For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளி மேம்பாடு: மத்திய அரசு தயார்- மாநில அரசு கொர்..!

By Sridhar L
Google Oneindia Tamil News

Bharathiar
மதுரை: மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை படைத்த மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியை மேம்படுத்த மத்திய அரசு தயாராக இருந்தும், அதுதொடர்பான கருத்துருவை அனுப்பாமல் தமிழக அரசு மெளனம் சாதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரதியாரையும், மதுரை மாவட்டத்தையும் புறக்கணிக்கும் போக்கே இது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு மாநில சுற்றுலா இயக்குநர் அலுவலகத்திலிருந்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

அதில், தங்களது மாவட்டத்தில் உள்ள இந்திய சுதந்திரப் போராட்ட இடங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துரு தேவை எனவும், மாவட்டத்திற்கு தலா இரண்டு இடங்கள் குறித்த திட்ட கருத்துருவை அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டிருந்தது.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை, மகாகவி பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப்பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மதுரை வந்தபோது தங்கியிருந்த மேலமாசி வீதியில் உள்ள வீடு (தற்போதைய காதி பவன் அலுவலகம்) ஆகியவை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சேதுபதி பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார் பாரதியார். அவர் பணியாற்றியதற்கான ஆவணங்கள், இன்றும் பள்ளிக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பாரதியார் பணியாற்றியதை நினைவுகூரும் வகையில் 1966-ம் ஆண்டு சேதுபதி பள்ளி வளாகத்தில் அவரது மார்பளவு சிலை அமைக்கப்பட்டது. அச்சிலையை, அன்றைய முதல்வர் எம். பக்தவத்சலம் திறந்துவைத்தார்.

பாரதியார் பணியாற்றிய பெருமைமிகு சேதுபதி பள்ளி, இன்று மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பாரதியார் பணியாற்றிய பள்ளி என்பதால் தினமும் 50 பேராவது இப்பள்ளிக்கு வந்து பாரதியாரின் சிலையை வணங்கிவிட்டுச் செல்கின்றனர்.

பாரதியார் பணியாற்றியதை நினைவுகூரும் வகையில், இந்திய தபால் துறையும் சேதுபதி மேல்நிலைப் பள்ளி படம் பொறித்த அஞ்சல் உறையை பாரதியார் படத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு வெளியிட்டது.

இந்தப் பின்னணியில், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வந்த சுற்றறிக்கை, சேதுபதி பள்ளி மற்றும் காதி பவன் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவைக்கூடம் (ஆடிட்டோரியம்), மின் விளக்கு வசதிகள், புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படி பள்ளிக்கு சுமார் ரூ. 60 லட்சம் வரை நிதி கிடைக்கும் எனவும் சுற்றுலாத் துறை அலுவலர்கள் கூறினர்.

இப்படி மாவட்டந்தோறும் பெறப்பட்ட கருத்துருக்கள், மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைக்கு சில மாதங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட முக்கியத்துவம் வாய்ந்த இரு இடங்கள் குறித்த கருத்துருக்கள் மட்டும் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தியாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான நகரம் மதுரை. தமிழகத்தின் 2வது பெரும் நகரம். கலாச்சார தலைநகராகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும் கருதப்படுவது மதுரை.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையும் மதுரைக்கு உண்டு. பழம் பெருமை வாய்ந்த மதுரையில், மகாகவியும், மகாத்மா காந்தியும் தடம் பதித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இரு இடங்களையும் மேம்படுத்துவது குறித்த கருத்துருக்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு ஏன் அனுப்பாமல் நிறுத்தி வைத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் பாரதியார் பணியாற்றிய பழம்பெருமை மிக்க பள்ளியையும், மகாத்மா காந்தி தங்கிய இடத்தையும் மேம்படுத்த மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படாதது ஆச்சரியமாக உள்ளது எனவும் தியாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட சுற்றுலா அலுவலர் தர்மராஜிடம் கேட்டபோது, மதுரை மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் கருத்துரு கடந்த ஆண்டே (2008-ல்) சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் அதுகுறித்த தகவல் வரவில்லை என்றார்.

மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மதுரை மாவட்டத்திலிருந்து மாநில அரசின் மூலம் தங்களுக்கு இதுவரை எந்தவிதக் கருத்துருவும் வரவில்லை என்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தையும், பாரதியாரையும் தமிழக அரசு புறக்கணிக்கப்பதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்று தியாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X