சென்னைக்கும் குறி: தமிழகத்தில் 4 தீவிரவாதிகள் கைது?

ஜெய்ப்பூர் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு அனுப்பிய இ-மெயில் கிடைத்திருப்பதாக ராஜஸ்தான் மாநில போலீசார் தெரிவித்தனர். ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக இநத இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட சைக்கிள்களில் வெடிகுண்டு இணைக்கப்பட்டது, வெடிகுண்டு அடங்கிய சிவப்பு நிற பை ஆகியவை இடம்பெற்ற விடியோ காட்சிகளை guru_alhindi_jaipur@yahoo.co.uk என்ற இ-மெயில் முகவரியில் இருந்து ஒரு இந்தி செய்தி டிவி நிறுவனத்துக்கு நேற்று இரவு இந்த அமைப்பு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தீவிரவாதிகளால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் இ-மெயில் எங்கிருந்து வந்துள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். உத்திர பிரதேசம் காசியாபாத்தில் உள்ள நவீன் கம்ப்யூட்டர் ஜாப்ஸ் என்ற பிரவுசிங் சென்டரில் இருந்து இமெயில் வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஷ்யாம் பிர் மற்றும் ஊழியர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பிட்ட இ-மெயிலை அனுப்பியது யார்? அவர் எப்படி இருந்தார் என்று அவர்களிடம் துருவிதுருவி விசாரித்தனர்.
போலீசாருக்கு வந்த இ-மெயிலில், பாஜ மூத்த தலைவர் அத்வானி, நரேந்திர மோடி மற்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறையை முடக்கும் நோக்கத்துடன்தான் ஜெய்ப்பூரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ராமர், சீதை, ஹனுமான் ஆகிய கடவுள் மீதான நம்பிக்கையை சிதைக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவு தருவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 60 ஆண்டுகாலமாக முஸ்லீம்கள் சித்ரவதை அனுபவித்து வந்தனர். அதற்கு பழிக்கு பழி வாங்கும் நேரம் வந்துவிட்டது.
அமெரிக்காவை ஆதரித்துவரும் பிரிட்டனுக்கும் இது ஓர் எச்சரிக்கையாகும். இந்தியாவுக்கு சுற்றுலாவாக மேலைநாட்டினர் வரக்கூடாது.
அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வது இன்னும் தொடர்ந்தால் டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தெருக்களில் ரத்த ஆறு ஓடும்.
சமீபத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், 2007ம் ஆண்டில் வாரணாசி மற்றும் பைசாபாத் நீதிமன்ற குண்டுவெடிப்புகளை குரு-அல்-ஹிந்தி அமைப்பு நடத்தியது என்று அந்த இ-மெயிலில் கூறப்பட்டுள்ளது.
முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு 3 குழுக்களாக பிரிந்து செயல்படுவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தென் இந்தியாவை குறிவைத்து ஷாபுதின் கோரி படை, வடஇந்தியாவில் மஹமூத் காஸ்ன்வி படை, தற்கொலை தாக்குதல்களுக்கு ஷாகித் அல் சர்காவி தலைமையிலான படை என்று செயல்படுவதாக போலீசார் கருதுகின்றனர்.
சென்னையில் தீவிரவாதிகள் கைது?
ஜெய்ப்பூர் தாக்குதலை அடுத்து சென்னைக்கும் தீவிரவாதிகள் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து தமிழகத்தில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் வாகன சோதனை மற்றும் பொதுஇடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெளிமாநிலத்தை சேர்ந்த 4 பேரை தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தி்ல் பிடித்து விசாரிப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் தாக்குதல் நடத்தவோ, அல்லது மக்களிடையே பீதியை கிளப்பும் சம்பவங்களை நடத்தவோ அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். பிடிபட்டவர்களை பற்றிய தகவல்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.