For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்டிச் சுவரோரம் வெட்டிக் கதை பேசும் அதிமுக-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் பேசும் நாகரீகம் கற்றிடாமல், குட்டிச் சுவரோரம் நின்று வெட்டிக்கதை கூறுவதையே வழக்கமாக வைத்துள்ளது அதிமுக என முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

முரசொலியில் அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

அதிமுக தலைவி ஜெயலலிதா அன்றாடம் அறிக்கை விடத் தவறுவதில்லை என்ற நிலையில் தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும், திமுக ஆட்சியை மாற்ற வேண்டும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும். அவர் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதாக வந்து கொண்டுள்ளதே. ஆனால் உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதை போல சட்டம்-ஒழுங்கு அமைதி தமிழகத்தில் கெட்டு விட்டதா, நாடு காடாகி விட்டதா?

நாம் பதவி ஏற்ற நாளிலிருந்து மாநிலத்தை அமைதி தழுவும், மாநிலமாக ஆக்கிடும் நோக்குடன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை நிலை நாட்டத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

பல ஆண்டுகளாக கண்டிபிடிக்க முடியாமல் இருந்த குளித்தலை மீனாட்சி கொலை வழக்கு, கிரில் மற்றும் பீரோ புல்லிங் கொள்ளை வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனால் எதிர்க்கட்சியினர் சிலரும் ஏடுகள் சிலவும் கடத்தல், களவு, கற்பழிப்பு என செய்திகளை வெளியிடுகின்றவர்களும், அக்குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதை அரசியல் காரணங்களுக்கா மறைந்து விடுவதை யாரும் மறந்துவிடக்கூடாது.

காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து தமிழகத்தில் தொடர்ந்து சாதி, சமய பூசல்கள் ஏதுமில்லாமல் அமைதி காத்து வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் சாதி பூசல்கள் ஏற்பட வாய்ப்புள்ள கண்டதேவி, சாக்கோட்டை தேர் திருவிழாக்கள், மேலவளவு முருகேசன் நினைவுநாள், தாமிரபரணி நினைவு நாள் மற்றும் தேவர் குரு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்தன.

சேலம் ரயில்வே கோட்டம் அமைத்தல், தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைத்தல் போன்ற பிரச்சனைகளில் தகுந்த முன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டினர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மற்றும் பிள்ளையார் சிலை கரைக்கும் நிகழ்ச்சிகளிலும், பாபர் மசூதி மற்றும் கோவை தொடர் குண்டுவெடிப்பு நினைவு தினங்களின் போதும், பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் இடஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டங்களின் போதும் காவல் துறையினர் திறமையாகச் செயல்பட்டு சமய நல்லிணக்கத்தை பாதுகாத்தனர்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி ஆகிய மாநிலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து மாநில காவல்துறையினர் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நமது மாநிலத்தில் எந்தவிதமான தீவிரவாதச் செயல்களும் நடக்காமல் பாதுகாத்தனர்.

இந்து முன்னணியைச் சேர்ந்த தென்காசி குமார் பாண்டியன் கொலை சம்பவத்தின் போது காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு அந்நிகழ்ச்சிகளின் பின் விளைவுகள் மாநிலத்தில் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்துகள், சிறிய இரும்புக் குண்டுகள், அலுமினியக் கட்டிகள், அத்தியாவசியப் பொருட்கள், நவீனத் தொலை தொடர்பு சாதனங்கள், படகுகள் போன்றவற்றைக் கடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் கடத்தலுக்கு உதவியவர்கள் 84 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவர்களுள் 17 இலங்கைத் தமிழர்கள் உட்பட 40 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

அண்மையில் இலங்கைக்கு வெடிமருந்து பொருட்களைக் கடத்த முயன்ற 9 பேர் மதுரையிலும், இதேபோல் தமிழகத்திலிருந்து விடுதலைப்புலிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கி அனுப்பவும், உளவு சேகரிக்கவும் அனுப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த தம்பித்துரை பரமேஸ்வரன் மற்றும் அவருடன் 7 பேரையும் காவல்துறையினர் திறமையாக செயல்பட்டு சென்னையில் கைது செய்தும், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ரொக்கப்பணம் ரூ.4.78 லட்சத்தையும் கைப்பற்றினர்.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 116 இலங்கை அகதிகள் முகாம்களில் 72,700 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகளையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 49 இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகளையும் இடைவிடாமல் கண்காணித்து அவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் காவல்துறையினர் பார்த்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு இருந்ததாகவும், இப்போதுதான் பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும், சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எல்லாம் குற்றம் சாட்டினார்கள். அதிமுக ஆட்சியில் நடந்தது எல்லாம் நாட்டு மக்களுக்கு மறந்தா போய்விட்டது.

