For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடித்து சொல்லலாம்..அடித்து சொல்ல கூடாது..கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எதிர்க்கட்சி எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடாது. அதற்காக எதிர்க்கட்சி இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எதிர்க்கட்சிகள் குற்றம் குறைகளை இடித்து சொல்ல வேண்டும். அடித்து சொல்லக் கூடாது என முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் இலவச கலர் டிவி, கேஸ் ஸ்டவ்-சிலிண்டர்கள் வழங்கும் விழா நடைபெற்றது. உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமை வகித்த இந்த விழாவில் கருணாநிதி பேசுகையில்,

ஒவ்வொரு கட்டமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்க ஆரம்பித்து இப்போது ஒரு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

சாதாரண குடிமகன் ரூ. 3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் செலவு செய்து டி.வி. வாங்கி அதை அனுபவிக்க முடியாது. அதனால்தான், ஏழைகளுக்கு அரசு இலவச கலர் டி.வி. வழங்கி வருகிறது.

டி.வி. இல்லாத வீடுகளுக்கு ஒரு கோடி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் சென்றடையுமேயானால் அங்கெல்லாம் தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை என்பதை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான்.

பகுத்தறிவுக்கு உதவ வேண்டும்:

அந்த டி.வியில் நீங்கள் காணும் ஆடல், பாடல், கதைகள், நடனம், இசை, இவை மாத்திரமல்ல, பகுத்தறிவு கருத்துகள், தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள், அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய கருத்துகளும் டி.விக்கள் மூலம் கற்பிக்கப்படுகின்றன.

சில டி.விக்களில் ஜாதக பலன்கள் வரலாம், ஆரூடம் சொல்லப்படலாம். ஆனால், நம்முடைய அரசு சார்பாக தரப்பபடுகிற இலவச டி.விக்கள், மக்களின் பகுத்தறிவை வளர்க்க பயன்பட வேண்டும் என்று கருத்தை நீண்டகாலமாக சொல்லி வருகிறோம். அந்த அடிப்படையில் தொலைக்காட்சிகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தாய்மார்கள் சிரமத்தை குறைக்க இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன். அப்படி சொன்னபோது, இன்னொரு குரல், என் செவிகளில் எதிரொலித்தது. அது அதற்கு முன்பு இருந்த அரசின் அமைச்சரின் குரல், நாங்கள் 3 ஆயிரம் பேருக்கு எரிவாயு அடுப்புகளை வாங்கித் தரப்போகிறோம் என்று அறிவிக்கப்பட்ட குரல்.

ஆனால், ஏழை தாய்மார்கள் எதிர்பார்த்து, எதிர்பார்த்து எந்த அடுப்பும் அந்த ஆட்சியில் வந்து சேரவில்லை. அப்படி வராத காரணத்தால் ஏமாந்தார்கள். அவர்கள் கடன்பட்டு வாங்கிய அடுப்புகளுக்கு, கடன் கட்டும் பொறுப்பைக்கூட அடுத்து வந்த ஆட்சியான நாம்தான் ஏற்றுக்கொண்டோம்.

எதிர்க் கட்சிக்கு அறிவுரை:

ஒன்றை செய்தால் அதை விமர்சிக்க எதிர்கட்சிகள் தயாராக இருக்கும். நான் எதிர்கட்சியே கூடாது என்று சொல்கிறவன் அல்ல.

இடித்து சொல்கின்றவன் இல்லாத நிலையிலே ஒரு மன்னன் இருந்தால், அந்த மன்னன் யாரும் அவனைக் கெடுக்காமலேயே தானே கெட்டுப் போய்விடுவான்' என்பது வள்ளுவருடைய குறள்.

அடித்துச் சொல்வதல்ல. இடித்துச் சொல்வதென்றால், அது ஒரு உணர்வை அவர்களுக்கு உருவாக்கி, யாருக்கும் தெரியாமல் அறிவுறுத்தி திருத்துவது, ஒரு மேலான பண்பாகும்.

எதிர்கட்சி என்பது அந்த பண்பார்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதைவிடுத்து எதை செய்தாலும் சொத்தை, சொள்ளை என்று கூறிக் கொண்டிருப்பது, எதிர்கட்சி அல்ல. வேண்டுமானால் எதிரிக் கட்சி என்று பெயர் வைத்துக் கொள்ளலாம்.

எதிர்கட்சி, ஆளுங்கட்சிக்கு ஆலோசனைகளை சொல்லி இரண்டு பேரும் சேர்ந்து மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும். இருவரும் ஒருமித்த கருத்து கொண்டவர்களாக இருக்க வேண்டும். நடைமுறை பிரச்சினையில் ஒருமித்த செயல்பாடு இருக்க வேண்டும்.

இன்றைக்கு இருக்கின்ற எதிர்கட்சி நாளைக்கு ஆளுங்கட்சியாக ஆகலாம். இன்றைக்கு இருக்கின்ற ஆளுங்கட்சி நாளைக்கு எதிர்கட்சியாக ஆகலாம். எப்படி ஆனாலும், இரண்டு கட்சிகளும் மக்களுக்குப் பாடுபடுகிற கட்சியாக இருந்தால்தான் அதற்கு பெயர் கட்சி. அது ஜனநாயகத்தை மதிக்கின்ற கட்சி. ஜனநாயகத்தில் நான் ஆளுங்கட்சியாகத்தான் இருப்பேன், எதிர்கட்சியாக இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் அகம்பாவத்தின் அடையாளம்.

பால் விலை உயர்வு:

பால் விலை உயர்ந்ததற்கு பால்தான் காரணம். பால் விலை உயர்வுக்கு ஆந்திராவில் வியாபாரிகள் காரணம். கேரளாவில் யார் காரணம், அங்குள்ள வியாபாரிகள், மக்கள் காரணம்.

