For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்யம்: என்ன தான் நடக்கிறது?

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: சத்யம் நிறுவனத்தின் 4 சுயேச்சையான இயக்குநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். இதனால் வரும் ஜனவரி 10ம் தேதி நடக்கும் இயக்குனர் குழு கூட்டத்தில், அந்நிறுவனப் பங்குகள் குறித்த எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக சத்யம் நிறுவனம் அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. முதல் சறுக்கல் மேடாஸ் இணைப்பு விவகாரத்தில் ஆரம்பித்தது.

இந்த நிறுவனம் சத்யம் சேர்மன் ராமலிங்க ராஜூவின் மகனால் நிர்வகிக்கப்படுகிறது. முதலீட்டாளர்களின் அனுமதியின்றி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேடாஸை சத்யத்துடன் இணைக்க முற்பட்டார் ராஜூ. இதற்கு அனைத்து முதலீட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவிக்க, வேறு வழியின்றி பின்வாங்கினார். இதனால் சத்யம் பங்குகள் தடதடவென்று சரிந்தன.

அடுத்த அடி உலக வங்கியிடமிருந்து வந்து விழுந்தது. இந்த வங்கியின் கணக்கு வழக்குகளைத் திருடி விற்றதாக சத்யம் மீது குற்றம் சுமத்தப்பட்டதோடு, 8 ஆண்டுகள் தடை விதித்துவிட்டது உலக வங்கி. நீண்ட நாட்களாக சத்யம் இதை மறைத்து வந்தது. ஆனால் கடந்த வாரம் அதை அம்பலப்படுத்திவிட்டது பாக்ஸ் நியூஸ் நிறுவனம். இது நிறுவனத்தின் நம்பகத் தன்மை மற்றும் இமேஜை காலி செய்துவிட்டது.

இதனால் சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூ பதவி விலகுவார் என்ரும் கூறப்பட்டது.

ஆனால் நடந்ததோ வேறு...

ராஜூவால் நியமிக்கப்பட்ட சுயேச்சை இயக்குநர்கள் 4 பேர் பதவி விலகினார்கள்.

விலகல் ஏன்?:

பங்குச் சந்தை விதிகளின்படி, ஒரு சேர்மனின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பாதிக்குமேல் சுயேச்சை இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

சேர்மன் ராமலிங்க ராஜூ அவருக்கு கீழே இயங்கும் இயக்குநர் குழுவில் 9 பேர் இருந்தனர். 5 பேர் சுயேச்சை இயக்குநர்கள். இவர்களில் மங்களம் சீனிவாசன், ராம்மோகன் ராவ், கிருஷ்ணன் பாலேபு மற்றும் வினோத் தாம் ஆகிய 4 சுயேச்சை இயக்குநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர். மேடாஸ் நிறுவன இணைப்பு விவகாரத்தில் சேர்மன் ராமலிங்க ராஜூவுக்கு ஆதரவாக செயல்பட்டு, தோற்றுப்போனதால் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இயக்குநர்கள் குழு முதலில் சுயேச்சை இயக்குநர்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. இந்தப் பிரச்சினையை விரைவில் சத்யம் நிர்வாகம் தீர்த்துக் கொள்ளும் என்று நம்புவதாக நிறுவனங்களின் உள் விவகாரங்களைக் கவனிக்கும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் நிறுவனத்தில் இப்போது ஏற்பட்டுள்ள மாறுதல்களால், பங்குகள் விலக்கல் (dilution) மற்றும் விற்பனை தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜூ விலகல் இல்லை!:

இன்னொரு பக்கம், ராமலிங்க ராஜூவின் தலைமைக்கும் இப்போது ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. ஒருவேளை அவர் தனது பங்குகளில் ஒரு பகுதியை திரும்பக் கொடுத்துவிட்டாலும் கூட அவரே, தலைமைப் பொறுப்பில் நீடிப்பார் என்றும், முதலீட்டாளர்களும் அதையே விரும்புவதாகவும் இப்போது கூறப்படுகிறது.

10 சதவீத வாக்குரிமை கொண்ட பங்குதாரர்கள் முயன்று, ராமலிங்க ராஜூவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி நடக்கும் பட்சத்தில், பங்குதாரர்கள் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, மெஜாரிட்டியை நிரூபிக்கும் உரிமை ராஜூவுக்கு உள்ளதால், இப்போதைக்கு அந்த மாதிரி முயற்சிகள் எதுவும் நடக்காது என்றே கூறப்படுகிறது.

அல்லது, இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றியும் ராஜூவை வெளியேற்ற முடியும். ஆனால் அனைத்து இயக்குநர்களுமே அவரால் நியமிக்கப்பட்டவர்கள்தான். எனவே அவர்கள் அப்படிச் செய்ய வாய்ப்பும் இல்லை. எனவே இப்போதைக்கு சத்யம் நிறுவன நிர்வாகக் குழுவில் சில பிரச்சினைகள் இருந்தாலும் ராமலிங்க ராஜூவின் பதவிக்கு ஆபத்து இல்லை என்பதே உண்மை!

இதற்கிடையே, மேடாஸ் இணைப்பு விவகாரத்தை மத்திய வர்த்தகத் துறையின் முறைகேடுகள் விசாரிப்புக் குழு (Serious Fraud Investigation Office) கையிலெடுத்துள்ளது.

மேலும் நிறுவனங்கள் பதிவு அலுவலகமும் இந்த விவகாரத்தை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

விருது பறிப்பு?:

கடந்த செப்டம்பர் மாதம், சிறந்த நிர்வாக்த் திறனுக்கான கோல்டன் பீக்காக் குளோபல் விருது இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. சர்வதேச அளவில் சிறந்த நிர்வாகத்துக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது இது. கார்பரேட் நிறுவன நிர்வாகத்துக்கான சர்வதேச கவுன்சில் வழங்கியது.

மேடாஸ் விவகாரத்தில் சத்யம் நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடவு, நம்பிக்கை மோசடி என்ற பெயரில் உலக வங்கி விதித்துள்ள தடை, தற்போது நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை போன்றவற்றைக் கவனித்து வரும் இந்த விருதுக் குழு, தாங்கள் வழங்கிய விருதினை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X