For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி மாணவி சாவில் திருப்பம்-எரித்து கொலை?

By Sridhar L
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் நித்யா என்ற மாணவி எரித்துக் கொல்லப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நித்யாவின் தோழி வசந்தி, காதலருடன் திரும்பி வந்ததால் பரபரப்பு கூடியுள்ளது.

திருச்சி கருமண்டபம் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன்-ஜோதி தம்பதியின் மகள் வசந்தி (20). இவர் பிராட்டியூரில் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 26ம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கண்டோன்மெண்ட் போலீசில் தந்தை சுப்பிரமணியன் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து இறந்து கிடந்த இளம்பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின்னர் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த உடல் பின்னர் தகனம் செய்யப்பட்டது.

வசந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அதே நாளில் திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை தாயனூரைச் சேர்ந்த மல்லிகாவின் மகள் நித்யா(20) மாயமானார். நித்யாவை பல்வேறு இடங்களில் அவரது தாய் மல்லிகா தேடினார். ஆனால் எங்கும் கிடைக்காததால் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகள் மாயமாகி விட்டதாக ஒரு புகார் மனு கொடுத்தார்.

திரும்பி வந்தார் வசந்தி..:

இந் நிலையில் தீக்குளித்து இறந்ததாக கூறப்பட்ட வசந்தி நேற்று முன்தினம் தனது காதலன் வெங்கடேசோடு உயிருடன் திரும்பி வந்தார்.

அவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலெக்சாண்டர் மோகனிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எங்கள் காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆகஸ்டு மாதம் 8ம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம், எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இறந்து போனதாக பெற்றோரால் கூறப்பட்ட வசந்தி தனது காதலனோடு உயிருடன் திரும்பி வந்தது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் வசந்தியின் வீட்டில் உடல் கருகி இறந்து கிடந்த பெண் யார்? அது ஏற்கனவே காணாமல் போனதாக சோமரசம் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நித்யாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இறந்தது நித்யா...:

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் வசந்தியின் வீட்டில் இறந்து கிடந்தது நித்யா தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் உண்மை நிலையை தெரிந்து கொள்வதற்காகவும், வசந்தியின் தந்தை சுப்பிரமணியன், அவரது மகன்களை கண்டோன்மெண்ட் போலீசார் பிடித்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் போலீசாருக்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருவதால், உண்மை நிலையை அறிய எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை முக்கிய சான்றாக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த பெண்ணின் உடலில் தீக்காயம் ஏற்படுவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பே உயிர் பிரிந்து இருக்கலாம் என்றும், உடலில் தலைப் பகுதியில் காயங்களுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடித்துக் கொன்று எரிப்பு?:

இதனால் நித்யா அடித்து கொல்லப்பட்டு அதன் பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் போலீசார் தீவிர புலன் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X