For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்காந்த் கூறுவதை அப்படியே பிரசுரிப்பதா? - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்காந்த் கூறுவதை அப்படியே பிரசுரிப்பதா? - கருணாநிதி

சென்னை: இலங்கை அகதிகளுக்கு செய்து கொடுக்கப்படும் வசதிகள் குறித்து தி.மு.க. அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார் விஜயகாந்த் என முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும் முதல்வர் கனவில் மிதக்கும் விஜய்காந்த் போன்றவர்கள் தரும் குற்றச்சாட்டுகளை ஆராயாமல் அப்படியே பிரசுரிப்பதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவிநாசியில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமைப் பார்க்கப் போனதைப்பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான்; தமிழ்நாட்டில் உள்ள மற்ற அகதிகள் முகாம்களைப் பற்றியும், அதில் வாழ்ந்து வருகின்ற அகதிகளைப்பற்றியும் நான் விசாரித்துத் தெரிந்து கொண்டதைப்போல 'ஆனந்த விகடன்' பேட்டியில் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் பின்னணியைப் பற்றியும், கழக அரசு; அவர்களின் நலன் கருதி வழங்கி வரும் சலுகைகளைப்பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் விஜயகாந்த் ஏதேதோ சொல்லியிருக்கிறார். அரைகுறையாக அவர் சொன்னதை அந்த இதழ் பேட்டி என வெளியிட்டு இருக்கிறது.

1983-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் காரணமாக முதன்முதலில் இலங்கை அகதிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். இந்தியாவுக்கு 4 கட்டங்களில் வந்த இலங்கை அகதிகள் வெவ்வேறு முகாம்களில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

113 முகாம்களிலும் 3 வேளை உணவு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 30.11.2008 அன்றைய நிலவரப்படி; அகதிகள் முகாம்களில் தங்கி உள்ள குடும்பங்கள் மொத்தம் 19,547, அதாவது 73,425 பேர்; முகாம்களைத் தவிர வெளியில் தங்கி உள்ள குடும்பங்கள் மொத்தம் 9,299, அதாவது 25,425 பேர்; தமிழ்நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 113 அகதிகள் முகாம்கள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் இரண்டு இடைத்தங்கல் முகாம்கள் (டிரான்சிட் கேம்ப்ஸ்) ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் கொட்டப்பட்டியிலும் உள்ளன. இடைத்தங்கல் முகாம்களில் அகதிகள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்கும்போது தினமும் மூன்று நேரம் சமைத்த உணவு வழங்கப்படுகிறது. மேலும், தேவையான மருத்துவ பரிசோதனைகளுக்குப்பின் தட்டம்மை நோய்களுக்கான நோய் தடுப்பு மருந்துகள் இலவசமாக கொடுக்கப்படுகின்றன.

இலங்கையில் இருந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் முதலில் தற்காலிக ஏற்பாடாக மண்டபம் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனர். பின்னர் அவர்கள் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் செயல்படும் 113 அரசு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர்.

அடிப்படை வசதி முகாம்களில் உள்ள குடில்களில் அகதிகள் தங்க வைக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு குடிலிலும் 10க்குப் 10 அளவுள்ளது; செங்கல் சுவர்களுடன், சிமெண்ட் தரையும் அமைக்கப்பட்டு; ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்டு; மின்வசதி செய்யப்பட்டுள்ளது.10 வீடுகளுக்கு ஒரு கழிவறை என்ற விகிதத்தில் பொது கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. முகாமில் தெருவிளக்கு வசதி, மின்மோட்டார் வசதியுடன் ஆழ்துளை கிணறுகள் மற்றும் பொது விநியோகக் கடைகள் அகதிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளன.

