அரசின் மலிவு விலை சிமெண்ட்-வாங்க ஆளில்லை..
சென்னை: அரசின் மலிவு விலை சிமெண்ட் வாங்க விதிகள் தளர்த்தப்பட்டும் கூட, சிமெண்ட் மூட்டைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கின்றன.
தமிழகத்தில் சிமெண்ட் மூட்டை விலை ரூ.250க்கு மேல் உயர்ந்ததையடுத்து, மலிவு விலை சிமெண்ட் விற்பனையை அரசு அறிமுகப்படுத்தியது.
ஆனால், அதற்கு ஏராளமான விதிகள் போடப்பட்ட. ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டுபவர்களுக்கு 200 மூட்டை சிமெண்ட், தலா ரூ.200 விலையில் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்த சிமெண்ட் தேவைப்படுவோர், கட்டப்படும் வீட்டின் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், ரேஷன் கார்டு நகல், வசிப்பிட சான்றிதழ் ஆகியவற்றை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து, பர்மிட் வாங்கி, சிமெண்ட்டுக்கான தொகையை டி.டியாக எடுத்து, விண்ணப்பத்துடன் இணைத்து, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் கொடுத்து, சிமென்ட் வாங்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
இந்த மிக நீண்ட, குளறுபடியான விதிகளால் மக்கள் மலிவு விலை சிமெண்ட் குறித்து சிந்திப்பதையே நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து பர்மிட் ஏதும் இல்லாமல் கிடங்குகளிலேயே நேரடியாக பணம் கொடுத்து, சிமெண்ட் மூட்டைகளை வாங்கிக் கொள்ளலாம் என விதிமுறைகளை அரசு தளர்த்தியது.
தனி நபரே 400 மூட்டை சிமெண்ட் வரை வாங்கலாம் என்றும் அறிவித்துப் பார்த்தது.
ஆனாலும், பெரும்பாலான மாவட்டங்களில் மலிவு விலை சிமெண்ட் மூட்டைகள் வாங்குவதற்கு ஆளே இல்லை. அவை தேங்கிக் கிடக்கின்றன.
அரசின் அறிவிப்பை நம்பி கிட்டங்கிகளி்ல் போய் சிமெண்ட் வாங்க முனைவோரை அதிகாரிகள் அலைகழிப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.
டிடி எடுத்து வந்தால்தான் சிமென்ட் தருவோம், குறைந்தது 100 மூட்டை வாங்க வேண்டும் என ரூல்ஸ் பேசியே மக்களை அதிகாரிகள் விரட்டியடிப்பதாக புகார்கள் வருகின்றன.