For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சியில் இன்னொரு மடத்தின் மேலாளர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சி:

காஞ்சிபுரத்தில் உள்ள உத்தராடி ஸ்ரீவைஷ்ணவ மடத்தின் மேலாளர் ஸ்ரீநிவாச்சார் (வயது40) கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த மடம் சங்கரராமன் கொல்லப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநிவாச்சார் இன்று அதிகாலை மடத்துக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இவர் நேற்றிரவில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

பிகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த இவர் காஞ்சியில் உள்ள 100 ஆண்டு பழமையான இந்த உத்தராடி ஸ்ரீவைஷ்ணவ மடத்தின்மேலாளராக இருந்து வந்தார். இவரது தாயார் மரணமடைந்துவிட்டதையடுத்து இன்று காலை அவர் பாட்னாவுக்குப் புறப்பட இருந்தார்.

இதையடுத்து மடத்தின் பொறுப்பை இவரிடம் இருந்து ஏற்க ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இதே மடத்தின் இன்னொரு கிளையின்பொறுப்பாளரான ராமாயன்ஜி நேற்றிரவு இங்கு வந்து தங்கினார். இருவரும் உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு 11.30 மணியளவில்உறங்கச் சென்றனர்.

இந் நிலையில் இன்று அதிகாலை ஸ்ரீநிவாச்சார் தனது அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடலில் பல இடங்களில் குத்தியும் வெட்டியும்கொல்லப்பட்டுக் கிடந்த அவரது உடலைப் பார்த்த ராமாயன்ஜியும் பால்காரரரும் உடனே போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட எஸ்பி பிரேம்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய்வரவழைக்கப்பட்டது. அது சென்னை நெடுஞ்சாலையில் ஒரு கி.மீ. வரை ஓடிவிட்டு நின்றுவிட்டது.

பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து காஞ்சிபுரத்துக்கு திவ்யதேச புனித யாத்திரை வரும் பக்தர்கள் இந்த வைஷ்ணவ மடத்தில்தங்கிச் செல்வது வழக்கம்.

இதன் மேலாளராக கடந்த 15 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்தார் ஸ்ரீநிவாச்சார். இந் நிலையில் மடத்துக்குள்ளேயே கொடூரமாகக்கொல்லப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலையாகி அதில் சங்கராச்சாரியார் உள்ளிட்ட 26 பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரமே இன்னும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதே காஞ்சியில் இன்னொரு மடத்தின்மேலாளரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வைஷ்ணவ உத்தராடி மடம் சங்கரராமன் கொலையான வரதராஜ பெருமாள் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தின் அருகே உள்ளசேதுராயர் தெருவில் தான் அமைந்துள்ளது. இந்த மடத்துக்கு காஞ்சிபுரத்தில் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

கொஞ்சம் நிலமும் உள்ளது. மடத்தின் வளாகத்தில் உட்கார்ந்து சீட்டு விளையாடும் கும்பல், குடித்துவிட்டு உள்ளே வருபவர்கள், புகைபிடிப்பவர்கள் ஆகியோரை ஸ்ரீநிவாச்சார் திட்டி விரட்டுவது வழக்கம். இதனால் இவர் மீது இப் பகுதி ரெளடிக் கும்பல்கள் எரிச்சலில்இருந்து வந்துள்ளன. இந்தக் கும்பல்கள் மீது பல முறை காவல் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்திருக்கிறார்.

கொலை நடந்த மடத்தில் இருந்து பணம் ஏதும் கொள்ளை போகவில்லை. இதனால் முன் விரோதம் காரணமாக கூலிப் படையை வைத்துசெய்யப்பட்ட கொலையாக போலீசார் கருதுகின்றனர்.

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட செங்கல்பட்டு டிஐஜி ராஜேந்திரன் நிருபர்களிடம் பேசுகையில், சங்கரராமன் கொலைக்கும் இதற்கும் எந்தசம்பந்தமும் இல்லை. இரு கொலைகளுக்கும் எந்தத் சம்பந்தமும் இல்லை என்றார்.

இது குறித்து மாவட்ட எஸ்பி பிரேம்குமார் நிருபர்களிடம் பேசுகையில், ஸ்ரீநிவாச்சார் கொலை வழக்கில் முக்கியத் துப்புகிடைத்துள்ளது. இன்னும் 2 நாட்களில் குற்றவாளி சிக்குவான். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர்கள் மோகனவேல்,சீனிவாசன், ரவிக்குமார் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்தக் கொலை நடந்த மடத்துக்கு அருகே தான் கொல்லப்பட்ட சங்கரராமனின் வீடும் உள்ளது.

2 பேர் பிடிபட்டனர்?:இதற்கிடையே ஸ்ரீநிவாச்சார் கொலை தொடர்பாக போலீஸாரின் பிடியில் 2 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

சங்கரராமனைக் கொன்றது போலவே, கழுத்தில் வெட்டித்தான் ஸ்ரீநிவாச்சாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X