For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமங்கலத்தில் வென்றது அதிமுக தான்-ஜெயலலிதா

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: உண்மையில் திருமங்கலத்தில் வெற்றி பெற்றது நாங்கள்தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆரின் 92வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மலரை அவர் வெளியிட அதை முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா,

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளான இன்று நான் தொண்டர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், நடந்ததை நினைக்காமல் நடக்க வேண்டியதை கவனியுங்கள்.

திருமங்கலம் இடைத் தேர்தல் ஒரு மோசடி. தொண்டர்கள் யாரும் இதற்காக மனதை தளர விடாதீர்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் முழு வெற்றியையும் ஈட்டும் வகையில் கவனம் செலுத்துங்கள். நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் செயல்பட்டால், மக்கள் பணியாற்றினால் எளிதான வெற்றி கிடைக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமிழ்நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு செல்லும் திமுகவை பதவி நீக்கம் செய்ய முடியும். இந்த லட்சியத்தில் இருந்து ஓயக்கூடாது, இதுவே அதிமுகவினருக்கு நான் விடுக்கும் செய்தியாகும்.

திருமங்கலம் இடைத் தேர்தலில் நடந்த முறைகேடுகள் பற்றி நானும், கூட்டணிக் கட்சியினரும் எடுத்துக் கூறியபோது ஆதாரம் கேட்டார்கள். நாங்கள் எதிர்க்கட்சியினர். ஆதாரங்களை அதிகார வர்க்கத்தினரிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் அதிகாரிகள்ஆதாரங்களை தர மறுக்கிறார்கள்.

ஓட்டுப்பதிவு நாளன்று காலை முதல் மாலை 4 மணி வரை 60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. கடைசி 1 மணி நேரத்தில் 30 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. இது சாத்தியமே இல்லை.

இதுபற்றி எங்கள் வேட்பாளர் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 13ம் தேதி திருமங்கலம் தேர்தல் அதிகாரி ராமச்சந்திரனிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எவ்வளவு ஓட்டுக்கள் பதிவானது, எத்தனை சதவீதம் பதிவானது என்று கேட்டுள்ளோம்.

14,15 பொங்கல் பண்டிகை என்பதால் 16ம் தேதி வாருங்கள் என்று வேட்பாளரை திருப்பி அனுப்பினார். 16ம் தேதி சந்திக்கச் சென்றால் பொங்கல் விடுமுறையில் இருந்து இன்னும் யாரும் திரும்பவில்லை. எனவே 19ம் தேதி வாருங்கள் என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்.

அதிகாரிகள் மத்தியில் எந்த அளவுக்கு ஆளும் வர்க்கத்துக்கு ஒத்துழைக்கிறார்கள் என்பது இதிலிருந்தே தெரியும். இந்த ஆதாரங்கள் கிடைத்ததும் தேர்தல் ஆணையத்திடம் விசாரணை கோரி மனு செய்வோம்.

ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு எந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும், வாக்குச் சாவடி அதிகாரி குறித்து வைத்துள்ள வாக்கு எண்ணிக்கையும் ஒத்துப் போகவில்லை. 178 ஓட்டுக்கள் எந்திரத்தில் அதிகமாக இருந்துள்ளது.

கடைசியில் அந்த வாக்குகளை நீக்கிவிட்டு, மொத்த வாக்குகளை அறிவித்திருக்கிறார்கள். வாக்குச் சாவடிக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் முன்பே அவற்றில் உதயசூரியனுக்கு ஓட்டுக்கள் பதிவாகும்படி தில்லு முல்லு செய்திருந்தார்கள்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்கு சாவடிக்கு செல்வதற்கு முன்பே சுமார் 200 வாக்குகள் வரை உதய சூரியன் சின்னத்தில் பதிவு செய்து அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை திமுகவுக்கு செயற்கையான வெற்றியைக் கொடுத்துள்ளது. உண்மையிலேயே வெற்றி பெற்றது அதிமுகதான்.

சுமார் 100 கோடி ரூபாய் வரை திருமங்கலம் தொகுதியில் செலவிட்டதாக சொல்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு ரூ. 7,000 கொடுத்துள்ளனர். இது தவிர செல்போன், மிக்சி, கிரைண்டர் போன்றவையும் கொடுத்துள்ளனர்.

கடைசி நாளில் பழனி பஞ்சாமிர்த டப்பாவில் வைத்து தங்க நாணயம் கொடுத்துள்ளனர். தேர்தல் கமிஷனின் விதிமுறைகள் எதிர்க்கட்சிகளுக்குத்தான். ஆளும் கட்சிக்கு பொருந்துவது இல்லை.

பிரசாரம் ஓய்ந்த அன்றே எதிர்க்கட்சியினரை தொகுதியில் இருந்து வெளி யேற்றினார்கள். ஆனால் ஓட்டுப்பதிவு நாளில் கூட திமுகவினர் போலீஸ் துணையுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர்.

காவல்துறையை வைத்து, ''பணம் வாங்கிட்டீங்க, திமுகவுக்கு ஓட்டுப் போட்டுடுங்க'' என்று ஏழைகளை மிரட்டியுள்ளனர்.
உதயசூரியனுக்கு வாக்களிக்காவிட்டால் குடிசைகள் எரியும், கத்தி வீச்சு பறக்கும், கொலைகள் விழும் என எச்சரித்திருக்கிறார்கள். அமைதியாக வாழ வேண்டும் என்றால் பத்திரமாக நீங்கள் வாழ வேண்டும் என்றால் உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு அடையாள அட்டை இல்லா விட்டால் வேறு ஆவணங்கள் கொண்டு வந்தால், அது பற்றி வாக்குச் சாவடி அதிகாரிகள் குறித்து வைக்க வேண்டும். ஆனால் அவ்வாறு குறித்து வைக்கவில்லை. ஆயிரக்கணக்கில் திமுகவினர் வந்து வாக்களித்துள்ளனர் என்றார்.

கேள்வி: வாக்குப்பதிவு விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் நீங்கள் கேட்கவில்லையா?

ஜெயலலிதா: கேட்டோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

கேள்வி: அப்படியென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பீர்களா?

பதில்: எங்கள் வேட்பாளரை திருமங்கலம் தேர்தல் அதிகாரி 19ம் தேதி வரச் சொல்லியிருக்கிறார். அப்போது இந்த விவரங்களை அவர் தருகிறாரா என்பதைப் பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

கேள்வி: 2 முறை முதல்வராக இருந்த நீங்கள் இந்திய தேர்தல் கமிஷனே தேவையில்லை என்பது போல பேசியிருக்கிறீர்களே?

பதில்: மத்திய தேர்தல் கமிஷனை நான் எதுவும் சொல்லவில்லை. தமிழ் நாட்டில் கூட தலைமைத் தேர்தல் அதிகாரி நேர்மையானவர்தான். ஆனால் அவர் சொல்வதை தேர்தலை நடத்துகிற அதிகாரிகளும், காவல்துறையினரும் கேட்பதில்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்கும் என்று நாங்கள் சொன்னால் அதை இந்தியத் தேர்தல் கமிஷனும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

கேள்வி: வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்று தேர்தல் கமிஷன் விளக்கம் தந்துள்ளதே?

பதில்: கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கூட இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தவறுகள் நடந்து, மீண்டும் அவர்கள் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டு வந்துள்ளனர். எனவே நவீன தொழில்நுட்பம் வளரும்போது தவறு செய்ய வாய்ப்புகள் உள்ளன. எனவேதான் அதிமுக சார்பில் மீண்டும் வாக்குச் சீட்டு வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X