For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையுடன் இந்தியா கூட்டு ரோந்து போகக் கூடாது: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இலங்கை கடற்படையுடன், இந்திய கடற்படை கூட்டு ரோந்து செல்வது உகந்ததாக இருக்காது. எனவே இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இலங்கை கடற்படையினரின் கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டிற்கு ஏராளமான மீனவர்கள் பலியாகி வருகின்றனர். இதுதொடர்பாக சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இனி இலங்கை கடற் படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மாட்டார்கள் என்று இலங்கை உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் அந்த உறுதிமொழிக்கு கொஞ்சம் கூட மரியாதை இல்லை என்பதைப் போல, கடந்த 28ம் தேதி இலங்கை கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மதுரையைச் சேர்ந்த மீனவர் முருகன் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நியூயார்க்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகலகாமாவைச் சந்தித்த போது விவாதித்தார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இந்திய, இலங்கை கடற்படை கூட்டு ரோந்து பணியை மேற் கொள்ளலாம் என்று இலங்கை அமைச்சர் யோசனை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் ெதரிவித்தார். இது தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கை. எனவே இதை மேற்கொள்ளக் கூடாது என அவர் பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தைச் ேசர்ந்த பல்வேறு கட்சிகளும் கூட இதை எதிர்த்தன.

தற்போது முதல்வர் கருணாநிதியும் இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், இந்திய வெளியுறவு அமைச்சரும், இலங்கை வெளியுறவு அமைச்சரும் அண்மையில் நடத்திய ஆலோசனை யில் கூட்டு ரோந்து திட்டம் இலங்கையால் முன்வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய கடல் எல்லைப்பகுதியை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய கடற்படையும், கடலோர காவல்படையும் தேவை யான அதிநவீன வசதிகள் மற்றும் கருவிகள் அளிக்கப்பட்டு வலுப் படுத்தப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

கூட்டு ரோந்து திட்டம் குறித்து ஏற்கனவே விவாதிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் அது நமக்கு சாதகமானது இல்லை என்று நிராகரிக்கப்பட்டது.

இந்த விஷயம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன், முந்தைய தலைமைச் செயலாளர் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் விரிவாக விவாதித்து, கூட்டு ரோந்து கூடாது என்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போதும், கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு நவீன சாதனங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். எனவே அதனை உடனடியாக மேற்கொண்டால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.

இந்த சமயத்தில் நான் ஏற்கனவே கூறியபடி கூட்டு ரோந்து என்பது தேவையற்றதாகும். எனவே இந்த விஷயத்தில் இலங்கை அரசின் கோரிக்கையை பரிசீலிக்க தேவையில்லை என்று கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X