விளாத்திக்குளம் அருகே கிராமங்கள் மோதல்- பதற்றம்
விளாத்திகுளம்: விளாத்திக்குளம் அருகே 2 கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. கடைகளுக்கு தீவைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது
தூத்துககுடி மாவட்டம் விளாத்திகுளம் நாகலாபுரம் அருகேயுள்ள செங்கோட்டை கிராமத்தில் விநாயகர் மற்றும் அய்யனார் கோயில் உள்ளது. கடந்த சில நாட்களாக இக்கோயிலில் கொடை விழா நடந்து வருகிறது. நேற்றிரவு அங்குள்ள மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆயிரக்கானக்காண பொதுமக்கள் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது கீழகரந்தை கிராமத்தை சேர்ந்த சிலர் பாடல்களுக்கு ஏற்ப எழுந்து ஆடினர். தங்களுக்கு மறைக்கிறது என்றும் உட்கார்ந்து நிகழ்ச்சியை பாருங்கள் என்றும் மேலகரந்தை கிராமத்தினர் கூறினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அங்கிருந்த போலீசார் நிகழ்ச்சிக்கு தடை விதித்து, இரு தரப்பினரையும் கலைந்து போகும்படி கூறினர்.
இந்நிலையில் அதிகாலை 2 மணியளவில் கீழக்கரந்தையினர் மேலகரந்தை கிராமத்திற்கு சென்று தங்கபாண்டியன் என்பவருடைய கூல்டிரிக்ஸ் கடை மற்றும் நாகலாபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தியின் வல்கனைசிங் கடைகளை அடித்து நொறுக்கி கடைகளுக்கு தீவைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. பி்ன்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இதை பார்த்து ஆத்திரமடைந்த மேலக்கரந்தை கிராமத்தினர் குற்றவாளிகளை கைது செய்ய கோரி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்தத எஸ்பி தீபக் டமோர், விளாத்திகுளம் டிஎஸ்பி சியாமளாதேவி, கோவில்பட்டி டிஎஸ்பி கண்ணன் உள்பட போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இருகிராமத்தினரிடையே மோதல் ஏற்படும் என்பதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொடை விழாவின்போது இதேபோல மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.