சிகிச்சை தராமல் விசாரித்தே 'கொன்ற' போலீஸ்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் சிக்கியவரை மருத்துவனைக்கு அனுப்பாமல் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தியதால், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மோட்டார் சைக்கிளில், பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார்.
உடனே மக்கள் கூடி விட்டனர். போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார், செல்வராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல் ஸ்பாட்டிலேயே விசாரணை நடத்தத் தொடங்கிவிட்டனர்.
உடனடியாக செல்வராஜை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியும் கூட ஆம்புலன்ஸ் வந்தால்தான் கொண்டுசெல்ல முடியும் என்று கூறி விட்டனர். மேலும், குத்துயிரும், குலையுருமாக கிடந்த செல்வராஜிடம் வாகனத்தின் அடையாளம் உள்ளிட்டவற்றைக் கேட்டு விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த ஈவு இரக்கமற்ற நடவடிக்கை தொடர்ந்தது. இதனால் செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸாரின் பொறுப்பற்ற செயலைக் கண்டித்து உடுமலைப்பேட்டை சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.