செங்கோட்டையன் மீது சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனை
சென்னை: அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் மீது இன்று சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வரப்பட்டது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அமைச்சர் துரைமுருகன் ஒரு பிரச்சினையை கிளப்பினார். அவர் கூறுகையில்,
சட்டசபையில் ஒரு உறுப்பினர் பேசும் போது அவரது கருத்து ஏற்புடையதாக இல்லை என்றால் மறுத்து பேச மற்றொரு உறுப்பினருக்கு உரிமை உண்டு. அது பற்றி சபாநாயகர் தீர்ப்பு வழங்கலாம். ஆனால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது வெளியே சென்று புகார் கூறுவது அவையின் உரிமையை மீறும் செயலாகும்.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம் பேசும்போது வால்பாறை தேயிலை தோட்டங்களில் ஊழியர்களுக்கு 100 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொடநாடு தேயிலை தோட்டத்தில் அதை கொடுப்பார்களா என்று பேசினார்.
அப்போதே அதற்கு பதில் பெற்று இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் உறுப்பினரையும், பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமியையும், தேவையில்லாமல் முதல்வர் குடும்பத்தையும் பற்றி விமர்சனம் செய்து அதிமுக கொறடா செங்கோட்டையன் சட்டமன்றத்துக்கு வெளியே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது அவையை மீறும் செயல். இதில் உரிமை மீறல் இருக்கிறது.
எனவே உரிமை குழுவுக்கு இதை அனுப்ப வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
செங்கோட்டையன்: சபையில் பேச வாய்ப்பு இருக்கிறது என்று அமைச்சர் கூறினார். எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்று அவருக்கே தெரியும். ஆளுங்கட்சி எதிர்க் கட்சியாக இருந்தபோது சட்டசபை பிரச்சினை பற்றி எத்தனை முறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்தை தள்ளி வைப்பது பற்றி முதல்வர் அறிக்கை வெளியிட்டார். அது பற்றி விளக்கம் கேட்டபோது 3 நாள் சட்டசபை இல்லாததால் அந்த அறிக்கையை வெளியிட்டதாக கூறினார்.
அது போலவே சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டதால் தான் நானும் அறிக்கை வெளியிட்டேன். இதில் தவறு இல்லை.
கோவை தங்கம் (காங்கிரஸ்): தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக சம்பளம் ரூ.102 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. இதை கொடநாடு எஸ்டேட்டில் வழங்குவார்களா? என்று நான் கேட்டால் என்னை பற்றி அவர்களுடைய தொலைக்காட்சியில் விமர்சனம் செய்வார்கள்.
சபாநாயகர் ஆவுடையப்பன்: செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கையை படித்து பார்க்கும்போது அதில் உரிமை மீறல் இருப்பது மேலெழுந்தவாரியாகத் தெரிகிறது. எனவே இந்த பிரச்சனையை உரிமை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார்.
சட்டசபையில் ஜி.கே.மணி (பா.ம.க.) பேசியதாவது:-
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டப் போவதாக மீண்டும் செய்தி வெளியாகி இருக் கிறது. இதை தடுக்க அரசு என்ன முயற்சி எடுத்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் துரைமுரு கன்:- இந்த பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத் தியஅரசு அதிகாரிகளுடன் நமது அதிகாரிகளும், அந்த மாநில அதிகாரிகளும், பேச்சு நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் அணை கட்ட வேண்டும் என்றால் அதற் கான காரணங்களை நமக்கு அவர்கள் தெரிவிக்க வேண்டும். அணை கட்டினால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை நாம் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
உச்சநீதி மன்றத்தின் ஆலோசனையையும் மீறி அவர்கள் அணை கட்ட முயன்றால் அரசு எந்தநிலை யிலும் அதை சந்தித்து தடுக்கும்.