சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ. 300 கோடி: கல்விக்கு முக்கியத்துவம்
டெல்லி: சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தனியாருடன் இணைந்து நிறைவேற்ற தமிழக அரசு முன் வந்துள்ளதாகவும், இத் திட்டத்துக்காக முதல் தவணையாக ரூ. 300 கோடி ஒதுக்கப்படுவதாகவும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
மேலும் ஈரோடு நகரில் விசைத்தறி தொழிலுக்காக மாபெரும் கூட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்து, அதற்காக ரூ.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த சிதம்பரம், கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.
கல்வித்துறைக்கு ரூ. 28,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்த அவர், நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 தரமான பள்ளிகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
பிகார்-ஆந்திராவில் ஐஐடி:
மேலும் பிகார், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தானில் புதிதாக 3 ஐஐடிகளை உருவாக்கவும், நாடு முழவதும் புதிதாக 16 மத்தியப் பல்கலைக்கழங்கள் உருவாக்கவும், போபால, திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் மிக பின் தங்கிய பகுதிகளில் 410 கூடுதல் கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பள்ளிகளும் தலித்கள் அதிகம் வசி்க்கும் நாட்டின் 20 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மிக வறட்சியான பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகிலேயே தண்ணீர் வசதியை ஏற்படுத்த ரூ. 200 கோடியிலான புதிய திட்டத்தையும் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளது.
அதே போல ஆரம்பக் கல்விக்கு உறுதுணையாக விளங்கும் அங்கன்வாடி ஊழியர் ஊதியம் ரூ. 500 அதிகரிக்கப்படுகிறது. அங்கன்வாடி நல ஊழியர்களின் ஊதியம் ரூ. 250 அதிகரிக்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு பள்ளிகளி்ல் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 8,000 கோடி ஒதுக்கப்படுகிறது. சர்வ சிக்ஷ அபியான் கல்வி திட்டத்துக்கு ரூ. 13,100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் கல்வித்துறைக்கு இதுவரையில்லாத அளவுக்கு அதிகமான திட்டங்களையும் நிதியையும் ஒதுக்கியுள்ளார் சிதம்பரம்.