For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. ஆட்சிக் காலத்தில்தான் இலங்கைக்கு ராணுவ உதவி - கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான் இலங்கைக்கு பெருமளவில் ராணுவ உதவிகள் அனுப்பப்பட்டன, சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இலங்கைக்கு மத்திய அரசு ஆயுதங்கள வழங்கியபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார் ஜெயலலிதா.

இதற்குப் பதிலளித்து கருணாநிதி வெளியி்ட்டுள்ள அறிக்கை:

கடுமையான முதுகுவலி, விலாப்புற வலிகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் என்னிடம் முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்கட்சித் தலைவருமான அம்மையார் ஜெயலலிதா சில கேள்விகளைக் கேட்டு, அதனை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

அவர் கேட்டுள்ள கேள்விகளும், அவற்றுக்கு என் பதில்களும், விளக்கங்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ் மண்ணில் ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா? அப்படியானால் ராஜீவ்காந்தியின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, மைனாரிட்டி அரசின் முதல்-அமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக இல்லையா?, மனவுறுத்தலாக இல்லையா?.

பதில்:- 1991-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில், மே 21-ந் தேதி ராஜீவ்காந்தி கொலை நடந்தபோது அமைக்கப்பட்டிருந்த தேர்தல் கூட்டணியின் தலைவராக ராஜீவ்காந்தி இருந்தார்.

காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தான் சென்னைக்கு விமானம் மூலம் அவர் வந்தார்.

எங்கே போனார் ஜெயலலிதா?

அப்போது அந்த கூட்டணி கட்சிகளின் தலைவரும், இந்திய பிரதமருமான ராஜீவ்காந்தியை வரவேற்க அந்த கூட்டணியிலே உள்ள கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. சார்பில் யாருமே சென்னை விமான நிலையத்திற்குப் போகவில்லை என்பது உண்மையா?, பொய்யா?

உண்மை என்றால் "ராஜீவின் படுகொலை'' முன்கூட்டியே அ.தி.மு.க.வினருக்கு தெரிந்திருக்கிறது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது? இது பற்றிய சந்தேகத்தை சுப்பிரமணியம் சுவாமி அப்போதே எழுப்பியது உண்டா, இல்லையா?

மைனாரிட்டி அரசின் முதல்-அமைச்சராக பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது எனக்கு வெட்கமாக இல்லையா என்று ஜெயலலிதா கேட்டுள்ளார். "மைனாரிட்டி'' சமூக மக்களின் முன்னேற்றத்தையும் கருத்திலே கொண்டு ஓர் அரசு நடத்துவதில் வெட்கம் என்ன வந்து கிடக்கிறது? மாறாக "மைனாரிட்டி'' மக்களுக்குத் தொண்டாற்றுவதை பெருமையாக கருதுபவன் நான்.

எங்கே போனது ஜெ.வுக்கு வெட்கம்?

தேர்தல் ஆணையத்தாலேயே பொதுத் தேர்தலில் போட்டியிட தகுதியற்று, பின்னர் ஆளுநரின் ஒத்துழைப்போடு முதல்-அமைச்சராக இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக பதவியேற்று, பிறகு நீதிமன்றம்; "இவர் பதவியேற்றது செல்லாது'' என்று தீர்ப்பு கொடுத்தபோது இவருக்கு வெட்கம் வரவில்லையா? மனவுறுத்தல் ஏற்படவில்லையா? இளந்தலைவர் ராஜீவ்காந்தியின் துணைவியார் சோனியா காந்தியை "வெளிநாட்டுக்காரி'' என்று விமர்சனம் செய்துவிட்டு, பிறகு அவருடன் தோழமை கொள்வதற்காக டெல்லியில் தேநீர் விருந்து வைத்தபோது இவரது வெட்கம் எங்கே போயிற்று? என்ன இருந்தாலும் வெட்கம், மானம் பற்றி அவர் பேசக் கூடாது; அது ஏன் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியுமே!

கேள்வி:- இலங்கை தமிழர்களுக்கு எதிராக இன்றளவும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த போது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார். தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கின்றன. தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த மத்திய அமைச்சருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதா? ஏன் அவர்கள் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை? தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய பதவியை ஏன் அவர்கள் ராஜினாமா செய்யவில்லை?

