For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஒரு நெருப்பு வளையத்திற்குள் சிக்கியுள்ள கற்பூரம்- ராஜ்குமார் குறித்து கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நடிகர் ராஜ்குமாரை மீட்பது, சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் தீக்கு மத்தியில் இருக்கும் கற்பூரத்தைஎரிந்து போகாமல் எடுப்பதற்குச் சமமானது என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமானகருணாநிதி கூறியுள்ளார்.

உடன் பிறப்புக்களுக்கு மறுபடியும் கட்சியின் குரலான முரசொலி நாளிதழில், மடல் எழுதஆரம்பித்திருக்கிறார் தி.மு.கழக தலைவர் கருணாநிதி. இதனால் திமுகவில் உற்சாகம்கொப்பளிக்கிறது.

கடிதம் என்று சாதாரணமாகச் சொல்லி விட முடியாது. இது ஒரு ஊக்க மருந்து. தன்னம்பிக்கை தரும்டானிக். தேர்தல் நேரத்தில் தலைவர் இத்தனை பணிகளுக்கிடையேயும் எழுத ஆரம்பித்திருப்பது எங்கள்மீதுள்ள பாசத்தையே காட்டுகிறது என்று உற்சாகமாகிறார்கள் தி.மு.க உடன் பிறப்புக்கள்.

கடிதம் இப்படிப் போகிறது ...

செப்டம்பர் முதல் நாள் தொடங்கி உனக்கு கடிதம் எழுதிட வேண்டுமென்று இருந்தேன். கன்னட நடிகர்ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்ட நிகழ்ச்சியினைத் தொடர்ந்து அடர்ந்து விளைந்த பணிகளின் காரணமாகஇயலாமற் போயிற்று.

பெரியார், அண்ணா, கழகம் பிறந்த நாட்களை செப்டம்பர் 15,16,17 ஆகிய நாட்களில் வழக்கம்போல் சென்னை மாநகரில் முப்பெரும் விழாவாகக் கொண்டாட தலைமைக்கழகத்தின் சார்பிலேயேஎல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அந்த முப்பெரும் விழா கண்டிட முத்தான என் உடன் பிறப்புகளுக்குஅழைப்பு விடுக்காமல் இருந்து விட்டால் இந்த அண்ணன் மீது கடுங்கோபம் கொள்வாயல்லவா!

கொற்றக் குடையின் ஆணைக்கோ, ஆதிக்கக் குரலுக்கோ, ஆரவார மிரட்டலுக்கோ குனிந்துகொடுக்கும் பழக்கமில்லாத நான், உன் கோபங்கண்டு மட்டுமே குனிந்து கொடுக்கும்இயல்புடையோன்- அத்தகைய இனிய பாசம் உன்பால் உடையோன் என்பது நீ அறியாதது அல்லவே!என்று அழகுத் தமிழில் பொழிந்திருக்கிறார்.

முதல் கடிதத்திலேயே நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது பற்றி வருத்தத்துடன் விவரிக்கிறார். சமீபத்தில்கர்நாடகாவிற்கு சென்று பத்திரிகையாளர்களை சந்தித்தது பற்றியும் கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

....... உடன் பிறப்பே, கர்நாடக முதல்வருடன் கலந்து பேசிட பெங்களூர் சென்றிருந்த பொழுதுநூற்றுக்கும் குறையாத செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விச் சரங்களைத் தொடுத்தனர்.

ராஜ்குமார் பிரச்சனையில் தமிழக அரசும் நக்கீரன் கோபாலும் சரியாகச்செயல்படவில்லையென்றும், பொதுவாக வீரப்பனை எதிர்கொள்வதில் கர்நாடகத்துடன் தமிழக அரசுஒத்துழைக்கவில்லையென்றும் ஒரு நிருபர் சற்றுக் கோபத்துடன் குற்றம் சாட்டிக் கேள்வி கேட்டார்.அதற்கு நான் சொன்ன பதில் என்ன தெரியுமா?

