குண்டுவெடிப்பு தொடர்பாக புனேவில் 5 பேர் கைது
மும்பை: அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக புனே நகரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் இவர்களைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இவர்களின் கைது மற்றும் விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கர்நாடகத்தில் 3 சிமி தீவிரவாதிகள் கைது:
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரிலிருந்து வந்த தனிப்படை போலீஸார் இவர்களைக் கைது செய்தனர்.
சமீபத்தில் மங்களூரில் 4 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மங்களூரில் கைதான நான்கு பேரில் இருவரான நெளஷத், அகமத் பாவா ஆகியோர், குல்பர்காவில் கைதான 3 பேருடனும் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குல்பர்கா நகரின் ஜிலானாபாத், மெஹபூப் நகர், மோனினாபூர் ஆகிய இடங்களில் வைத்து 3 பேரையும் போலீஸார் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் உடனடியாக பெங்களூருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த மார்ச் மாதம் அப்துல் ரஹ்மான் என்கிற லஷ்கர் தீவிரவாதி குல்பர்காவில் கைது செய்யப்பட்டார். அவரது கைதின் மூலம் கர்நாடகம் மற்றும் ஆந்திராவின் பல பகுதிகளில் நடக்கவிருந்த குண்டுவெடிப்புச் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதேபோல இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெல்காம், ஹூப்ளி, தானவகரே ஆகிய பகுதிகளிலிருந்து 12க்கும் மேற்பட்ட சிமி தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.