For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலிபான் தாக்குதல்: பலியானவர்களில் ஒருவர் தமிழர்

By Staff
Google Oneindia Tamil News

Govindasamy with Family
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பொறியாளர் உள்பட இரு இந்தியர்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுக்கள், பல்வேறு புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீண்டுள்ள ஆப்கானிஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் இவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த பலரும் ஆப்கானிஸ்தானில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கு முக்கிய சாலைகளை மேம்படுத்தும் பணியில், மத்திய அரசின் எல்லைப்புற சாலைகள் மேம்பாட்டுக் கழகம் ஈடுபட்டுள்ளது. இப்பணியில் 400க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மிரட்டி வரும் தலிபான் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் இரு இந்தியப் பொறியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரான கோவிந்தசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கோவிந்தசாமியின் மரணத்தால் அவரது கிராமமே பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆப்கானிஸ்தானில், 218 கிலோமீட்டர் நீளமுடைய சரஞ் - டேலாராம் சாலையை மேம்படுத்தும் பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக ரூ. 747 கோடி நிதியுதவியையும் இந்திய அரசே செய்கிறது.

இந்த சாலை மேம்பாட்டுப் பணியில் எல்லைப்புற சாலைகள் மேம்பாட்டுக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக, இந்திய-திபெத் எல்லைப்புற போலீஸ் பிரிவைச் சேர்ந்த காவலர்களும் உடன் உள்ளனர்.

நேற்று காலை நிம்ரோஸ் மாகாணத்தில் சாலைப் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வாகனத்தில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி இந்தியத் தொழிலாளர்கள் மீது மோதி குண்டை வெடிக்கச் செய்தார்.

இதில் தமிழகத்தின் கிருஷ்ணிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மற்றும் எம்.பி.சிங் ஆகிய இரு பொறியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பிஷ்ராம் ஓரான், விக்ரம் சிங், முகம்மது நஜீன் கான், அனில் குமார் தம்பி, மாயாராம் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஆப்கானியர்கள் இருவரும் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு தாங்களே காரணம் என தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து அனைத்து இந்தியத் தொழிலாளர்களும், பொறியாளர்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

சோகத்தில் கோவிந்தசாமி கிராமம்

பலியான கோவிந்தசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம் திப்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். 45 வயதாகும் இவருக்கு மனைவி சிவகாமி (40), அருணா (22), பாரதி (19), பிரேமா (17) ஆகிய மகள்களும், கணேஷ் என்ற மகனும் உள்ளனர்.

மகள்கள் 3 பேருக்கும் கல்யாணம் ஆகி விட்டது. மகன் படித்து வருகிறான்.

கோவிந்தசாமி கடந்த 1983ம் ஆண்டு முதல் ராணுவத்தில் என்ஜீனியரிங் பிரிவில் பில்டிங் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் தான் ஆப்கானிஸ்தான் பணிக்குச் சென்றார்.

கோவிந்தசாமியின் உடல் 3 நாட்களுக்குள் விமானம் மூலம் பெங்களூர் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான திப்பன்னஹள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கோவிந்தசாமியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கதறி அழுதவண்ணம் உள்ளனர். அவரது கிராமமும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளது.

இந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இந்தியர்களைக் குறி வைத்து நடந்துள்ள 2வது சம்பவம் இது. கடந்த ஜனவரி மாதம் இந்திய -திபெத் எல்லைப் போலீஸார் இருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ராமன்குட்டி மணியப்பன் என்கிற கார் டிரைவரை கடத்திச் சென்ற தலிபான் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொன்றனர் என்பது நினைவிருக்கலாம்.

சாலை புனரமைப்புப் பணியிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.கே.அந்தோணி கண்டனம்

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் இந்தியா தனது பணியிலிருந்து விலகாது. தொடர்ந்து சாலை புனரமைப்புப் பணியில் இந்தியா ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X