குண்டுவெடிப்பில் யாரும் பலியாகவில்லை - கூறுகிறது திரிபுரா அரசு

அகர்தலாவில் நேற்று மாலை 7 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் பலியானதாக செய்திகள் கூறின. ஆனால் இதை திரிபுரா அரசு மறுத்துள்ளது.
குண்டுவெடிப்பில் யாரும் பலியாகவில்லை, 80 பேர் காயமடைந்துள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் மானிக் சர்க்கார் கூறுகையில், குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. குண்டுவெடிப்பு குறித்து உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடன் ஆலோசனை நடத்தினேன். மாநில தலைமைச் செயலாளர் சசி பிரகாஷ், உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவுடன் ஆலோசனை நடத்தினார்.
காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ளும்.
இந்த சம்பவத்தில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை. விசாரணை பல கோணங்களில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
திரபுரா மாநிலத்தில் நடந்துள்ள முதல் தீவிரவாத சம்பவம் இது என்பதால் எங்களது விசாரணையை அனைத்துக் கோணங்களில் முடுக்கி விட்டுள்ளோம்.
இதுதொடர்பாக மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் இணைந்து செயல்படும் என்றார்.
கடந்த 2 மாதங்களில் ஹூஜி அமைப்பைச் ேசர்ந்த 3 பேர் அகர்தலாவில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம். கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதி மாமுன் மியான் என்பவர் பிடிபட்டார். அவருக்கும், சர்வதேச தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.
இந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில், திரிபுரா உள்ளதால், வங்கதேச தீவிரவாதிகள் திரிபுராவை தங்களது புதிய வேட்டைக்காடாக மாற்ற முயல்வதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பல பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பேருந்துப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது .முக்கிய சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.