
சிறுமி கொலை-தாயின் கள்ளக் காதலனுக்கு வலை
சென்னை: சென்னையில் சிறுமி வாளித் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக சிறுமியின் தாயின் கள்ளக் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகர் விஜயராகவபுரத்தைச் சேர்ந்த தச்சர் பன்னீர் செல்வம் (36). மனைவியை பிரிந்த இவருக்கும் சுதா என்பருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
சுதாவும் தனது கணவனைப் பிரிந்த 4 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். சுதாவுக்கு செல்வகுமாரி (8), இளவரசி (7) என்ற 2 மகள்கள்.
சுதாவின் வீட்டுக்கு பன்னீர்செல்வம் அடிக்கடி வந்து செல்வார்.
இந்நிலையில் சுதா சவுதி அரேபியாவில் வேலை கிடைத்து சென்றுவிட்டார். 2 மகள்களையும் அதே பகுதியில் உள்ள அவரது அக்கா கெளரி வளர்த்து வந்தார்.
இந் நிலையில் சுதாவை அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட பன்னீர்செல்வம் அவரை சென்னைக்கு திரும்பி வரும்படி அழைத்து வந்தார்.
நேற்று சுதாவுடன் போனில் பேசிய பன்னீர்செல்வம், உடனே சென்னைக்கு வராவிட்டால் உன் மகளைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
மாலை ரெட்டேரியில் உள்ள கெளரி வீட்டுக்குச் சென்று
குழந்தைகளை கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு கேகே நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
மூத்த பெண் செல்வகுமாரியை கடைக்கு அனுப்பினார். செல்வகுமாரி வீடு திரும்பியபோது, இளவரசியை காணவில்லை என்று பன்னீர்செல்வம் கூறினார்.
இதையடுத்து செல்வகுமாரியை மட்டும் ஆட்டோவில் ஏற்றி இரவு 10 மணிக்கு கெளரி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
தங்கையை காணவில்லை என்று செல்வகுமாரி கூறியதைக் கேட்டு அதிர்ந்த கெளரி அது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.
தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி, இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் பன்னீர் செல்வம் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால் பன்னீர்செல்வம் அங்கு இல்லை.
வீட்டை போலீசார் உடைத்து சோதனையிட்டனர். அப்போது வாளியில் தலை மட்டும் மூழ்கிய நிலையில் இளவரசி பிணமாக கிடந்தாள்.
இளவரசியை தண்ணீரில் அமுக்கி கொலை செய்துவிட்டு பன்னீர் செல்வம் தப்பியது தெரியவந்தது.
பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஒரு விஷ பாட்டிலும் இருந்தது. அதில் பாதி விஷம் மட்டும் இருந்தது. பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.