• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சேதுவுக்காக ஆட்சியை இழக்கவும் தயாராகுங்கள்- திமுகவினருக்கு கருணாநிதி அறைகூவல்

By Staff
|

Karunanidhi
சென்னை: சேது சமுத்திர திட்டத்துக்காக ஆட்சியை துறந்துவிட்டு ஒரு பெரிய போராட்டத்தை நாம் சந்தித்துத் தான் தீர வேண்டுமென்றால், அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி அறைகூவல் விடுத்துள்ளார்.

திமுக பொதுக் குழு கூட்டத்தில் அவர் பேசியதாவது:

நான் இந்த பிறந்த நாள் விழா வேண்டாம் என்றேன். ஆனால், பேராசிரியர் அன்பழகன் எதற்கும் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்- அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு என்னுடன் விவாதித்தார். துணைக்கு ஆற்காடு வீராசாமியையும் வைத்துக் கொண்டு பேராசிரியர் என்னிடத்திலே வந்தமர்ந்து விளக்கினார்.

விளக்கத்தையெல்லாம் கேட்டல்ல, பேராசிரியர் சொன்னார் என்பதற்காக இன்றைக்கு உங்கள் முன்னால் இந்தப் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

சொல்ல முடியாத காரணங்கள்:

நான் என்னுடைய உடல் நிலை காரணமாக, வேறு சில தவிர்க்க முடியாத-இத்தகைய கூட்டங்களில் சொல்லத் தேவையில்லாத காரணங்களுக்காக- நான் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட வேண்டாம் என்று சொன்னது உண்மை.

பிறந்த நாளிலே எனக்கு பூரிப்பு என்றால், எனக்குப் பெருமிதம் என்றால் அதைத் தரக்கூடிய ஒரே சக்தி, திமுக கட்டுக்கோப்பாக இருக்கிறது என்ற அந்த ஒரேயொரு செய்தி தான்.

இங்கே மகளிர் அணியின் சார்பில் மாநாட்டுக்கு வருமாறு அழைத்த சங்கரி நாராயணன் பேசும்போது, எங்களிடம் சக்தி இல்லையா, வல்லமை இல்லையா, ஆற்றல் இல்லையா, கொள்கை வலு இல்லையா என்றெல்லாம் வரிசையாக அது இல்லையா, இது இல்லையா என்றெல்லாம் கேட்டார். அவர் சொல்லாமல் விட்டது ஒன்று, ஒற்றுமையைத் தவிர பாக்கி எல்லாம் அவர்களிடம் இருக்கிறது.

அவர்களுக்கு நம்மைப் பார்த்து திருப்பிக் கேட்க நீண்ட நேரம் ஆகாது. அவர்கள் நம்மைப் பார்த்து கேட்கின்ற அளவுக்கு நாமும் (ஆண்களும்) நடந்து கொள்கிறோம்.

ஆட்சிக்காக உருவானதல்ல திமுக:

பேராசிரியர் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல், வாக்குகளைப் பெறுவது, வெற்றிகளைப் பெறுவது, அமைச்சர்கள் பொறுப்பை ஏற்பது, ஆட்சியிலே அமர்வது இவைகளுக்காக மாத்திரம் திமுக இல்லை.

இந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்ட இழிவுகளைத் துடைக்க, சுயமரியாதை உணர்வு கொள்ள, பக்தி என்ற பெயரால் பஞ்சாங்கம் என்கிற பெயரால் மூட நம்பிக்கை என்கிற பெயரால் ஆண்டவன், ஆலயம் என்ற பெயரால் குருட்டு நம்பிக்கை என்கிற பெயரால் இந்த சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை தடுத்து நிறுத்துவதற்காகத்தான் இந்த இயக்கம் ஏற்படுத்தப்பட்டது.

நமக்கு இருக்கின்ற ஒரே பெருமை, ஒரே செல்வாக்கு, ஒரே திறமை, ஒரே சக்தி அதுதான். அதை விட்டு நாம் விலகாத வரை நம்மை எவராலும் வீழ்த்த முடியாது.

இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம், கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் அவை நிரந்தரமல்ல. அவைகளுக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதும் அல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம், சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும்.

அண்ணா ஏன் செய்தார்?:

அண்ணா முதல்வரான பின் சுய மரியாதை திருமணங்களைச் சட்டப்படி செல்லுபடியானதாக ஆக்க வேண்டுமென்று ஏன் நினைத்தார்? அதைப்போல இன உணர்வு, மொழி உணர்வு இவை வேண்டுமென்று கருதிய காரணத்தால் தான், தமிழ்நாடு என்கிற பெயரைச் சூட்டினார். சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லபடியானதாக ஆக வேண்டுமென்று சட்டம் செய்தார். இரு மொழித் திட்டத்தைக் கொண்டு வந்தார். இவைகள் எல்லாம் ஒரு அரசியல் கட்சியினுடைய வேலைகள் தானா என்றால், இல்லை.

