For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி திடீர் கைது

By Staff
Google Oneindia Tamil News

Traffic Ramasamy
சென்னை: பிரபல பொது நல சேவகர் டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி (73) பிரபல பொது நல சேவகர். பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல விஷயங்களுக்கு வித்திட்டவர். வழக்குகளில் வக்கீல் வைக்காமல் தானே ஆஜராகி எதிர்த்தரப்பை தனது வாதத்தால் மடக்குபவர். இத்தனைக்கும் இவர் வக்கீல் கிடையாது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய உத்தரவிட வேண்டும் என்று இவர் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்துதான் தமிழக அரசு ஹெல்மட் கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.

அதேபோல சென்னை நகரில் அங்கீகாரம் பெறாமல், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும் என்று கோரி இவர் தொடர்ந்த வழக்கில் ராமசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. மீன் பாடி வண்டிகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்தியவரும் ராமசாமிதான்.

பலனை எதிர்பாராமல் தனது பொதுக் கடமையை செய்வதில் இவருக்கு நிகர் இவர்தான். ஊர்க்காவல் படையில் முன்பு இருந்தவர் ராமசாமி. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை சீர்படுத்துவது இவரது பழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயரே வந்தது.

இவரது பல வழக்குகளால் கடுப்பான எதிர்த்தரப்பினர் பலமுறை ராமசாமியைத் தாக்கியுள்ளனர். ஆனாலும் சற்றும் அஞ்சாமல் தனது கடமையை தொடர்ந்து செய்து வருகிறார் ராமசாமி.

ராமசாமிக்கு ஆயுதப் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே பட்டினப் போராட்டத்தில் குதித்தார் டிராபிக் ராமசாமி. ஆனால் தடையுத்தரவு அமலில் உள்ளதால் இதை அனுமதிக்க முடியாது என்று கூறி போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

பின்னர் ராமசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க போலீஸார் உத்தரவிட்டனர். இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் ராமசாமி.

ஒரு ஆர்.டி.ஓ.வின் மோசமான செயல்பாட்டைக் கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரித்தான் இன்றைய போராட்டத்தில் குதித்தார் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X