உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் நிலத்தைக் கையகப்படுத்த தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் இருந்த 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அண்ணா மேம்பாலம் அருகே தமிழக அரசின் வனத்துறைக்குச் சொந்தமான 38 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை தோட்டக்கலைக் கழகத்திற்கு நீண்ட கால குத்தகைக்கு விட்டிருந்தது.

ஆனால் நிலத்தை குத்தகைக்கு வாங்கிய தோட்டக்கலைச் சங்கம், உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலுக்கு உள் வாடகைக்கு விட்டது. இந்த நிலத்ைத மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில், இந்த நிலம் தமிழக அரசின் வனத்துறைக்குச் சொந்தமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நிலத்தை அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்குச் செல்லும் நுழைவாயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டல் மூடப்பட்டது.

நிலத்தை கையகப்படுத்திய பின்னர் ஊட்டி தாவரவியல் பூங்கா, பெங்களூர் லால்பாக் வரிசையில் அழகிய தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த இடத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து தோட்டக்கலைச் சங்கம் சார்பில் அதன் கெளரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மறு ஆய்வு மனுவை அவர் தாக்கல் செய்தார். ஆனால் அது கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை அணுகினார் கிருஷ்ணமூர்த்தி. அங்கு அவர் தாக்கல் செய்த மனுவில், நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவனாக அறியப்பட்டவன். 38 ஏக்கர் நிலம், கடந்த 180 ஆண்டுகளாக வேளாண் தோட்டக்கலை சங்கத்தின் வசம் இருந்தது.

நகரில் தூய்மையான காற்று வீசவும், பசுமையான சுற்றுச்சூழல் நிலவவும், வேளாண் தோட்டக்கலைச் சங்கம் சார்பில் இந்த நிலத்தில் நூற்றுக்கணக்கான அரிய மரங்களும், மூலிகை தாவரங்களும் பூக்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் என் மீதான வெறுப்பில் இந்த நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு முயன்று வருகிறது. இந்த இடத்தில் வேளாண் தோட்டக்கலைப் பூங்கா அமைக்கப் போவதாக அரசு கூறுகிறது.

இந்தப் போர்வையில் நிலத்தை கையகப்படுத்தி என்னைத் துன்புறுத்த முயற்சிக்கிறது. தமிழக அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.கே.தாக்கர், பான்டா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. விசாரணையில், 38 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவோ, அதை எந்த வகையிலும் மாற்றி அமைக்கவோ கூடாது என்று கூறி இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், மாற்றி அமைப்பதில்லை என்ற நிபந்தனையுடன், வேளாண் தோட்டக்கலைப் பூங்கா (தாவரவியல் பூங்கா) அமைப்பதற்கான டென்டர் கோரும் பணியை தொடரலாம் என அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இந்த மனு குறித்து 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...