இலங்கையிலிருந்து 23 தமிழ் அகதிகள் வருகை
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 தமிழ் அகதிகள் 2 பிரிவுகளாக தமிழகம் வந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான கடும் சண்டை காரணமாக அங்கிருந்து ஏராளமான தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தவண்ணம் உள்ளனர்.
நேற்று இலங்கையிலிருந்து 2 பிரிவுகளாக 7 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
தலைமன்னார், மன்னார், வவுனியா பகுதிகளைச் சேர்ந்த 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் நேற்று அரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர். இவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவர். அவர்களை அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் விசாரித்தனர். பின்னர் அவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.