கருணாநிதி நலம் - கனிமொழியிடம் விசாரித்த சோனியா

கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக முதல்வர் கருணாநிதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான முதுகு வலி மற்றும் கழுத்து வலி இருப்பதால் டாக்டர்கள் முழு ஓய்வுக்குப் பரிந்துரைத்துள்ளனர். எனவே அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று திமுகவினருக்கு நிதியமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முதல்வரின் உடல் நலம் குறித்து கனிமொழிக்கு போன் செய்து இன்று சோனியா காந்தி விசாரித்தார்.
சில நாள் ஓய்வுக்குப் பின்னர் முதல்வர் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடருவார் என கனிமொழி, சோனியாவிடம் தெரிவித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்:
இதற்கிடையே, முதல்வர் கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவரது உடல்நலம் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் கருணாநிதி, கழுத்து வலி, முதுகு வலி காரணமாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்வார். அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
இதற்கிடையில் அவரது உடல்நலம் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் முதல்வரை மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி சந்தித்து விரைவில் குணம்பெற வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்களும் முதல்வரை சந்தித்தனர்.
இயக்குனர் அமிர்தமும் சந்தித்து பேசினார். முதல்வருடன் அவரது மனைவி தயாளு அம்மாள், துணைவி ராஜாத்தி அம்மாள், மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோர் உடன் உள்ளனர்.