மீண்டும் ஜெ. வீட்டுக்குள் புக முயன்ற தண்டபாணி!
சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் இன்று மீண்டும் ஜெயலலிதா வீட்டுக்குள் நுழைய முயன்று தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஜெயலலிதாவின் வீடு போயஸ் கார்டனில் உள்ளது. சமீப காலமாக இங்கு அடிக்கடி மர்ம நபர்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சித்துப் பிடிபட்டு வருகின்ரனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மன நல பாதிப்பு உள்ளது. சிலர் வேலை கேட்டு வந்ததாக கூறுகின்றனர்.
ஒரே நபர் பலமுறை வந்த சம்பவங்களும் உண்டு. இந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு நபர் அங்கு வந்தார். வீட்டுக் கேட்டை திறந்து உள்ளே போக முயன்றார்.
இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று அவரை மடக்கினர். அவரிடம் யார் என்ன என்று கேட்டபோது, ஒரு வழக்கு இருக்கிறது, அதை தீர்த்துக்க கொள்வதற்காக வந்தேன் என்று அந்த நபர் கூறினார்.
பின்னர் தேனம்பேட்டை போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த நபர் பெயர் தண்டபாணி என்பதும், ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதமும் போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்தவராம்.
இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 2வதாக வந்து மாட்டியுள்ளார் தண்டபாணி.
தண்டபாணி மன நிலை பாதிக்கப்பட்டவர் போலத் தெரிவதால் அவரை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.