விவசாயிகளும் மக்களும் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு அதிக விலை வேண்டும் என்று கேட்கிறார்கள். கொள்முதல் விலை அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்கள். மாட்டுக்குப் புல் வாங்க வேண்டும். புல் விலை உயர்ந்து விடுகிறது. தவிடு விலை உயர்ந்து விடுகிறது. புல், தவிடு சாப்பிட்டு பால் கொடுக்கும் மாடுகளை வளர்ப்பதற்கு நாம் எடுத்துக் கொள்கின்ற கஷ்டங்கள், செலவுகள் இதையெல்லாம் சேர்த்துதான் பால் தயாரிப்போர் கொள்முதல் விலையை நிர்ணயிக்கிறார்கள்.

தஞ்சாவூர், சேலம், திருச்சி பக்கம் பாருங்கள். எங்களுக்கு நெல் கொள்முதல் விலை உயர்த்திக் கொடு என்று கேட்கிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடு என்கிறார்கள். அதை நியாயம் என்று சொல்கிறோம். ஆனால், பால் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடு என்று கேட்டால், அது நியாயமாக பலருக்கு புலப்படவில்லை. என்ன காரணம்? அது பாலாக இருப்பதாலா?

நெல் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடு என்றால், பாவம் உழவன் அவ்வளவு கஷ்டப்படுகிறான், நெல் கொள்முதல் விலையை உயர்த்தக்கூடாதா என்று நானும் கேட்டு, மத்திய அரசும் கொடுத்து, நெல் கொள்முதல் விலையை அதிகப்படுத்திக் கொடுக்கிறோம்.

மாடு தீனிக்கு செலவிடுவதை ஈடுகட்ட கொள்முதல் விலை போதாது, கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்று கேட்டால், அவர்களோடு உட்கார்ந்து பேசுகிறோம். பால் கறந்து விற்பவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்களோடு பேசுகிறோம். அவர்கள் தங்களது கஷ்டங்களைச் சொல்லி பால் கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களது நியாயத்தை உணர்ந்து ஆந்திராவைவிட, கேரளாவைவிட பால் விலை குறைவாக இருக்கட்டும்.

பால் வாங்கிச் சாப்பிடும் மக்களுக்கு நாம் அதிக விலையை அவர்கள் தலையில் சுமத்தக்கூடாது என்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் உயர்த்தினால், பால் விலையை நான் உயர்த்திவிட்டதாக கருதுகிறார்கள். அது தவறு. நான் பால் விலையை உயர்த்தவில்லை. பாலை கறந்து என்மூலமாக உங்களுக்கு கொடுக்கிறானே அவன்தான் பால் விலை உயர்த்துகிறான் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.

நடிக நண்பர் விஜய்காந்த்:

ஒரு நடிக நண்பர் (விஜய்காந்த்) ஒருவர் பேசியிருக்கிறார். நான் தவறாகச் சொல்லவில்லை. எதிர்கட்சி என்றால் அப்படித்தான் பேச வேண்டும். அவர் என்ன பேசியிருக்கிறார் என்றால், மகளிர் தினத்தில்தான் பால் விலையை 2 ரூபாய் உயர்த்திவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

இவர் இதைப்போய் கிராமத்தில் போய் சொன்னால், பால் கறந்து விற்கிறானே அவன் காதில் இது விழுந்தால், இவர்களுக்கு ஓட்டு கிடைக்காது. நாங்கள், எங்களது அடக்க விலையைச் சொல்லி, கொள்முதல் விலையை கொஞ்சம் உயர்த்திக் கொடுங்கள் என்று கேட்டு பெற்றால், அதையும் தடுக்க நீ வந்துவிட்டாயா? என்று இவர்களை அவர்கள் கண்டிப்பார்கள், பேசுவார்கள், ஏசுவார்கள்.

சாதாரண கிராமப்புறத்து குடியான மக்கள், உழவர் பெருங்குடி மக்கள், மாடு வளர்ப்போர், மாடு வளர்த்து தங்களது பிழைப்பை நடத்துவோர், அவர்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காகத்தான் இந்தப் பால் விலையை கொஞ்சம் உயர்த்தியிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.

அதீத வளர்ச்சியில் சென்னை:

இன்றைக்கு சென்னை மாநகரை எழில்மிகு நகரமாக மாற்றுவதற்கு நூற்றுக்கணக்கான திட்டங்களை வகுத்து மேயர் சுப்பிரமணியம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இன்னும் ஓராண்டு காலத்திலே நீங்கள் சென்னையைப் பார்த்தால், வேண்டுமானால் வெளியூருக்கு சில மாதங்கள் போய்விட்டு சென்னைக்கு திரும்பினால் நீங்கள் முதலிலே பார்த்த சென்னையைப் பார்க்க முடியாது.

வேறு ஒரு அழகான சென்னையை நீங்கள் பார்க்கக்கூடிய அளவிற்கு சென்னை மாநகரம் உருமாறியிருக்கும். அப்படிப்பட்ட பல காரியங்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலினும், மேயரும், அதிகாரிகளும் சேர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெரும் மாற்றங்கள் வரவிருக்கின்றன.

ஜெர்மன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஈடாக நாம் நம்முடைய நகரத்தை, நம்முடைய நாட்டை, நம்முடைய தமிழகத்தை காணக்கூடிய ஒரு வாய்ப்பு நிச்சயம் ஏற்பட்டே தீரும். அந்த வாய்ப்பை முழுமையாக்கக்கூடிய திறனும், வசதியும், வாய்ப்பும் கொண்டதுதான் திமுக ஆட்சி. இந்த ஆட்சிக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X