நமக்கு மொழி மீது இருந்த பற்று- தமிழுக்கு என்றைக்கும் ஒரு தரக்குறைவு, தாழ்வு வந்து விடக்கூடாது, அது உயர்ந்த இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக நாம் எடுத்த முயற்சி- அதன் பலன் தான் இரு மொழித் திட்டம்.

ஆட்சி வந்துவிட்டது என்பதற்காக, ஆட்சியை மீண்டும் பிடித்து விட்டோம் என்பதற்காக நம்முடைய கொள்கைகளை நாம் காற்றிலே பறக்க விடப் போவதில்லை. பறக்க விடமாட்டோம்.

பெயர் பற்றி அக்கறையில்லை..

இன்றைக்குக் கூட நான் இந்த சேது சமுத்திரத் திட்டம் பற்றி எழுதியதில், சில தீவிரவாத நண்பர்களுக்குக்கூட, என் மீது ஐயப்பாடு ஏற்படலாம். என்ன, இவரே போய் ராமர் பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறாரே என்று எண்ணலாம்.

ஆனால், அப்படிச் சொல்லுகின்ற காரணத்தால் எனக்கு ராமர் பெயர் இருப்பதா, கூடாதா என்ற சண்டையிலே எனக்கு அக்கறை ஒன்றுமில்லை. அதிலே எனக்கு எந்தப் பெரிய பிடிவாதமும் இல்லை. என்னுடைய விருப்பம் எல்லாம், என்னுடைய தமிழனுக்கு, ஆண்டாண்டு காலமாக அவன் பட்டு வந்த அவதியிலிருந்து நீக்குவதற்கு, வாணிபத்திலே செழிக்க- வர்த்தகத் துறையிலே அவன் வளம்பெற- இவைகளுக்கெல்லாம் பயன்படக்கூடிய ஒரு பெரும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம்.

அந்தத் திட்டத்தை இழந்துவிட்டால் நம்மை வளமாக்க நம்முடைய பூமியை செழிக்கச் செய்ய வேறு எந்த ஆதரவும் கிடையாது.

இந்தப் பக்கம் கர்நாடகம், இன்னொரு பக்கம் ஆத்திரம், இன்னொரு பக்கம் கேரளம், எங்கிருந்தும் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள். வாடுகிறோம். நீர்வளம், நிலவளம் மிகுந்த தரணி என்று தான் அந்தக் காலத்திலே பாவலர்கள் எழுதுவார்கள். ஒரு நாட்டின் வளத்தைப் பற்றிச் சொல்லும்போது, நீர்வளம், நில வளம் மிகுந்த நாடு என்று தான் புத்தக ஆசிரியர் முதல் அத்தியாயத்தை ஆரம்பிப்பார்.

ஆனால், நீர் வளம் இல்லாத, நில வளமும் இல்லாத ஒரு பகுதி தான் தமிழகமாக இன்றைக்கு இருக்கிறது. அந்தத் தமிழகத்திற்குத் தேவையான நீர் வளத்தை, நில வளத்தை பெறாத நாம், அதை பெறும் வரையில் வாணிப வளம், வர்த்தக வளம், பிற நாட்டிலிருந்து பொருளாதார வளம் இவைகளையெல்லாம் பெருக்க வேண்டுமேயானால், சேது சமுத்திரத் திட்டத்தை விட்டால் வேறு திட்டம் கிடையாது.

ராமரா? பீமரா? லட்சுமணனா?:

ஆகவே, தான் அதிலே பிடிவாதமாக இருக்கிறோம். இதிலே சேது சமுத்திரமா? ராமரா? பீமரா? லட்சுமணனா? சத்துருக்கனனா? என்பதல்ல பிரச்சினை.

அந்தத் திட்டம் தேவை, அந்தத் திட்டம் வந்தால் தமிழன் வாழ்வான், எங்களுக்கு ராமன் பெரிதல்ல, தமிழன் பெரிது, தமிழ் நாடு பெரிது, இந்த திட்டத்தை விட்டு விடக்கூடாது.

பதவியை துறக்கவும் தயாராவோம்:

இத்தகைய திட்டவட்டமான கருத்துக்களை இன்றைக்கு நாம் சொல்லுகின்ற அளவோடு நிறுத்துகிறோம். ஆனால், ஆட்சியிலே நாம் இருக்கும்போதோ, அல்லது ஆட்சி தேவையில்லை, இதற்காகத் துறப்போம் என்று துறந்துவிட்டு வெளியே வந்துவிட்ட போதோ, சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஒரு பெரிய போராட்டத்தை நாம் சந்தித்துத் தான் தீர வேண்டுமென்றால், அதற்கும் திமுக தயாராக இருக்க வேண்டும்.

