திருநெல்வேலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அல்வாவிற்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் பெயர் போனது திருநெல்வேலி. அதேபோல அரிவாள், வெட்டு-குத்துக்கும் பெயர் போனது இந்த நகரம்.தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள இந்த மாநகரின் மக்கள் தொகை 8 லட்சத்திற்கும் சற்றே அதிகமாகும்.

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளுக்குப் பிறகு 1994ம் ஆண்டு திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய புதிய மாநகராட்சிகள் தோன்றின.அதன் பிறகு முதல் முதலாக 96ம் ஆண்டு அங்கு தேர்தல் நடந்தது.

மாநகராட்சி உருவான வரலாறு ..

1866-ம் ஆண்டு திருநெல்வேலி நகராட்சி உருவானது. துவக்க காலத்தில் திருநெல்வேலி நகராட்சியின் தலைவராக கலெக்டர் இருந்தார். நகராட்சிகவுன்சிலில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் சில உறுப்பினர்கள் இடம் பெற்றனர்.

1884ம் ஆண்டு மாவட்ட நகராட்சி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் மூலம்தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. திருநெல்வேலி நகராட்சியைப் பொறுத்தவரை திருநெல்வேலி நகர் மட்டுமே துவக்கத்தில்இருந்தது. அப்போது பாளையம்கோட்டை தனி நகராட்சியாக இருந்தது. பின்னர்தான் அது திருநெல்வேலியுடன் இணைந்தது.

1901ம் ஆண்டு பேட்டை மற்றும் மேலவீரராகவபுரம் ஆகிய இரு புறநகர்ப் பகுதிகளும் திருநெல்வேலி நகராட்சியுடன் இணைந்தன. பாளையம்கோட்டைநகராட்சி அப்போது தனியாக இருந்தது. இந்த நகராட்சியில் பாளையம்கோட்டை நகர் மட்டுமே இருந்தது. பின்னர் வண்ணாரப்பேட்டை,கொக்கிரக்குளம், கீழவீரராகவபுரம், மேலப்பாளையம், குலவணிகர்புரம் ஆகிய பகுதிகள் 1902ம் ஆண்டு இணைந்தன.

திருநெல்வேலியில் இருந்த நகராட்சி அலுவலகம் 1908ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி சில சமூக விரோதிகளால் தீவைத்து எரிக்கப்பட்டது.அதிலிருந்து ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தாவேஜுகள் தீக்கிரையாகின. இதையடுத்து புதிய கட்டடம் கட்டப்பட்டது. அந்தக் கட்டடம் 1914ம்ஆண்டு ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில்தான் தற்போது திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு 1948ம் ஆண்டு மேலப்பாளையம் தனி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரை மேலப்பாளையம் பாளையங்கோட்டைநகராட்சியின் கீழ் இருந்து வந்தது.

இந்த நிலையில் 1994ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் திருநெல்வேலி மாநகராட்சி உதயமானது. திருநெல்வேலி மாநகராட்சியுடன்,பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மற்றும் திருநெல்வேலி நகராட்சிகள் இணைக்கப்பட்டன. இதுதவிர 15 கிராமப் பஞ்சாயத்துக்களும், ஒரு நகரபஞ்சாயத்தும் இணைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. அவை நெல்லை, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகியவைஆகும்.

இங்கு மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சிக்கு இப்போது நடக்கவுள்ளது இரண்டாவது தேர்தல் ஆகும். முதல் தேர்தல் 1996ம்ஆண்டு நடந்தது. அப்போது திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி வெற்றி பெற்றுமேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.

மாநகராட்சி வார்டுகளின் தற்போதைய உறுப்பினர் விவரம்:

மேயர்: உமா மகேஸ்வரி (திமுக).

உறுப்பினர்கள்: அன்னபாக்கியம், முத்துமலையம்மாள், சம்பா, பழனி, ஆறுமுகத்தம்மாள், பரமசிவன், சுப்பையா, எஸ்.எஸ்.மணி, பிச்சம்மாள்,காமராஜ், சுந்தரம், விஜயம், மாரியப்பன், பூரணம், காமராஜ், சார்லி, லட்சுமணன், சுப்புலட்சுமி, பகவத் சிங், சங்கரலிங்கம், சுடலையாண்டி, அமுதா,ரேவதி, ராஜேஸ்வரி, சிந்தா சுப்ரமணியம், ஜெனீடா ஜேக்கப், ராஜகுமாரி, இந்திரா, நாகூர் மீரான், அப்துல் கலாம், மொஹைதீன் பிச்சை, அப்துல்ரஹ்மான், சம்சுல் அலாம், முகம்மது மைதீன், மைதீன் அப்துல் காதர், நவநீதன், மூக்காண்டி, வெங்கடசுப்ரமணியன், கனகத்திருளப்பன், காந்திமதி,கலைச்செல்வி, விஸ்வநாதன், சண்முகவேல், சங்கரசுப்ரமணியன், அருணாச்சலம், உதுமான், பசீர் அகமது, சுடலைக்கண்ணு, முருகன், பாலசுப்ரமணியன்,சண்முகவேலாயுதம், கோதண்டராஜன் ரத்தினவள்ளி ஆகியோர்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?

சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை திருநெல்வேலி மக்கள் திமுக அல்லது அதிமுகவுக்குத்தான் இதுவரை ஓட்டுப் போட்டு வந்துள்ளனர். காங்கிரஸ்கட்சியைப் பொறுத்தவரை ஓரளவே செல்வாக்கு உள்ளது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை கட்சிகளைவிட வேட்பாளர்களை பொறுத்துத்தான்வெற்றி வாய்ப்பு அமையும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது மக்களுக்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்க, நல்ல பெயர் வைத்திருந்த நபர்களையே முக்கியமான அரசியல்கட்சிகள் தேர்தலில் நிறுத்தின. திருநெல்வேலி மேயர் உமா மகேஸ்வரி தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தவர். கல்லூரி பேராசிரியையான அவரைதேர்தலில் நிறுத்தி வெற்றி பெற்றது திமுக.

இந்த முறையும் மக்களிடம் நன்கு அறிமுகமான வேட்பாளர்களையே அரசியல் கட்சிகள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கலாம். கருணாநிதி கைதைத்தொடர்ந்து தமிழகத்தில் திமுகவுக்கு அனுதாப அலை ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா முதல்வர் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் அதுஅதிமுகவுக்கு சாதமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற