சந்திரிகா அரசுக்கு ஆபத்தில்லை: கதிர்காமர்
டெல்லி:
தமிழர் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் சந்திரிகா அரசுக்கு எந்தஆபத்தும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர் கூறினார்.
3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த கதிர்காமர் டெல்லியில் நிருபர்களிடம் பேசுகையில், தமிழர் கட்சி,ஆதரவை வாபஸ் பெற்றதால் இலங்கை அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் மீண்டும் ஒரு தேர்தலுக்கு இலங்கை மக்கள் தயாராக இல்லை. கூட்டணி கட்சிஆட்சி நடந்தால் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றத்தான் செய்யும். அதை நாங்கள் எளிதில் சமாளித்து விடுவோம்.
இந்தியாவில் கூட்டணி கட்சி எவ்வளவு சிறப்பாக நடைபெறுகிறது என்பது உங்களுக்கே தெரியும். அதே போலநாங்களும் சிறப்பாக ஆட்சி நடத்துவோம் என்றார்.
இதற்கிடையே ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்த சிலோன் தொழிலாளர் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்கத் தயாராக இல்லை. இதனால் இப்போதைக்கு ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என்றேதெரிகிறது.