பதில்:- மத்திய அரசின் சார்பில் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் அனுப்புவதைப் பற்றி மாநில அரசுகளை கலந்துகொண்டோ அல்லது மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்ற சிறு விஷயம் கூட பத்தாண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த ஒருவருக்கு தெரியாமல் இருப்பது வேதனை தான்.

பாதுகாப்பு போன்ற துறைகளின் நடவடிக்கைகள் வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய நியாயமில்லை. இன்னும் சொல்லப் போனால், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி ஆனாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆனாலும் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்பியதாகத் தெரிவிக்கவில்லை; மாறாக அதை மறுத்தும் இருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா என்னை பார்த்து என்ன செய்து கொண்டிருந்தேன் என்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தான் இலங்கைக்கு மத்திய அரசு மூலம் ராணுவ உதவிகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அப்போது இவர் முதல்-அமைச்சராக இருந்து கொண்டு என்ன செய்து கொண்டிருந்தார் என்று நான் திருப்பி கேட்க மாட்டேன். காரணம் ராணுவ உதவி எல்லாம் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டு செய்யப்படுவதில்லை என்பதை நான் அறிவேன்.

கேள்வி:- இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு சிறப்பு பயிற்சி அளித்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார் என்ற "ஜெ'' கேள்விக்கு என்ன பதில்?

பதில்:- 2-வது கேள்விக்கு அளித்துள்ள பதில்தான் இந்த கேள்விக்கும்! நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று திரும்பத் திரும்ப ஜெயலலிதா கேட்கிறார். கோடநாடு எஸ்டேட்டில் மாதக்கணக்கில் ஓய்வு, சிறுதாவூர் பங்களாவிலே வாரக்கணக்கில் ஓய்வு, பையானூர் மாளிகையிலே நாட்கணக்கில் ஓய்வு, இதற்கிடையே ஐதராபாத் திராட்சை தோட்டத்திலே ஓய்வு என்று நான் எப்போதும் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை.

நான் உழைக்கப் பிறந்த பிறவி - அவர் உல்லாசி

நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்று கேட்பதற்கு அவருக்கு எவ்வித அருகதையும் எப்போதும் கிடையாது. ஏனென்றால் நான் உழைக்க பிறந்த பிறவி. அவர் ஓய்வெடுக்கப் பிறந்த உல்லாசி?

கேள்வி:- காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து, அதாவது தனிநாடு கோரிக்கை குறித்து, கருணாநிதி மற்றும் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி

பதில்:- தி.மு.க.வின் பிரிவினை கொள்கை குறித்து பேரறிஞர் அண்ணா தன் கைப்படவே "எண்ணித் துணிக கருமம்'' என்ற தலைப்பில் நூலாகவே எழுதி வைத்துள்ளார். ஜெயலலிதாவிற்கு அதையெல்லாம் படித்திட நேரம் இருந்திருக்காது.

மேலும், தி.மு.க.வின் கொள்கைகளை ஜெயலலிதா தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், கழக சட்ட திட்டப் புத்தகத்தில் விதி 2 மற்றும் விதி 3 ஆகியவற்றை படித்துப் பார்க்கட்டும்.

விதி 2: "குறிக்கோள்'' என்ற தலைப்பில் "இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் முழு நம்பிக்கையும், பற்றுறுதியும் கொண்டு சமதர்மம், சமயச் சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய லட்சியங்களில் முழு ஈடுபாடும், பற்றும் கொண்டு இந்திய நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை கட்டிக் காப்பது என்பது தி.மு.க.வின் குறிக்கோள் ஆகும்.''

விதி 3: "கோட்பாடு'' என்ற தலைப்பில் "அறிஞர் அண்ணா அறிவுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு அடிப்படையில், அரசியலில் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து, ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்; பகுத்தறிவு அடிப்படையில் மறுமலர்ச்சிக்கான சீர்திருத்தப் பணி ஆற்றிடவும்; பொருளாதார துறையில் வறுமையை வென்று, சமதர்ம அடிப்படையில் எல்லோரும் நல்வாழ்வு பெற வழிவகை கண்டிடவும்;

பிறமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமல் அந்தந்த மாநில மொழிகளை வளர்த்திடவும் அவைகளுக்கான உரிய இடத்தை பெற்றுத்தரவும்; மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் உருவாகிடவும் தொண்டாற்றுவது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X