என்னென்ன சலுகைகள்?:

ஒவ்வொரு முகாமிலும் உள்ள அகதிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியில் சென்று இந்திய அரசின் சட்டத்திற்குட்பட்ட தங்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்து, தங்கள் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வருவாயைப் பெருக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தி.மு.க. ஆட்சி சார்பிலும், மத்திய அரசினை வலியுறுத்தியும் பின்வரும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்படும் நிதி உதவியினை 1.8.2006 முதல் அகதி முகாம் குடும்பத் தலைவருக்கு மாதந்தோறும் 200 ரூபாயிலிருந்து 400 ரூபாயாகவும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் 144 ரூபாயில் இருந்து 288 ரூபாயாகவும், அந்த முகாம்களின் குடும்பத்திலுள்ள முதல் குழந்தைக்கு 90 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், அந்த முகாம்களின் குடும்பத்திலுள்ள மற்ற குழந்தைகளுக்கு 45 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருவதைப் போலவே, அகதிகள் முகாம்களில் வாழும் கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை பிறப்பதற்குமுன் 3 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்தபின் 3 ஆயிரம் ரூபாயும் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

சமையல் பாத்திரங்கள்:

முகாம்களில் உள்ளோருக்கு வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய சமையல் பாத்திரங்கள் வழங்குவதற்கென ஒவ்வொரு குடும்பத்திற்கும் முன்பு வழங்கப்பட்ட 150 ரூபாய் 250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈமச் சடங்குகள் செய்ய முன்னர் வழங்கப்பட்டு வந்த 100 ரூபாய் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகமெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் அகதிகள் முகாம்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

கல்வி வசதி:

முகாம்களில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்கு மட்டும் மின்சாரம் எனும் நிலையை மாற்றி, 24 மணி நேரமும் மின் விநியோகம் செய்யப்படுகிறது. அகதிகள் முகாம்களில் உள்ள மாணவர்கள் 12-ம் வகுப்பு வரை படிக்க அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் கல்வி, நோட்டு புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, முகாம்களில் இருந்து பள்ளிக்கூடம் வரை செல்ல பேருந்து பயணச் சலுகை ஆகியன இலவசமாக வழங்கப்படுகின்றன. 11-ம் வகுப்பில் பயிலும் இலங்கை அகதி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகிறது.

நிதி அதிகரிப்பு:

2004-2005ம் ஆண்டில் அகதிகள் முகாம்களுக்கு மொத்தம் செலவிடப்பட்ட தொகை 28 கோடி ரூபாய் என்பதற்கு மாறாக; 2008-2009ம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டு செலவிடப்படுகிறது.

அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அகதிகள் முகாம்களுக்கு சென்று, அவர்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து அவற்றை உடனடியாக களைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு இப்படி ஏராளமாக சலுகைகளை வழங்கியுள்ள அரசைப் பார்த்து ஒரே ஒரு அகதிகள் முகாமை மட்டும் பார்த்துவிட்டு, ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும்; அரசின் எல்லாக் காரியங்களுக்கும் தானே தூண்டுகோல் என்ற பாணியில் விஜயகாந்த் குறை சொல்லியிருப்பதும், அதை அந்த இதழ் பளபளப்பாகவும், பரபரப்பாகவும் வெளியிட்டு இருப்பதும் எவ்வளவு "விரசம்" நிறைந்த விஷயம் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.

முதல்வர் கனவில் மிதக்கிறார்:

ஒரு கட்சியின் தலைவர் எனப்படுபவர் எதிர்காலத்தில் முதல்வர் என்ற நினைவிலே திளைப்பவர் அளித்துள்ள ஒரு பேட்டி அத்தனையும் உண்மைதானா? அல்லது அடிப்படையற்றதா? என்று அறிந்து கொள்ளும் அவா இருந்திருக்குமேயானால்; அந்த இதழ், விஜயகாந்த் பேட்டியில் சொன்ன விவரங்களைப் பற்றிய உண்மைத் தகவலை அறிந்து கொண்டு வெளியிடுவதற்கு முயற்சியாவது செய்து இருக்க வேண்டாமா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X