, கூட்டத்திற்குச் செல்கிறோம் என்று இல்லாமல் நம் வீட்டில் நிகழும் ஒரு நல்ல நிகழ்ச்சிக்குச் செல்வதுபோல வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் இதயபூர்வமாக வருக... வருக... வருக... வரவேற்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் நுழைவாயிலில் நம்முடைய தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் அங்கு உட்கார்ந்து மனுக்களைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் உங்கள் மனுக்களைக் கொடுத்திருப்பீர்கள் அல்லது உங்கள் பிரச்சினைகளை எழுதிக் கொடுத்து இருப்பீர்கள்.

யாராவது பதிவு செய்யாமல் வந்திருந்தால் தயவு செய்து கூட்டம் முடிந்து செல்லும்போது உங்கள் மனுக்களை அங்கே கொடுத்து விடுங்கள் அல்லது உங்கள் குறைகளைச் சொல்லுங்கள்.

அவர்கள் ஒரு ரசீது கொடுத்திருப்பார்கள். அது தான் முக்கியம். அது இருந்தால் உங்கள் பிரச்சினை நிச்சயமாக, உறுதியாகத் தீரும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்கள் பிரச்சினைகள் தீரவில்லை என்றால் நீங்கள் என்னிடத்தில் உரிமையோடு கேள்வி கேட்கும் அளவிற்கு இந்த ரசீதுக்கு தகுதி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நாம் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் உங்கள் பிரச்சினைகள், பேரறிஞர் அண்ணா மீது ஆணையாக - தலைவர் கலைஞர் மீது ஆணையாக - ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்போது உங்களிடமும் சொல்கிறேன்.

MK Stalin confident over DMK will win in Assembly elections

இங்கு பல்லாயிரக்கணக்கில் வந்திருக்கிறீர்கள். நம்பிக்கையோடு வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள். இதுவரையில் நான் 4 கூட்டங்கள் முடித்து 5-வது கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். எல்லாக் கூட்டங்களையும் விஞ்சும் அளவிற்கு இந்த திருவள்ளூர் மாவட்டம் - பூந்தமல்லி தொகுதியில் மிகவும் கட்டுப்பாடாக - அமைதியாகக் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

எல்லோரையும் பேச வைக்க முடியாது. அதனால் 10 பேர், அதாவது இந்த பெட்டியில் இருக்கும் மனுக்களிலிருந்து 10 பேரது மனுக்களை நானே எடுத்து, அவர்களது பெயரை வாசிப்பேன். அவர்கள் தங்கள் கருத்துகளை சுருக்கமாகப் பேசவேண்டும். இப்போது ஒவ்வொரு சீட்டாக எடுத்து, உங்களை நான் அழைக்கப்போகிறேன். தயவு செய்து உங்கள் கருத்துகளைச் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்போது உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியைப் பூட்டி, சீல் வைத்து நான் எடுத்துச் செல்லப்போகிறேன். அந்தச் சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது.

விரைவில் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெறப்போகிறது. நான் 200 தொகுதிகள் என்று சொன்னேன். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உருவாகி இருக்கிறது.

அவ்வாறு ஆட்சிக்கு வந்த பிறகு, மு.க.ஸ்டாலின் ஆகிய நான் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். அந்தப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மறுநாள் இந்தப் பெட்டியை நான் தான் திறப்பேன்.

அதற்குப்பிறகு அந்த மனுக்களில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு தனி இலாகா உருவாக்கப்படும். இந்த மனுக்கள் மாவட்ட வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்கிறேன்.

இந்த ஸ்டாலினை நம்பியும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியும், கைகளில் மனுக்களோடு இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

1962-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், "கேடுகள் போக்கிட, நாடு வாழ்ந்திட, தி.மு.க.விற்கு நல்லாதரவு தாரீர்" என்ற முழக்கத்தை எடுத்து வைத்தார்கள். அதே முழக்கத்தைத்தான் இன்றைக்கு நான் உங்கள் முன்னால் எடுத்து வைக்கிறேன்.

நேற்று நான் 'இந்தியா டுடே'-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்கள்.

அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. 1971ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று - இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி தி.மு.க. தான். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது.

அந்தத் தேர்தலுக்கு நான் பிரச்சார நாடகம் நடத்தினேன். 'முரசே முழங்கு' என்ற பிரச்சார நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அதுதான் அந்தப் புகைப்படம்.

அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நடித்த நடிகர்களை பாராட்டி மோதிரம் போட வேண்டும் தலைவர் அவர்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

அந்த விழாவிற்கு "வெற்றி விழா" என்று நான் தலைப்பிட்டேன். அதற்கு கலைஞர் அவர்கள் 'நிறைவு விழா' என்று போடச் சொன்னார். ஏனென்றால் "நான் தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும்" என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார்.

MK Stalin confident over DMK will win in Assembly elections

நாடகம் நடக்கிறது. அப்போது தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய போது, "நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்" என்று அறிவுரை சொன்னார்.

வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா?

"கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக" என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார்.

1971 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ''வீட்டுக்கு விளக்கு - நாட்டுக்குத் தொண்டன், தொண்டு வென்றிட - விளக்கு நிலைத்திட தி.மு.கழகத்திற்கு வெற்றிகளைக் குவிப்பீர்" என்ற முழக்கத்தை முன் வைத்தார்கள்.

அதே முழக்கத்தைத் தான் இன்றைய தினம் உங்கள் முன்னால் நான் வைக்க விரும்புகிறேன்! வீட்டுக்கு விளக்காக இருப்பேன்! நாட்டுக்கு தொண்டனாக இருப்பேன்! மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்!

''ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்று உழைப்பின் சிகரமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய பட்டம் எனக்கு இருக்க முடியாது.

'ஓயாமல் உழைத்தவன் இங்கே உறங்குகிறான்' என்று தனது கல்லறையில் எழுதச் சொன்ன காவியத் தலைவர்தான் கலைஞர்.

அரை நூற்றாண்டு காலம் இந்த சமுதாயத்துக்காக உழைத்தவன் நான். உழைக்க காத்திருப்பவன் நான். எனது உழைப்பின் மூலமாக இந்த இனம், நாடு, நாட்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து சமூக மக்களும் பயனடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் வழங்கி விடைபெறுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

English summary
DMK president MK Stalin's speech in Ungal Thogudhiyil Stalin programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X