தமிழகத்தின் முதல் குடிமகனாக இருந்த ஆளுநர் சென்னாரெட்டிக்கு திண்டிவனம் அருகே எப்படிப்பட்ட பாதுகாப்பு தரப்பட்டது? இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் அவர்களுக்கு விமான நிலையத்திலும், அவர் தங்கியிருந்த விடுதியிலும் எப்படிப்பட்ட பாதுகாப்பு தரப்பட்டது?.

தற்போது அம்மையாரின் நெருங்கிய நபராக இருக்கும் சுப்பிரமணியம் சுவாமி அவர்களுக்கு உயர்நீதிமன்றத்திலேயே எத்தகைய பாதுகாப்பு அளிக்கப்பட்டது?.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திருச்சி விமானநிலைத்திலிருந்து காரைக்குடி சென்று கொண்டிருந்த வழியில் அவரது காரை மறித்து தாக்கப்பட்டது உண்டா இல்லையா?

எம்.ஜி.ஆர். நினைவு இல்ல பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்து மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு போட்டது நினைவில்லையா?

முன்னாள் ஐ.ஏ.எஸ்.பெண் அதிகாரி ஒருவர் மீது ஆசிட் பாட்டில் வீசி, அவரது முகத்தை நாசம் செய்தது எந்த ஆட்சியிலே?.

எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி.சுகுமார் மற்றும் சிலர் ராமநாதபுரம் மாவட்டத்தில் தாக்கப்பட்டது அதிமுக ஆட்சியிலே தானே?. முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா தாக்கப்பட்டது எந்த ஆட்சிக் காலத்திலே.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த அனந்த கிருஷ்ணன் வீட்டில் புகுந்து அவரைத் தாக்கியது அதிமுக ஆட்சியிலே தானே. மூத்த வழக்கறிஞர் விஜயன் வழக்கிற்காக புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கோடம்பாக்கத்தில் தாக்கப்பட்ட சம்பவம் மறந்துவிட்டதா.

அதுபோலவே திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டது எந்த ஆட்சியிலே. வளர்ப்பு மகன் சுதாகரன் மீது ஹெராயின் வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டது எப்போது?.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் 3 பேர் சென்ற பேருந்துக்கு தீ வைத்து அவர்கள் உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதே. அது எந்தக் கட்சியை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டது.

இவ்வளவு ஏன். என்னை நள்ளிரவிலே வீடு புகுந்து தாக்கி கைது செய்ததற்கு என்ன பெயர். நான் மட்டுமா. அப்போது மத்திய அமைச்சர்களாக இருந்த தம்பி முரசொலி மாறன், தம்பி டி.ஆர்.பாலு மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரெல்லாம் தாக்கப்பட்டது எப்போது.

ஐஜி அலுவலக வாசலிலேயே ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத் தலைவர் பெருமாளை தாக்கி அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்த ஆட்சி எது. அந்த ஊர்வலத்தில் வந்த பத்திரிக்கையாளர்கள் எந்தளவிற்கு தாக்கப்பட்டார்கள். எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன.

நக்கீரன் கோபால் மீது எத்தனை பொய் வழக்குகள், எத்தனை விசாரணைகள், எவ்வளவு அடக்குமுறைகள், மறந்தா போய்விட்டது.

பொதுமக்களிடையே இன்று சட்டம், ஒழுங்கு குறித்து எந்தவிதமான பயமோ, அச்சுறுத்தலோ கிடையாது. ஆனால் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என அன்றாடம் குரல் எழுப்புபவர்கள் தான் அதைக் கெடுப்பதற்காக எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

சட்டசபையில் பேசும் நாகரிகம் கற்றிடாமல், குட்டிச் சுவரோரம் நின்று வெட்டிக் கதை கூறுவதே, தாம் கற்றறிந்த விதம் என்கின்றனர். அதனால் தான், அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறிவார் வல்லதூஉம் இல்.

அவையின் தன்மையறியாமல் சொற்களை பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது, பேசும் திறமையும் கிடையாது என இத்தகையோரைத் தான் திருக்குறள் சுட்டிக்காட்டி இடித்துரைப்பதாக தனது கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X