இதே வீரப்பன் 1997- ம் ஆண்டு கர்நாடக வனப் பகுதியிலிருந்து ஒன்பது வன இலாகா அலுவலர்களைகடத்திக்கொண்டு போய் மறைத்து வைத்திருந்தபொழுது தமிழக அரசின் இடைவிடாத ஒத்துழைப்புடனும்,நக்கீரன் கோபால் அவர்களின் கடும் முயற்சியுடனும் தான் அந்த ஒன்பது அலுவலர்களும்மீட்கப்பட்டார்கள்.

இப்பொழுது கூட ராஜ்குமார், தமிழக வனப்பகுதியில் கடத்தப்பட்டிருந்தாலும் இங்கே கடத்தப்பட்டாரேஎன்பதற்காக அல்ல, அவர் எங்கே கடத்தப்பட்டிருந்தாலும் 1997 - ஆம் ஆண்டினைப் போலவேஅவரை மீட்பதற்குக் கர்நாடக அரசுடன் இணைந்து செயல்படும் கடமை உணர்வு எங்களுக்கு உண்டு.அந்த உணர்வுடன்தான் இப்பொழுது நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கிறோம். எனவிடையளித்துவிட்டு;

மேலும், கர்நாடகத்தில் வாழ்கின்ற மக்களிடத்தில் அவர்கள் கன்னட மொழிபேசுகிறவர்களாயிருந்தாலும், தமிழ் மொழி பேசுகிறவர்களாக இருந்தாலும் அவர்களிடம் சகோதரஉணர்வு வேண்டுமென்பதில் இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாக நான் அக்கறையுடையவன்.

கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் ( காவிரிப் பிரச்சனை)சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கொருவர் பழிவாங்கும் எண்ணத்தோடு இருப்பர் என்று நான்கருதவில்லை என்று பெங்களூரில் பத்திரிகையாளர்களிடம் சொன்னேன்.

தொடர்ந்து செல்லும் கடிதத்தில், ராஜ்குமார் மீது அளவற்ற பற்றும் பாசமும் கொண்டு தவிக்கும்அவரது ரசிகர்கள், குமுறிக் கொண்டு துடிக்கும் அவரது மன்றத்தினர் மற்றும் குடும்பத்தினர் இந்த ஒருமாத காலத்திற்கு மேலாக சற்று நிம்மதிப்பெருமூச்சு விட்டு ஆறுதல் பெற்றிடவும் அமைதிதொடர்ந்திடவும் அமளியேதும் நிகழா வண்ணம் தடுத்திடவும் அந்த கேஸட்கள் பயன்பட்டன என்பதைமறந்து விடலாமா?

கேலி, கிண்டல், கண்டனம் இவற்றுக்கு மாறாக நெருப்பு வளையத்துக்குள் சிக்கி உள்ள கற்பூரத்தைஎரிந்து போகாமல் எடுக்கும் வித்தையினை எவர் கற்றுத்தர முன்வரினும் ஏற்பதற்கு தயார்தான்.ஆனால் எவரும் அதற்கு முன் வரவில்லையே?

கடைசியாக வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டிய ஆயுதத்தை ஆரம்பத்திலேயே கையில் எடுக்கவேண்டாமென்றுதானே இரு அரசுகளும் இப்பொழுது எடுத்துள்ள முயற்சிகளையே தொடர்கின்றன.

இதைப்புரிந்து கொள்ளாதவர்களுக்குத்தான் இந்த விளக்கங்கள் தேவை. புரிந்தும் புரியாதவர்கள் போலநம் மீது பகை கக்குவோர்க்கு விளக்கம் தேவைப்படாது. உன் போன்றோர் இந்த விபரங்களை தெரிந்துகொண்டாலே போதுமானது.

என்று முரசொலி கடிதத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X