For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வறுமையில் வாழ்வோர் அதிகரிப்பா-விஜய்காந்துக்கு திட்டக் கமிஷன் மறுப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திட்ட அறிக்கைக்கும், திட்ட அணுகுமுறை அறிக்கைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப்போய் அரசியலில் தனக்குள்ள மனத்தாங்கலை அறிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய்காந்த் என மாநில திட்டக் கமிஷன் துணை தலைவர் மு.நாகநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் 11வது திட்டக்குழு அறிக்கையின்படி ஏழைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து, தற்போது 22 சதவிகிதத்தை எட்டியுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அறிக்கையில் கூறியிருப்பது முற்றிலும் தவறு. தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுதான் உண்மை.

விஜயகாந்த் குறிப்பிடும் 11வது திட்ட அறிக்கையை மத்திய அரசோ-மாநில அரசோ இன்று வரை வெளியிடவில்லை. ஐந்தாண்டுத் திட்ட அணுகுமுறை அறிக்கையை தவறாக பொருள் கொண்டு திட்ட அறிக்கை என்று விஜயகாந்த் குறிப்பிடுகிறார்.

திட்ட அறிக்கைக்கும், திட்ட அணுகுமுறை அறிக்கைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப்போய் அரசியலில் அவருக்குள்ள மனத்தாங்கலை அறிக்கையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அணுகுமுறை அறிக்கை என்பது திட்ட அறிக்கை உருவாவதற்கு முன்பு வெளியிடப்படும் சிறிய அறிமுக அறிக்கையாகும்.

மாநிலத் திட்டக்குழு தனது அணுகுமுறை அறிக்கையை அரசிடம் வழங்கிய பிறகு அனைத்து மாவட்டங்களிலும் மண்டல வாரியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதில் அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை வழங்கினார்கள். இணையதளம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை அனுப்பியிருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் என்கிற முறையில் விஜயகாந்துக்கும் இவ்வறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், விஜயகாந்தோ அவரது கட்சியினரோ, மண்டல ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டோ, நேரிலோ, மடல் வழியாகவோ கூட இன்று வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

விஜயகாந்த் கூறும் குற்றச்சாட்டு 2001-2006ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்குத்தான் பொருந்தும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வேளாண், தொழில், பணித்துறைகளில் சீர்மிகு திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதன் விளைவாக, 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான 8 விழுக்காட்டிற்கு அதிகமாக வளர்ச்சியைத் தமிழகம் பெற்று வருகிறது என்பதைப் பல வல்லுநர்கள் சுட்டியுள்ளனர்.

வறுமையைப் பற்றிய புள்ளி விவரங்களை மத்திய அரசின் திட்டக்குழுதான் வெளியிடுகிறது. அந்தப் புள்ளி விவரங்கள் நுகர்வு செலவின் அடிப்படையில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகின்றன. 2004-05க்கு பிறகு, 2009ல் கணக்கெடுப்பை நடத்தி, 2010-11ல் தான் முழு அறிக்கை வெளிவரும். இப்புள்ளி விவரங்கள் தமிழக முதல்வரின் ஆட்சி பற்றி உறுதியாக சான்று பகரும்.

பேச்சுரிமையை ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவதில்தான் உண்மையான ஜனநாயக நெறிகள் போற்றி வளர்க்கப்படும். மக்களுக்குத் தேவையான திட்டங்களும், செயல்பாடுகளும் சிறப்புற அமையும். உண்மையான விமர்சனங்களை யார் கூறினாலும் ஏற்று செயல் நடவடிக்கைகளை மேம்படுத்தி, சிறந்த நிர்வாகத்தை அளிக்கும் முதல்வரை குறுகிய அரசியல் காரணங்களுக்காக தகுதியற்ற முறையில் விமர்சனம் செய்வது அவசரமான, ஆத்திரமான அறிக்கைகள் வெளியிடுவது இனிமேலாவது தவிர்க்கப்படுவது நல்லது.

இவ்வாறு அந்த அறிக்கையில் நாகநாதன் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X