தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து-ஆந்திர சட்டசபை தீர்மானம்
ஹைதராபாத்: தெலுங்கு மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஆந்திர சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சி எம்.எல்.ஏக்களும் தமிழைப் போலவே தெலுங்குக்கும் செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று கோரினர்.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ராஜசேகர ரெட்டியும் தெலுங்குக்கு செம்மொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
கன்னடத்துக்கும் அம் மாநிலத்தின் பல்வேறு கன்னட அமைப்புகள் செம்மொழி அந்தஸ்து கோரி வருவது குறிப்பிடத்தக்கது.