For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கஸாப் உயிருக்கு ஐஎஸ்ஐ-தாவூத்-லஷ்கர் குறி

By Sridhar L
Google Oneindia Tamil News

Kasab
மும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியிருக்கும் முகம்மது அமீர் கஸாப்பின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவனைக் கொல்ல ஐ.எஸ்.ஐ, லஷ்கர் இ தொய்பா, தாவூத் இப்ராகிம் ஆகியோர் கூட்டு திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த நவம்பர் 26ம் தேதியன்று பிடிபட்டான் கஸாப். அன்று முதல் கஸாப்பை தங்களது கஸ்டடியில் வைத்துள்ளனர் மும்பை குற்றப் பிரிவு போலீஸார்.

அவனை ரகசிய இடத்தில் போலீஸார் வைத்திருக்கின்றனர். ஆனால் அது ஆர்தர் ரோடு சிறைச்சாலை என்று கூறப்படுகிறது. அங்குள்ள அன்டா செல் எனப்படும் முட்டை வடிவ அறையில்தான் கஸாப்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கஸாப்பைக் கொல்ல பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ள காவல் வெளியாகியுள்ளது.

இந்திய உளவு அமைப்பான ராவுக்கு இத்தகவல் கிடைத்துள்ளது.

விசாரணைக்காக வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஆர்தர் சாலை சிறைக்கு கஸாப் கொண்டு வரப்படும்போது அவனைக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

தாவூத் இப்ராகிமிடம் கஸாப்பைக் கொல்லும் உத்தரவை ஐ.எஸ்.ஐ. பிறப்பித்துள்ளது. இதையடுத்து தனது கூட்டாளியான சோட்டா ஷகீலிடம் இப்பொறுப்பை ஒப்படைத்துள்ளானாம் இப்ராகிம்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தற்கொலைப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்களாம். லஷ்கர் இ தொய்பா அமைப்பும் இந்த கூட்டுக் கொலைத் திட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் 29-ந் தேதி குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகளின் பேச்சை ஒட்டுக் கேட்ட மத்திய புலனாய்வுத்துறையினர் இதை கண்டுபிடித்தனர். இது பற்றி உடனடியாக மத்திய உள்துறைக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் மத்திய அரசு மராட்டிய போலீசை உஷார் படுத்தியது.

கஸாப் தற்போது சர்வதேச அளவில் முக்கியமான குற்றவாளியாக மாறியுள்ளான். எனவே அவனைப் பாதுகாப்பது மிக மிக முக்கியம் என போலீஸார் கருதுகிறார்கள்.

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க விரைவில் ஆர்தர் சாலை சிறைச்சாலைக்குள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.

கஸாப்பை சிறையை விட்டு வெளியே கொண்டு வராமல் உள்ளேயே வழக்கு விசாரணையை நடத்த வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

இதுவரை கஸாப் ஒரு முறை கூட காவல் நீட்டிப்புக்காக கோர்ட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை. ரகசிய இடத்திற்கு நீதிபதியை வரவழைத்தே காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கஸாப் பாதுகாப்பு குறித்து ஆர்தர் சாலை சிறைக் கண்காணிப்பாளர் ஸ்வாதி சாத்தே கூறுகையில், சிறையில் மொத்தம் 16 அன்டா செல்கள் உள்ளன. இங்கு மிகப் பயங்கரமான, மிக மிக முக்கியமான கைதிகளை மட்டுமே அடைப்போம். இங்கு அடைக்கப்பட்டுள்ளவர்களின் நடமாட்டம், செயல்பாடுகள் 24 மணி நேரமும் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறைச்சாலையில் தாவூத் இப்ராகிம் கும்பல், சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த பலரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

இந்தக் கும்பல்களுக்கிடையே அவ்வப்போது சண்டையும் நடப்பது வழக்கம் என்பதால் கஸாப்புக்கு இந்த சிறை பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகம் போலீஸாரிடம் உள்ளது.

தற்போது கஸாப்பைக் கொல்ல பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலைத் தொடர்ந்து கஸாப்பின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவனை ஆர்தர் சாலை சிறையிலிருந்து மாற்றவும் போலீஸார் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X