நாம் கோட்டைக்குத் தான் போவோம் என்றில்லை. சிறைக் கோட்டத்துக்கும் செல்வோம். இந்தத் துணிவு இருந்தால் தான் இன்றைக்கு நாம் ஆட்சிப் பீடத்திலே அமர்வதற்கான அருகதை உடையவர்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார் கருணாநிதி.

ஒரே கதி 'சேது' தான்:

பின்னர் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள உளியின் ஓசை' திரைப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குநர் கே.பாலசந்தர் தலைமையில் நடந்த இந்த விழாவில், பாடல்கள் அடங்கிய சி.டியை முதல்வர் வெளியிட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

அப்போது கருணாநிதி பேசுகையில்,

எனது பிறந்த நாள் செய்தியில், நான் நீண்டநாள் வாழ ஆசைப்படுகிறேன் என்று சொன்னேன். அப்படி சொன்னதற்கு என்ன காரணம் இன்னும் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டிய பாக்கி இருக்கிறது. அந்த தொண்டு பரிபூரணமாக நிறைவேற வேண்டியுள்ளது.

சேது சமுத்திர திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. இன்று, நேற்றல்ல பெருந் தலைவர் காமராஜர் கண்ட கனவு, ராமசாமி முதலியார் கண்ட கனவு, விஞ்ஞான வித்தகர்கள் கண்ட கனவு, பொறியாளர்கள் எல்லாம் முடியும் என்று சொல்லி இதை நிறைவேற்றலாம் என்று உறுதி அளித்த பிறகும் அந்த கனவு இன்னும் நிறைவேறவில்லை.

குறுக்கிடுவது மதம் அல்ல அரசியல்:

அதற்கு அரசியல் குறுக்கிடுகிறது. மதம் குறுக்கிடுவதாக சொல்கிறார்கள்- இல்லை. மதம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு அரசியல் குறுக்கிடுகிறது.

இது சோனியா காந்தி காலத்தில் நிறைவேறினால், கருணாநிதி காலத்தில் நிறைவேறினால் பெயர் அவர்களுக்கு போய்விடும் என்ற இந்த அரசியல் குறுக்கீடுகள் காரணமாக மதப் போர்வையை போர்த்துகிறார்கள். எனவே மதத்தின் மீது நான் குற்றம் சொல்லமாட்டேன். காரணம் அது போர்வை அவ்வளவுதான்.

இந்தப் போர்வையை எடுத்து மறைப்பவர்களுக்கு மன்றாடி வேண்டுகோள் விடுத்தேன். கருணாநிதிக்கு ராமரைப் பிடிக்காது. அதனால் ராமர் பாலத்தை இடிக்கிறார்கள் என்றெல்லாம் தவறாகப் பிரசாரம் செய்து அங்கே சேது சமுத்திர திட்டம் உருவாகாமல் தடுக்கின்ற அந்த முயற்சியை கைவிடுங்கள்.

இந்த திட்டத்திற்கு எதிராக கொடி பிடிப்பவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன், எனக்கு பிறந்த நாள் பரிசாக சேது சமுத்திர திட்டத்தை கொடுங்கள். என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இந்த திட்டம் வந்தால் தமிழ்நாடு வாழும்.

இன்றைக்கு தமிழ்நாட்டை சுற்றியிருக்கின்ற மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு உதவக்கூடிய மாநிலங்கள் அல்ல.

யாசகமாக கேட்கிறேன்:

இப்போது நமக்கு இருக்கிற ஒரே கதி, மாநிலத்தில் வளத்தைப் பெருக்குவதில் வழிசெய்யக்கூடிய ஒரே கதி சேது சமுத்திர திட்டம்தான். நான் சொல்கிறேன், சேது ராம் திட்டம் என்று அதற்கு பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். அப்படி சூட்டிக் கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொடுங்கள்.

நான் பிறந்த நாளிலே உங்களிடத்தில் கேட்கக்கூடிய யாசகம் இதுதான். எதிர்கால தமிழனுக்காக கேட்கின்ற யாசகம். எனது பேரன், பேத்திகளுக்காக அல்ல. குக்கிராமத்திலே வாழும் குப்பன், சுப்பன் அவர்களது பேரன், பேத்திகளுக்காக,

ஒரு காலத்திலே மண்டபங்களை கட்டி, மாட மாளிகை கோபுரங்களை கட்டி வாழ்ந்த மன்னாதி மன்னர்கள் பரம்பரை இன்றைய தினம் எதிர்காலத்தைப் பற்றி ஏங்கித் தவிக்கிற அந்த நிலை மாறி, தமிழகம் ஏற்றம் பெற இந்த வரத்தை எனக்கு கொடுங்கள் என்று, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பாக இருக்கின்ற எல்லா நல்லவர்களையும், பெரியவர்களையும், அரசியல்வாதிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கோரிக்கை என் பாதுகாப்பிற்காக அல்ல. எதிர்கால தமிழகத்தின் பாதுகாப்பிற்காக வைக்கப்படுகின்ற கோரிக்கை என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X